Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ்! தால் தோக்லி – சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ்! தால் தோக்லி – சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும்!

Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ்! தால் தோக்லி – சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 18, 2024 05:57 AM IST

Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ். தால் மக்னி கேள்விப்பட்டிருப்பீர்கள் தால் தோக்லி தெரியுமா? சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும். செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதோ ரெசிபி!

Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ்! தால் தோக்லி – சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும்!
Dal Dhokli : குஜராத் ஸ்பெஷல் சைட் டிஷ்! தால் தோக்லி – சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாகக் கிடைக்கும்! (food viva)

பருப்பு வேகவைக்க தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – அரை கப்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

வேர்க்கடலை – ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

நெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

பச்சை மிளகாய் – 2

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – ஒரு கொத்து

தக்காளி – 2

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – ஒரு ஸ்பூன்

வெல்லம் – ஒரு சிறிய கட்டி

தோக்லி செய்ய தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – அரை ஸ்பூன்

சீரகப் பொடி – அரை ஸ்பூன்

ஓமம் – அரை ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

பருப்பு வேகவைக்க

துவரம் பருப்பை கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் அதை குக்கரில் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை சேர்த்து நன்றாக கலந்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவைக்கவேண்டும்.

உங்களுக்கு தேவைப்பட்டால் பருப்பில் சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு சிலர் பருப்பு வேக வைக்கும்போது சீரகம் சேர்த்துக்கொள்வார்கள். வேகவைத்த பருப்பை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு பொரிந்தவுடன், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்த பருப்பையும் சேர்த்து போதிய அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவேண்டும். கடைசியாக வெல்லம் சேர்க்கவேண்டும்.

தோக்லி செய்வது எப்படி?

ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர், எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

10 நிமிடங்கள் மாவை ஊறவைத்து சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் தேய்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். மாவை பீட்சா கட்டர் அல்லது கத்தியால் சிறிய சதுரங்களாக வெட்டிக்கொள்ளவேண்டும்.

இப்போது பருப்பை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி, கெட்டியாக இருந்தால் அதில் தண்ணீர் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள தோக்லிகளை அதில் சேர்க்கவேண்டும்.

பின்னர் மூடி வைத்து சிறிதுநேரம் வேகவைத்தால், தோக்லிகள் நன்றாக வெந்திருக்கும்.

இப்போது பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சூப்பர் சுவையில் அசத்தும் தால் தோக்லி ரெடி. பரிமாறும் முன் சுவைக்காக சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் சுவை அசத்தும்.

வட இந்தியாவின், குறிப்பாக குஜராத் மற்றும் ராஜஸ்தானின் புகழ்பெற்ற இந்த உணவை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழவும்.