Coral Reef : பவளப்பாறைகளை அழிக்கும் பாசியை வளர்த்து கடல் வளத்தை குறைத்ததற்காகவா யுனெஸ்கோ விருது?
Coral Reef : மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பவளப்பாறைகளை அழிக்கும் கடற்பாசியை வளர்த்து கடல் வளத்தை குறைத்த நடவடிக்கை எடுத்ததற்காகவாக யுனெஸ்கோ விருது வழங்குகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் புகழேந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் பல்லுயிர் பெருக்கத்திற்கான நடவடிக்கைகள் எடுத்ததற்கு ராமநாதபுரம் வன அலுவலர் ஜகதீஷ்.எஸ்.பாகனுக்கு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக முதல்வரும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதே மன்னார் வளைகுடா பகுதியில் தான் ஊடுறுவும் கடல் பாசியை (காப்பாபைகஸ் அல்வாரெஸி) வளர்த்தது. தமிழக வனத்துறையும், மத்திய அரசு நிறுவனமும் இணைந்து, ஊடுறுவும் கடல்பாசியின் அபாயங்களை அறியாமல் அந்த பகுதியில் வளர்த்ததால், அங்கு வளர்த்த இடத்திலிருந்து 60 கி.மீ. வரை பரவி (6 தீவுகளில் பவளப்பாறைகளை பெருமளவு அழித்து) ஏறக்குறைய 2.8 சதுர.கி.மீ. பரப்பிற்கு பவளப்பாறைகளை பெருமளவு அழித்ததால், அந்த பகுதியில் மீன்வளம் குறைந்து (2012ம் ஆண்டு எட்வர்ட் மற்றும் பலர் செய்த ஆய்வில் பவளப்பாறைகளை நம்பி வாழும் மீன் இனங்களின் வளம் மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது) பல்லுயிர் பெருக்கத்திற்கு பெரும் பாதிப்பு எற்பட்டுள்ளது.
ஊடுறுவும் கடல்பாசியின் பாதிப்பை அறிந்த அரசு 2005ம் ஆண்டு அதை மன்னார் வளைகுடா பகுதியில் வளர்க்க தடை விதித்தும், மாவட்ட வனத்துறையினர் முறையாக அதை கண்காணிக்காமல் விட்டதால், சட்ட விரோதமாக ஊடுறுவும் கடல்பாசி மன்னார் வளைகுடா பகுதியில் வளர்க்கப்பட்டது. தமிழக வனத்துறை அதிகாரிகள் இதை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை.