Gulf of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gulf Of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?

Gulf of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?

Priyadarshini R HT Tamil
Mar 23, 2024 03:51 PM IST

புவிவெப்பமடைதலும், மனிதர்களால் ஏற்படும் பிற பாதிப்புகளாலும், பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.

Gulf of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?
Gulf of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில், மீன் வளம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம், ஊடுறுவும் கடல்பாசியை (காப்பாபைகஸ் அல்வாரெசி) இந்திய அரசும், தமிழக மீன்வளத்துறையும் ஊக்குவித்ததால், அவை பவளப்பாறைகளை பெருமளவு அழித்துவிட்டது. இதனால் மீன்வளம் அந்த பகுதியில் குறைந்தது 2012ல் பேட்டர்சன் என்பவர் செய்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.

2022ல் CAG அறிக்கையில் 2 சதவீதம் ஊடுறுவும் கடல்பாசி மட்டுமே அகற்றப்பட்டுள்ளது தெளிவாக இருக்கும்போது, அதன் தற்போதைய பாதிப்புகள் என்ன? 98 சதவீதம் அகற்றப்படாவிடில், ஊடுறுவும் கடல்பாசி மேலும் பரவி பவளப்பாறைகளுக்கு கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

மன்னார் வளைகுடா பகுதியில், ஆட்கள் வசிக்காத 21 தீவுகளில் பவளப்பாறைகள் அதிகம் இருப்பதால், மீன்வளம் பெருகி மீனவர்களின் வாழ்வாதாரத்தை அவை உறுதிசெய்கின்றன.

1986ல் தமிழக அரசு 21 தீவுகளையும், அருகில் உள்ள ஆழம் குறைந்த பகுதிகளையும், Gulf Of Mannar Marine National Park (GOMMNP) என அறிவித்தது.

பவளப்பாறைகள் மீன்வளத்தை பெருக்கவது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடல் அரிப்பை, வெள்ள பாதிப்பை குறைக்கும். கார்பனையும் அவை உள்வாங்கி, புவிவெப்பமடைதல் பாதிப்பையும் குறைக்கும்.

ஒரு எக்டேர் பவளப்பாறைகள் ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் டாலர் பாதுகாப்பு மதிப்புள்ளது என்றும், வெப்பமண்டல காடுகளைக் காட்டிலும், அவை 70 மடங்கு கூடுதல் பயனை கொடுக்கும் என்பதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Inter-Government Panel for Climate Change தனது அறிக்கையில், 2100ல் வெப்பம் 1.5°Cக்கு அதிகமாக உயர்ந்தால் 70-90 சதவீதம் பவளப்பாறைகள் அழியும் என்றும், 2°Cக்கு மேல் உயர்ந்தால் பவளப்பாறைகள் முற்றிலும் அழியும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

புவிவெப்பமடைதலும், மனிதர்களால் ஏற்படும் பிற பாதிப்புகளாலும், பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.

சமீபத்தில் "Coral reefs of Gulf of Mannar: Decadal Changes in status and management Paradigms" எனும் சகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கையில், 2005ல் 37 சதவீதம் பரப்பில் இருந்த உயிருடன் இருந்த பவளப்பாறைகள், 2021ல் 27.3 சதவீதம் பரப்பாக குறைந்துள்ளது. 2005ல் 11,060 எக்டேரில் இருந்த பவளப்பாறைகள், 2021ல் 6,628 எக்டேர் பரப்பாக குறைந்துள்ளது.

தற்போது பவளப்பாறைகள் இருந்த பல இடங்களில், கடல்பாசி அவற்றின் மீது படிந்து, 2,631 எக்டேர் பரப்பு பவளப்பாறைகள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகள் வெளிறிப்போயும் (Coral bleaching), கடல்நீரில் அமிலத்தன்மை அதிகமானதால் ஏற்பட்ட பாதிப்புகளும், பவளப்பாறைகளின் அழிவிற்கு காரணமாக அமைந்தன.

2005-2021 இடைப்பட்ட காலத்தில், முதலில் பவளப்பாறைகளின் பரப்பு அதிகரித்து 2009ல், அது 42.9 சதவீதம் பரப்பு என அதிகமாக இருந்தாலும், 2010ல் வெப்ப உயர்வு காரணமாக, அதன் பரப்பு 33.2 சதவீதம் என குறைந்தது. பின்னர், அது படிப்படியாக உயர்ந்து 2015ல் அது 38.9 சதவீதம் பரப்பு என அதிகரித்தது.

2016ல் ஏற்பட்ட வெப்ப உயர்வு காரணமாக, அவை பாதிக்கப்பட்டு, அதன்பரப்பு 22.7 சதவீதம் என சுருங்கியது. அதிலிருந்து 2021 வரை, அதன் பரப்பு, 27.3 சதவீதம் என அதிகரித்துள்ளது.

2010,16ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப உயர்வின் காரணமாக, மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த 21 தீவுகளிலும் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு எற்பட்டது.

2005-21 இடைப்பட்ட காலத்தில் பவளப்பாறைகள் பெரும் அழிவை சந்தித்தன. 21 தீவுகளில்,15 தீவுகளில் பவளப்பாறைகள் பேரழிவை சந்தித்தன.

சிங்ளே தீவில் 72 சதவீதம் பவளப்பாறைகள் அழிந்து, மிக மோசமான பாதிப்பை சந்தித்தன.

குரூசடை, புள்ளிவாசல் தீவுகளிலும் 55 சதவீதம் பவளப்பாறைகள், சுகந்தி தேவதாசன் அறிக்கைப்படி அழிந்துள்ளன.

2024ம் ஆண்டு அறிக்கையின்படி, மன்னார் வளைகுடா மேற்பரப்பு வெப்பம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து 33°Cஐ எளிதில் எட்ட முடியும் என்பதால், பவளப்பாறைகள் மேலும் அழியும் வாய்ப்பு இந்த ஆண்டில் உள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் NOAA நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை இந்த ஆண்டு கோடையில் எதிர்பார்த்து விடுத்துள்ளது.

பல்வேறு மீன்பிடி நடவடிக்கைகள் (Mechanised trawling, push net operation, shore seine, trap fishing, surface-supplied diving, spear fishing, purse seine (சுருக்கு வலை), bottom settling gill nets, ornamental fish collection (அலங்கார மீன்கள் பிடிப்பு), seaweed collection) போன்றவை பவளப்பாறைகளை பாதித்தாலும்,

முக்கியமாக,

புவிவெப்பமடைதல் (கடல் நீரின் வெப்பம் அதிகரித்தல்),

பவளப்பாறைகள் நோயால் பாதிக்கப்படுதல்,

கடல்பாசிகளின் அபரீதமான வளர்ச்சி,

ஊடுறுவும் கப்பாபைகஸ் அல்வாரெசி கடல்பாசியின் தாக்கம்

போன்றவை பவளப்பாறைகளை அதிகம் அழிக்கின்றன.

பருவநிலை மாற்றம் அதிகமாகும்போது, மேற்சொன்ன பாதிப்புகளும் அதிகமாகிறது.

தமிழக அரசு வான் தீவுகளில் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி, அவற்றை பயன்படுத்தியதால், 2005ல் 33.1 சதவீதம் பரப்பில் இருந்த பவளப்பாறைகள், தற்போது 45.7 சதவீதம் பரப்பு என அதிகமானதால், 2005ல் கரியாச்சலி தீவில் 2005ல் 20.85 எக்டேர் பரப்பில் இருந்த பவளப்பாறைகள் 2017ல் 5.97 எக்டேர் பரப்பாக குறைந்ததால், அங்கும் வான் தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கும் பணியை தமிழக அரசின் "Coastal Restoration Mission" திட்டத்தின் கீழ் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு முயற்சிகள் மேற்கொள்ளாமல் மௌனமாக இருந்தால், 2036ல் இத்தீவு முழுமையாக நீருக்கு அடியில் சென்றுவிடும்.

தற்போதைய பருவநிலை மாற்றத்தின் காரணமாக,"Tamilnadu Coral Reef Conservation and Management Policy"ன் கீழ் பவளப்பாறைகளை காக்க தமிழக அரசு திட்டங்கள் தீட்ட வேண்டும் என்றும், ராமேஸ்வரம்-கன்னியாகுமரி இடைப்பட்ட பாதுகாக்கப்பட்ட கடல் பூங்கா தவிர்த்து, ஆழமான கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகள் குறித்து ஆய்வு, வரைபடம் தயாரித்து, அவற்றை பாதுகாக்கவும், தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை சுகந்தி தேவதாசன் மீன்வள ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பேட்டர்சன் விடுத்துள்ளார்.

மீனவர்களுக்கு மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை Micro-Credit மூலம் உருவாக்கும் பணியை (பவளப்பாறைகளை பார்க்க கண்ணாடியால் அடிப்பாகம் உள்ள படகுகளை தயாரித்தல், அலையாத்தி காடுகள் படகு சவாரி, தீவுகளுக்கு படகில் செல்லுதல், டால்பின் பார்க்க செல்லும் சவாரி) செய்து வருவதாக, Gulf of Mannar Bio-Sphere Reserveன் இயக்குநர். ஜெகதீஷ் பாகன் தெரிவித்துள்ளார்.

(இவருக்கு 2023ல் Michel Batisse Award UNESCOவால் மன்னார் வளைகுடாவை காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு வழங்கப்பட்டது)

ஆனால் 2005 முதல் தற்போது வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஊடுறுவும் கடல்பாசி காப்பாபைகஸ் அல்வாரெசி பரவி பவளப்பாறைகளுக்கு பெரும் பாதிப்பை எற்படுத்தியது. மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகளை காத்து, மீன்வளத்தை காப்பது மட்டுமே ராமேஸ்வரம் மீனவர்கள்-இலங்கை கடற்படை பிரச்னைக்கு ஓரளவு தீர்வாக அமையும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி. 

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.