வாயில் உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் மணத்தக்காளி வத்தல் குழம்பு! ஆரோக்கியமும் நிறைந்தது!
வாயில் உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல் – 50 கிராம்
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவு
(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
மல்லித் தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒன்றரை ஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அதில் தக்காளி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல போஸ்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து மணத்தக்காளி வத்தல் மற்றும் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து புளி கரைத்த தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். நன்றாக கெட்டியானவுடன் இறக்கினால், சூப்பர் சுவையான வத்தல் குழம்பு தயார். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வத்தல் அல்லது பருப்புத்துவையல் சுவையானது.
மற்றொரு ரெசிபி
இந்த வத்தல் குழம்பு செய்ய நீங்கள் இன்ஸ்டன்ட் பொடியையும் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். அது எப்படி என்று பாருங்கள்.
வத்தக்குழம்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்
வர மல்லி – ஒரு கப்
கடலை பருப்பு – அரை கப்
துவரம் பருப்பு – கால் கப்
வர மிளகாய் – 20
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
புளி – ஒரு கப்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கொத்து
சுண்டைக்காய் வத்தல் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு கப் வர மல்லியை கடாயில் சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அதையும் எடுத்து வைத்துவிட்டு, வர மிளகாயை சேர்த்து சூடாகும் வரை வறுத்து எடுத்து வைத்துவிடவேண்டும்.
வெந்தயம், மிளகு இரண்டையும் சேர்த்து வாசம் வரும்வரை எடுத்து தனியாக வைத்து விடவேண்டும்.
பின்னர் புளியையும் வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறியவுடன், காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை, சுண்டைக்காய் வத்தல் மற்றும் கடுகு ஆகிய அனைத்தையும் நன்றாக வறுத்து, இந்த பொடியில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வத்தல் குழம்பு செய்யும்போது இந்தப்பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து செய்தால் தெருவே மணக்கும், சுவையான வத்தல் குழம்பு தயார். இது கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் வத்தல் குழம்புபோல் சுவையாக இருக்கும்.
இந்த வத்தல் குழம்பை சூடான சாதத்தில், நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதற்கு வடகம், சுட்ட அப்பளம் செம்ம காம்போ. எனினும் பாசிபருப்பு சேர்த்து செய்த காயும் நன்றாக இருக்கும். வெள்ளரிக்காய் கூட்டு, சேர்த்துக்கொள்ள சுவை அள்ளும்.
பொதுவாக காரமாக இருக்கும் வத்தல் குழம்பை சிலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தப்பொடியை சேர்த்து செய்யும்போது, வத்தல் குழம்பையும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்