Murunga Keerai Kulambu : அரைத்துவிட்ட முருங்கைக்கீரை பருப்புக்குழம்பு; இரும்பும், புரதமும் கிடைக்கும்! இதோ செய்முறை!
Murunga Keerai Kulambu : அரைத்துவிட்ட முருங்கைக்கீரை பருப்புக்குழம்பு, இரும்பும், புரதமும் கிடைக்கும். இதோ செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
முருங்கைக்கீரை உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, நோய்களைத் தடுக்கிறது. இந்த முருங்கைக்கீரை இந்திய உணவு வகைகளில் பரவலாகப்பயன்படுத்தப்படுகிறது. இதை வதக்கி சாப்பிடுகிறார்கள் அல்லது சூப், ரசம் அல்லது பச்சையான அரைத்து எடுத்துக்கொள்கிறார்கள். முருங்கைக்கீரையில் உங்கள் உடலுக்கு தேவையான எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது உங்கள் உடலில் எண்ணற்ற உறுப்புகள் நன்றாக இயங்க உதவுகிறது. முருங்கைகீரையில் வைட்டமின்கள் ஏ, பி1 (தியாமின்) பி2 (ரிபோஃப்ளாவின்) பி3 (நியாசின்), வைட்டமின் சி (ஆஸ்கார்பிக் அமிலம்) ஆகியவை உள்ளன. இதில் உள்ள மினரல்கள் தவிர மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், சிங்க், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கைக்கீரையில் 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைக்கிறது. செல் சேதத்தை குறைத்து, இதயநோய்கள் மற்றும் நீரிழிவு ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன.
முருங்கைக்கீரையின் நன்மைகள்
சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.
நரம்பு மண்டல நோய்களைத் தடுக்கிறது.
ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.
மூட்டு வலியை குணப்படுத்துகிறது.
புற்றுநோயை சரியாக்குகிறது.
சிறுநீரகக் கற்களை கரைக்கிறது.
வீக்கத்தைப்போக்குகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
ரத்தம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் குணப்படுத்துகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த முருங்கைக்கீரையில் எளிதாக செய்துவிடலாம் அரைத்துவிட்ட முருங்கைக்கீரை சாம்பார்.
தேவையான பொருட்கள்
பருப்பு – 100 கிராம்
முருங்கைக்கீரை – 2 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 5 பல்
துருவிய தேங்காய் – ஒரு கப்
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
குக்கரில் அல்லது பாத்திரத்தில் பருப்பு சேர்த்து 2 டம்ளர் தண்ணீர், பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் இவையெல்லாம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து அந்த விழுதையும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்ததுக்கொள்ளவேண்டும். பருப்பு நன்றாக வெந்தவுடன், கீரையை சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். இதை குழம்பில் சேர்த்தால் சூப்பர் சுவையில் அரைத்துவிட்ட முருங்கைக்கீரை குழம்பு தயார்.
இதை நீங்கள் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இது வழக்கமாக புளி சேர்த்து செய்யும் சாம்பார் கிடையாது என்பதால், இதற்கு சாம்பாரைவிட வித்யாசமான சுவையைத் தரும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்