Vinayagar Chaturthi : விநாயகருக்கு விருப்பமான பால் கொழுக்கட்டை! இந்த சதுர்த்திக்கு செய்து அசத்துங்கள்!
Vinayagar Chaturthi : விநாயகருக்கு விருப்பமான பால் கொழுக்கட்டை, இந்த சதுர்த்திக்கு செய்து அசத்துங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி அல்லது கணேஷ் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை விநாயகருக்கு கொண்டாடப்படுகிறது. விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை களைபவராகக் கருதப்படுகிறார். செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்படும். வீதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவை சதுர்த்தி முடிந்து 3ம் நாள் அல்லது 5ம் நாள் விமரிசையாக ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பக்தர்கள் இவற்றை வெகுவிமரிசையாக செய்து மகிழ்வார்கள் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை. விநாயகருக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதை பல்வேறு வகைகளில் செய்கிறார். இங்கு விநாயகருக்குப்பிடித்த பால்கொழுக்கட்டை செய்வது எப்படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறையை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
விநாயகருக்குப்பிடித்த பால் கொழுக்கட்டை அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய்ப்பொடி, தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் பயன்டுத்தி செய்யப்டுகிறது. அரிசி மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி பால் கொழுக்கட்டை செய்யலாம். அரிசி மாவுக்கு பதில் ராகி மாவையும் பயன்படுத்தலாம். இன்னும் ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை கிடைக்கும். கோதுமை மாவிலும் இதை செய்ய முடியும்.
பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
வெல்லம் – ஒரு கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்துக்கொள்ளவேண்டும். தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்துக்கொள்ளவேண்டும்.
மாவில் சூடான தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும். சூடான தண்ணீர் ஊற்றி பிசைவதால், கையில் சுட்டுவிடாமல் பார்த்து பிசையவேண்டும்.
முதலில் ஒரு கரண்டியில் கிளறிவிட்டு பின்னர் ஆறஆற கையில் பிசையவேண்டும்.
மாவை தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும். சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும். உருண்டைகளை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அது நன்றாக கொதித்தவுடன், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்க்கவேண்டும். அவை நன்றாக வெந்து வரவேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின்தான் உருண்டைகளை சேர்க்கவேண்டும். கொதிக்காமல் சேர்ததால், உருண்டைகள் கரைந்து மாவாகிவிடும்.
எனவே கவனம் தேவை. அந்த மாவில் சிறிது மட்டும் கரைந்து பால் கொழுக்கட்டைக்கு கெட்டித்தன்மையைத்தரும்.
அடுத்த ஒரு பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து வெல்லத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவேண்டும். அதையும் கொதிக்கும் பால் கொழுக்கட்டையில் வடிகட்டி சேர்க்கவேண்டும்.
அடுத்து கெட்டி தேங்காய்ப்பால் சேர்க்கவேண்டும். கடைசியில் ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கவேண்டும். சூப்பர் சுவையில் விநாயகருக்கு விருப்பமான பால்கொழுக்கட்டை தயார்.
நாளை நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு இந்த பால்கொழுக்கட்டை செய்து, விநாயகருக்குப் படைத்து, வீட்டில் அனைவரும் சாப்பிட்டு மகிழுங்கள். விநாயகர் அருள் கிட்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்