Mor Kulambu : பட்டுன்னு செய்துவிடலாம் புரதம் நிறைந்த மோர் குழம்பு, பன்னீர், வெள்ளரி சேர்த்து வித்யாசமாக இருக்கும்!
Mor Kulambu : பட்டுன்னு செய்துவிடலாம் புரதம் நிறைந்த மோர் குழம்பு, பன்னீர், வெள்ளரி சேர்த்து வித்யாசமாக இருக்கும். வழக்கமான மோர் குழம்பு போல் இருக்காது.
மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று. புளிப்பு சுவையைத் தரும். மோர் குழம்பு தயிரில் இருந்து செய்யப்படும் ஒன்றாகும். இது மசாலா அரைத்து செய்வது பாரம்பரிய முறையில் செய்யப்படுவதாகும். மசாலாக்கள் இல்லாமல் செய்வது மோர் குழம்பு அல்லது மோர் கறி என்று அழைக்கப்படுகிறது. எப்படி செய்தாலும் மோர் குழம்பில் தாளிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மோர் குழம்பு சாதத்தில் சேர்த்து உண்ணப்படுகிறது. இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், காய்கறிகள், வறுவல், பொரியல் என்று பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்தும் சுவையாக இருக்கும். பெரும்பாலும் மோர் குழம்புகள் விருந்துகளில் பரிமாறப்படுகிறது. இதை காய்கறிகளுடனும், காய்கறிகள் இல்லாமலும் சாப்பிடலாம். சில நிமிடங்களில் இதை செய்து முடித்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 100 கிராம்
தயிர் – முக்கால் கப்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெள்ளரி பிஞ்சு – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – அரை இன்ச்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 1
வரமிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
சீரகத்தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
பன்னீர், தயிர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மிக்ஸி ஜாரில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
தாளிப்புதான் இதற்கு முக்கியம். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும். அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அந்த தயிர் கலவையில் சேர்க்க வேண்டும். இதில் மல்லித்தழை தூவி இறக்கவேண்டும்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் மட்டுமே போதும்.
இந்த மோர் குழம்பை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதும் எளிது. இது பன்னீர் சேர்த்து செய்யப்படுவதால் இது வித்யாசமான சுவையைக் கொண்ட மோர் குழம்பு ஆகும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்க நினைப்பீர்கள்.
பன்னீரின் நன்மைகள்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்களை ஹெச்.டி. தமிழ் தினமும் தொகுத்து வழங்கிவருகிறது. அவற்றை முழுவதும் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்