இசை நிகழ்ச்சி நடத்தனும்.. அரசு ஹோட்டலை விலை கேட்ட விக்னேஷ் சிவன்! ஷாக்கான அமைச்சர் - என்ன நடந்தது?
அரசாங்கத்துக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சரிடம் உரையாடல் நடத்தியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருந்து வருகிறார்கள். தினமும் இவர்களை பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வருகிறார்கள்.
இதையடுத்து லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காக புதுச்சேரியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஹோட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டு அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.
அமைச்சரிடம் விலை பேசிய விக்னேஷ் சிவன்
புதுச்சேரி மாநிலத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சொகுசு காரில் வந்துள்ளார். அங்கு சட்டப்பேரவை வளாகத்துக்குள் சென்று, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாரயணனை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலை விலை பேசியுள்ளாராம். இதை கேட்ட அமைச்சர் அதிர்ச்சி அடைந்தததோடு, சுதாரித்து "அது அரசு சொத்து" என கூறியுள்ளார்.
தொடர்ந்து விக்னேஷ் சிவன் ஒப்பந்த அடிப்படையில் அந்த ஹோட்டலை வாடகைக்கு தருவீர்களா? என கேட்டுள்ளார். இதற்கு, புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் சீகல்ஸ் ஹோட்டல் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே ஒப்பந்த அடிப்படையில் வழங்க முடியாத என அமைச்சர் கூறியதாக தெரிகிறது.
இசை நிகழ்ச்சி
பின்னர், புதுச்சேரியில் பல்வேறு கடற்கரை பகுதிகளில் இருக்கும் இடங்கள் தனியார் வசம் உள்ளன. அதில் ஏதாவது ஒன்று கிடைக்குமா? என விக்னேஷ் சிவன் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2017இல் டெண்டர் கோரப்பட்டு ஏலத்தின் அடிப்படையில் கடற்கரை பகுதிகளில் உள்ள இடங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது எதுவும் செய்ய முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகும் அமைச்சரை விடாத விக்னேஷ் சிவன், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்த எதாவது இடம் கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி துறைமுகம் வளாத்தில் பொழுதுபோக்கு மையம் ஒன்று கட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்க்கலாம் எனவும், இங்கு நிகழ்ச்சி நடத்த அரசு நிர்ணயித்த கட்டணத்துடன், ஜிஎஸ்டி செலுத்தினால் மட்டும் போதும் எனவும் தெரிவித்தார். அத்துடன் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து இசை நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு விக்னேஷ் சிவன் சம்மதம் தெரிவித்ததுடன், துறைமுக வளாகத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு மையத்தையும் பார்வையிட்டுள்ளார். எனவே விரைவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தரப்பில் இருந்து புதிய இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் ஏதேனும் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது
முன்னதாக, அமைச்சரிடம் விக்னேஷ் சிவா அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசி விவகாரம் பலர் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
விக்னேஷ் சிவன் புதிய படம்
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்ஷன் ரொமான்டிக் காமெடி பாணியில் உருவாகி வரும் படத்தை அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
டாபிக்ஸ்