தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chennai Floods மூழ்கும் மக்கள்! பெருநகரின் வெள்ளத்துக்கு யார் பொறுப்பு? – ஓர் அலசல்!

Chennai Floods மூழ்கும் மக்கள்! பெருநகரின் வெள்ளத்துக்கு யார் பொறுப்பு? – ஓர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Dec 16, 2023 12:00 PM IST

Chennai Floods : இந்த வகை குறைபாடான திட்டங்களால் வெள்ளம் வரு முன்னரே மாம்பலம், ஓட்டேரி நுல்லா கால்வாய்கள் நிரம்பி வழிந்து, வெள்ளத்தின்போது தி.நகர்.,புலியன்தோப்பு பகுதிகள் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்தன.

Chennai Floods மூழ்கும் மக்கள்! பெருநகரின் வெள்ளத்துக்கு யார் பொறுப்பு? – ஓர் அலசல்!
Chennai Floods மூழ்கும் மக்கள்! பெருநகரின் வெள்ளத்துக்கு யார் பொறுப்பு? – ஓர் அலசல்! (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) எனும் ஒரே மையம் தான் சென்னை மாஸ்டர் பிளான் வகுப்பதிலும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை, குடியிருப்பு மற்றம் வணிக நோக்கத்திற்காக, "மறுபிரிவு" செய்யும் அமைப்பாக உள்ளது. வெள்ளத்தடுப்பை இந்நிறுவனம் முறையாக மேற்கொண்டிருக்க வேண்டும்.

Town and country planning Act சட்டத்தின்படி சென்னை மாஸ்டர் பிளானில் மாற்றங்கள் கொண்டுவர முடியும் என இருந்தாலும், தனிப்பட்ட சர்வே எண்களுக்கு அது பொருந்தாது என்பதே விதி.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அச்சட்டத்தை தவறாக புரிந்துகொண்டு, தனிப்பட்ட சர்வே எண்களை மறுபிரிவாக்கம் செய்து, பல அடுக்குமாடு குடியிருப்புகளுக்கு தவறாக அனுமதி கொடுத்ததன் விளைவே 2023 சென்னை பெருவெள்ளத்தில் அவை மூழ்க நேரிட்டது.

CMDA, சென்னை மாஸ்டர் பிளானில் ஏற்கனவே குடியிருப்பு பகுதிகளாக ஒதுக்கப்பட்ட நிலங்களை முழுமையாக பயன்படுத்திய பின்னரே பிற நிலங்களை மறுபிரிவு (Re-classification) செய்வது குறித்து யோசிக்க வேண்டும். அதுவரை மறுபிரிவு குறித்து சிந்திப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என ஓய்வுபெற்ற CMDA இயக்குநர் ரகுநாத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

CMDA தனக்கான பணியை முழுமையாக செய்யாமல் உள்ளது. சில சமயங்களில் மட்டும், மறுபிரிவு குறித்து பத்திரிக்கையில் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டாலும், எத்தனை பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்/எந்த காரணங்களுக்காக என்ற விவரம் எதையும் அது வெளியிடாமல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நிபுணர்கள், 2015, சென்னை பெருவெள்ளத்திற்கு,"ஏரித் திட்டங்களின்" கீழ், நீர்நிலைகளை சுருங்கச் செய்து, வெள்ள பாதிப்பை அதிகப்படுத்திய பெருமை CMDAவைச் சேரும் என கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

சென்னையின் கட்டிடப் பரப்பு (Chennai Metropolitan Area-CMA) 1979ல் 90.88 சதுர கி.மீ.யாகஇருந்தது, 2016ல் 541.14 சதுர கி.மீ.ஆக உயர்ந்தது.

அதே கால கட்டத்தில், நீர் நிலைகளின் பரப்பு 100.98 சதுர கி.மீ.ல் இருந்து 91.31 சதுர கிமீ ஆகக் குறைந்தது.

மேலும், சென்னையின் பசுமைப்பரப்பு அதே கால கட்டத்தில் 548.53 சதுர கிமீல் இருந்து 442.43 சதுர கிமீஆகக் குறைந்தது. CMDA தான் இதற்கு முக்கிய காரணம்.

CMDA வின் தவறான "மறு பிரிவு"திட்டத்தால்தான் நீர்நிலைகள் சென்னையில் குறையத் தொடங்கின. மறுபிரிவு செய்தபோது ஒளிவுமறைவற்ற தன்மையை CMDA கடைபிடிக்கவில்லை.

குறிப்பாக, 2015ல் பெருவெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்ட இடங்களிலும், CMDA 2022ல் நந்தம்பாக்கத்தில் நீர்வரத்துப் பகுதியில் (Flood plains) ,6 ஏக்கர் பகுதியை மறுபிரிவு செய்து குடியிருப்பு மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு, வெள்ளத் தடுப்பு பணியை முற்றிலும் மறந்துபோனது.

ஓய்வுபெற்ற சென்னை முனிசிபல் நிர்வாக அதிகாரி, சிவசாமி கூறுகையில், "CMDA முதலில் சென்னை மெட்ரோபாலிடன் பகுதியில் (CMA) உள்ள நீர்வரத்து பகுதிகள், ஈர நிலங்கள், நீர் பிடிப்பு பகுதி, நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள கூடுதல் பாதுகாப்பு பகுதி (Buffer zone) போன்றவற்றை 3ம் சென்னை மாஸ்டர் பிளானில், அறிவிப்பாணை (Notify) வெளியிட வேண்டும் என்றும், அந்த பகுதிகளில் எந்த கட்டிடங்களும் வர முழுமையாக தடை விதிக்க வேண்டும்" என்றும் தெளிவாகக் கூறுகிறார்.

WRD -

சென்னையின் முக்கிய ஆறுகளான அடையார், கூவம் ஆறுகளை மீட்டெடுத்து, வெள்ளத்தின்போது அவை அதிகப்படியான நீரைக்கொண்டு செல்லும் போக்கை வலுப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோடிக் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டாலும், அவை பெருமளவு பலனளிக்கவில்லை.

6,000 ஆக்கிரமிப்புகள் (அடையாற்றில்4,700 ஆக்கிரமிப்புகள்) இன்னமும் அகற்றப்படவில்லை.

ஆறுகளை மீட்டெடுக்கும் திட்டம் குறித்தான செயல் திட்டத்தை தமிழக நீர்வளத்துறை தன்வசம் கொண்டிருந்தும், அவற்றை செயல்படுத்தாமல் இருந்ததால் மிக்ஜாம் புயலின் தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியவில்லை.

ஆக்கிரமிப்புகள் சட்டப்படி அகற்றப்படாமல் போனதால் சைதாபேட்டை திடீர் நகரில் 441 குடியிருப்புகள் அடையாறு வெள்ளத்தால் மூழ்கியது. தி.நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் நீரின் போக்கு தடுக்கப்பட்டு அவைகளும் வெள்ளக்காடாயின.

அடையாறு, கூவம் நதிக்கரையில் உள்ள 20 சேரிகள் ஒவ்வொரு சென்னை வெள்ளத்தின்போதும் பெருமளவு பாதிக்கப்பட்டும், நீர்வளத்துறை 788 கோடிகள் ஆறுகளை மீட்டெடுக்க பயன்படுத்திய பின்னரும் பெருமளவு பலன் கிடைக்கவில்லை.

2022ல் கிருஷ்ணா நீர்ப்பிடிப்பு பகுதியில், புழல் ஏரியில் 250 ஆக்கிரமிப்புகள் இருந்தும், அவற்றை அகற்ற நீர்வளத்துறை அக்கறை காட்டாததால் ஆக்கிரமிப்புகள் மேலும் பெருகி வருகின்றன.

"முதலில் ஆறுகளின் எல்லை (Boundaries) தெளிவாக குறிக்கப்பட வேண்டும். வெள்ளத்தின்போது நீர் எந்த அளவு பாதிப்பை எங்கெல்லாம் ஏற்படுத்தியது எனத் தெளிவாக ஆராயப்பட வேண்டும். அதன்பின் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் குறிக்கப்பட்டு 15 ஆண்டு மீட்புத்திட்டம் (Rehabilitation) உருவாக்கப்பட வேண்டும். வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்க கூடுதல் பாதுகாப்பு பகுதி (Flood buffers) தெளிவாக குறிக்கப்பட வேண்டும். ஆனால் அவை நடப்பதில்லை" என ராஜ்பகத் எனும் நிபுணர் கூறுகிறார்.

நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர் அசோகன் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு சர்வே மட்டுமே மேற்கொள்வதாகக் கூறுகிறார்.

ஆறுகள் மற்றும் கால்வாய்களை பொறுத்தமட்டில், அவற்றின் முந்தைய (Original) நீளம், அகலம், ஆழம் போன்ற பதிவுகள் இல்லை. அவற்றின் எல்லை குறித்து தெளிவான பதிவுகள் இல்லை. ஆக்கிரமிப்புகள் இருந்தும், சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் இருந்தும் அவற்றை நீக்க முடியவில்லை. அவற்றை சுத்தப்படுத்தும் அல்லது தூர்வாரப்படும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. அவற்றை நீர்வளத்துறை மக்கள் நலன் கருதி மேற்கொள்ள முன்வருமா?

GCC -

பெருநகர சென்னை கார்ப்பரேஷனோ, நீர் வளத்துறையோ கால்வாய்களின் முழுக்கொள்ளளவை மீட்டெடுக்கும் செயல் திட்டங்கள் குறித்தான கொள்கை முடிவுகளை வகுக்கவில்லை. ஆழப்படுத்த தூர்வாரப்படும்போது கிடைக்கும் மணலை எங்கே கொட்ட வேண்டும் என்ற திட்டமில்லாமல், மேம்போக்காக தூர்வாரி கரைகளில் மட்டும் கொட்டும் பணியை மட்டுமே அவை செய்து வருகின்றன.

இந்த வகை குறைபாடான திட்டங்களால் வெள்ளம் வரு முன்னரே மாம்பலம், ஓட்டேரி நுல்லா கால்வாய்கள் நிரம்பி வழிந்து, வெள்ளத்தின்போது தி.நகர்.,புலியன்தோப்பு பகுதிகள் தற்போது பெரும் பாதிப்பை சந்தித்தன.

சென்னை கார்ப்பரேஷன் 33 கால்வாய்களையும், நீர்வளத்துறை 16 கால்வாய்களையும் பராமரித்து வந்தாலும், அவை முறையாக பராமரிக்காமல் போனதாலேயே பாதிப்புகள் அதிகமாயின.

GCC முதன்மைப் பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில்,"கால்வாய்களை மீட்டெடுக்க, தூர்வாரப்பட்ட மண்ணை உரிய இடத்திற்கு கொண்டு செல்ல, அங்கு பாதிப்பில்லாமல் கொட்ட சிறப்பு நிதிகள் எவையும் ஒதுக்கப்படுவதில்லை என்பதால், ஒப்பந்தக்காரர்கள் மேம்போக்காக தூர்வாரும் பணியை மேற்கொண்டு, கரைகளிலேயே அவற்றை கொட்டுவது வாடிக்கையாகிவிட்டது என்றும், தனி நிதி ஒதுக்கப்படுவது முக்கியம்" என்றும் தெரிவித்துள்ளார்.

முழுமையாகத் தூர்வாறினால் சாக்கடை கழிவுகள் எளிதில் கலக்கும் சூழல் உள்ளது என்றும், சமீபத்திய மெட்ரோ நீர் ஆய்வில் மாம்பலம், நந்தனம், AG தேவாலய கால்வாய்களில் மலம் அதிகம் கலந்து அவை அடையாற்றை அடைகின்றது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய மாசை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கண்டறியப்பட்டு, சட்டவிரோத கழிவுநீர் பாதிப்பை ஏற்படுத்தும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகள் தேவை என டார்வின் அண்ணாதுரை போன்ற சூழலியில் பொறியாளர்கள் வற்புறுத்துகின்றனர். முதலில் இருந்த கால்வாய்களின் நீளம் அல்லது அகலம் அல்லது ஆழம் மீட்டெடுக்கப் பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். எனவே அரசு இவை குறித்து சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்