தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Medicine Production : மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெறாத இந்தியா – சீனாவிடம் கையேந்தும் அவலம்!

Medicine Production : மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெறாத இந்தியா – சீனாவிடம் கையேந்தும் அவலம்!

Priyadarshini R HT Tamil
Dec 11, 2023 11:10 AM IST

Medicine Production : வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்புக் குடிநீர் உதவுவதும், ரத்த தட்டணுக்களை (Platelets) அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு உதவுவதும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Medicine Production : மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெறாத இந்தியா – சீனாவிடம் கையேந்தும் அவலம்!
Medicine Production : மருந்து உற்பத்தியில் தன்னிறைவு பெறாத இந்தியா – சீனாவிடம் கையேந்தும் அவலம்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நிதியாண்டில் 2021-22 சீனாவில் இருந்து, அடிப்படை மருந்து மூலக்கூறுகளின் இறக்குமதி - 2,64,582 மெட்ரிக் டன், 23,273 கோடி ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 2022-23 - 3,00,120 மெட்ரிக் டன் மருந்து, 25,551 கோடி ரூபாய் செலவில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. நாடு மருந்து மற்றும் மாத்திரை உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல், சீனாவை அதிகம் நம்பியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இந்தியா, 70-80 சதவீதம் அடிப்படை மூலக்கூறு மருந்துகளை சீனாவிடம் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. பாரசிட்டமால் (காய்ச்சல்), இபூபுருபஃன் (வலி), அமாக்சிசிலின், அசித்ரோமைசின் (கிருமிக்கொல்லிகள்), ரானிடிடின் (வயிற்றுப்புண்) போன்ற அடிப்படை மருந்து உற்பத்திக்கான மூலக்கூறு மருந்துகளை நாம் சீனாவிடம் தான் இறக்குமதி செய்கிறோம்.

ஒரு காலத்தில் அடிப்படை மூலக்கூறு மருந்து உற்பத்திக்குத் தேவையான "நொதித்தல்" தொழில்நுட்பம் இந்தியாவில் நன்கு வளர்ந்திருந்தது. தற்போதும் தொழில்நுட்ப அளவில் இந்தியா பின்தங்கி இருக்கவில்லை.

சீனாவின் ஆதிக்கம் இத்துறையில் தொடரக் காரணங்கள் -

சீனா மருந்து மூலக்கூறு தொழில்நுட்பத் தொழிலுக்கு சலுகைகள்/ஆதரவுகள் பெருமளவு அளித்து வருகிறது. (இந்தியா அந்த அளவிற்கு ஆதரவு அளிக்கவில்லை)

நொதித்தல் தொழில்நுட்பத்திற்குத் தேவையான மின்சார செலவு சீனாவில் குறைவாக உள்ளது. (இந்தியாவில் இது அதிகம்.)

1995ல் இந்தியா மருந்து பொருட்களின் விலை மதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்ததால், மருந்து உற்பத்தி நிறுவனங்களின் லாபம் குறைந்ததால், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்ய முன்வராமல் பின்வாங்கின.

அடிப்படை மருந்து மூலக்கூற்றின் விலை, இந்திய விலையைக் காட்டிலும் 20-30 சதவீதம் சீனாவில் குறைவாக இருப்பதால், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சீனாவிடமிருந்தே அவற்றை வாங்குகின்றன.

சுகாதாரத்தைக் காக்க மருந்தின் பங்கும் இருக்க, அதை குறைந்த விலையில் அளிப்பது அரசின் கடமை மற்றும் அதை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என்பதால் மருந்து அடிப்படை மூலக்கூறுகளை வளர்ந்து வரும் தேவைக்கேற்ப, பெருமளவு உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு வழங்க (உலக நாடுகளின் 40 சதவீதம் அடிப்படை மருந்து மூலக்கூறுகளின் தேவையை சீனா அளித்து வருகிறது) சீன அரசு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. (அத்தகைய ஆதரவை இந்தியா வழங்கவில்லை)

மருந்து விஷயத்தில் 85 சதவீத அளவிலும், மருத்துவ உபகரணங்கள் விஷயத்தில் 80 சதவீத அளவிலும் இந்தியா சீனாவை நம்பியுள்ளது.

2022-23 நிதியாண்டில் இந்தியா, 37,853 கோடி மொத்த மற்றும் இடை மருந்துகளை (Bulk drugs and intermediaries) ஏற்றுமதி செய்து லாபமடைந்துள்ளது. ஆனால் அடிப்படை மருந்து மூலக்கூறு உற்பத்தியில் இந்தியா பின்தங்கியுள்ளது.

தமிழகத்தில், சென்னையில் செய்த ஆய்வில் (CTRI 2020/05/025215), கபசுரக் குடிநீர் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்புக் குடிநீர் உதவுவதும், ரத்த தட்டணுக்களை (Platelets) அதிகரிக்க பப்பாளி இலைச்சாறு உதவுவதும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூரிலே கிடைக்கும் துளசி மற்றும் இஞ்சி கஷாயங்கள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த உதவும்போது, உள்நாட்டு பொருட்களைக் கொண்டு மருந்து மற்றும் மாத்திரைகளை பெருமளவு உருவாக்க இந்தியா ஊக்கமளித்தால் மட்டுமே, மருந்து உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற முடியும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தியில் சுயசார்பை நாடு எட்ட முடியும் என்று மருத்துவர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்