பீன்ஸ் பொடி சாதம்; அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் சுவையில் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
பீன்ஸ் பொடி சாதம், அள்ளி அள்ளி சாப்பிடத் தூண்டும் சுவையில் செய்வது எப்படி? இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி செய்வது என்று பாருங்கள்.
பீன்ஸ் பொடி சாதம் செய்ய முதலில் ஒரு பொடியை அரைத்துக்கொள்ளவேண்டும். இந்த பொடி செய்ய தேவையான பொருட்கள் வர மல்லி, பூண்டு, தேங்காய், கடலை, சீரகம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் ஆகியவை ஆகும். இதை வைத்து முதலில் பொடியை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் பீன்ஸ் பொடி சாதம் செய்ய துவங்கவேண்டும். இந்த பொடியை செய்வதும் எளிது, ஏனெனில் இதை வறுத்து அரைக்கத் தேவையில்லை. நேரடியாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். தேங்காய் அளவாக சேர்த்தால் போதும். இதற்கு தொட்டுக்கொள்ளவும் நீங்கள் தனியாக எதுவும் செய்யவேண்டிய தேவையும் இல்லை. அந்த சாதத்திலே காயும் உள்ளது.
குழந்தைகளுக்கு லன்ச் பேக் செய்ய ஒரு முட்டையை ஆம்லேட் போட்டு இதனுடன் கொடுத்துவிட்டால் போதும். இந்த பீன்ஸ் பொடி சாதத்தை எப்படி செய்வது என்று பாருங்கள். இந்தப்பொடியை நீங்கள் அதிகம் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தினமும் பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், கொத்தவரங்காய், அவரக்காய் என காய்கறிகளைப் பயன்படுத்தி விதவிதமான பொடி சாதங்களை செய்துகொடுக்கலாம். காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை வழிக்குக் கொண்டுவரும் வழிகளுள் இதுவும் ஒன்று.
தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
தேங்காய் – சிறிதளவு
பூண்டு – 5 பல்
சீரகம் – கால் ஸ்பூன்
கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சீரகம் – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
வடித்த சாதம் – ஒரு கப்
பீன்ஸ் – கால் கிலோ
செய்முறை
ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் வரமல்லி, தேங்காய், பூண்டு, கடலை, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைத்துக்கொள்ளவேண்டும். சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தண்ணீர் ஊற்றி, தேவவையான அளவு உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள ஸ்பெஷல் பொடியை சேர்த்து, தண்ணீர் வற்றி காய் நன்றாக வெந்தவுடன், அதில், வடித்த சாதத்தை கொட்டி, கிளறி பரிமாறவேண்டும். இதில் சாதத்தைக்கொட்டாமல் இந்த பீன்ஸை தனி சைட் டிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.
இதற்கு தொட்டுக்கொள்ள கூட்டு, பொரியல், அவியல், வறுவல் என எதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் இதிலே காயும் இருப்பதால், உங்களுக்கு தனியாக காயும் தேவைப்படாது. இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்கத் தூண்டும் சுவை கொண்டதாக இந்த பீன்ஸ் சாதம் இருக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை ருசித்து பாருங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்