Arachuvita Sambar : தினமும் பல்வேறு வழிகளில் செய்து பார்த்தாலும் சாம்பாரில் சுவையில்லையா? இதோ புது வழி!
Arachuvita Sambar : தினமும் பல்வேறு வழிகளில் செய்து பார்த்தாலும் சாம்பாரில் சுவையில்லையா? இதோ இப்படி ஒரு புதிய முறையில் முயற்சித்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
சாம்பார் என்றாலே நமக்கு மிகவும் பிடித்த ஒன்றுதான். இதை இட்லி, தோசை, சப்பாத்தி என டிபஃன் வகைகளுக்கும், சாதத்துக்கும் ஏற்றது சாம்பார். ஆனால் இந்த சாம்பாரை நாம் சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். சாம்பார் பொடி சேர்த்து சாம்பார் செய்வதைவிட அரைச்சு விட்ட சாம்பார் செய்யும்போது சாம்பார் மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பருப்பை வேகவைப்பது எப்படி?
துவரம் பருப்பு – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கட்டிப்பெருங்காயம் – 1 சிறிய உருண்டை
விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்
மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 10 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்)
தேங்காய் துருவல் – அரை கப்
பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
முருங்கை காய் – 2 (சிறிய நீளமாக நறுக்கியது)
புளி தண்ணீர் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 2 ஸ்பூன்
மல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
ஒரு குக்கரில், கழுவிய துவரம் பருப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு, அதில் தோவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு, பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமல்லி சேர்த்து சிறிது நேரம் வறுக்கவேண்டும். பின்னர் அதில் வர மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவேண்டும். அடுத்து பெருங்காய தூள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவேண்டும்.
பின்னர் மிக்ஸிஜாரில் சேர்த்து தண்ணீர் இன்றி அரைத்து, பின்னர் தண்ணீர் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் நெய் சேர்த்து உருகியதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர், வரமிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முருங்கை காய் சேர்த்து 5 நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து அரைத்த மசாலா, புளி தண்ணீர் என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கலந்துவிட்டு, கொதிக்கவிடவேண்டும். வேகவைத்த பருப்பு, தண்ணீர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
கடைசியில் வெல்லம், மல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவேண்டும். சுவையான அரைச்சுவிட்ட சாம்பார் தயார். இதை நாம் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.
அரைச்சுவிட்ட சாம்பார் பொடிகள் சேர்த்து செய்யப்படும் சாம்பாரைவிட சுவை நிறைந்ததாக இருக்கும். இது தென்னிந்திய உணவு. இது மசாலாக்களை அரைத்து செய்வதால், அரைச்சு விட்ட சாம்பார் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மசாலாவில், மல்லி விதைகள், சீரகம், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படுவதால், இந்த சாம்பார் திக்காக இருக்கும். பருப்பு மற்றும் காய்கறிகளை வேகவைத்து, இந்த மசாலாவையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுவையான சாம்பாரை தயாரிக்க வேண்டும். இந்த அரைச்சு விட்ட சாம்பார், சாம்பார் பிரியரகளின் முதல் தேர்வு.
டாபிக்ஸ்