HBD SJ Surya: அஜித்தை இம்ப்ரெஸ் செய்த வாலி கதை.. இறைவி கொடுத்த பிரேக்.. எஸ்.ஜே. சூர்யா நடிப்பு அரக்கன் ஆன கதை!
HBD SJ Surya: அஜித்தை இம்ப்ரெஸ் செய்த வாலி கதை மற்றும் இறைவி கொடுத்த பிரேக் என எஸ்.ஜே. சூர்யா நடிப்பு அரக்கன் ஆன கதை பற்றி அறிவோம்.

HBD SJ Surya: தமிழ் சினிமாவில் கதை எழுதி, திரைக்கதை - வசனம் அமைத்து, இசையமைத்து, இயக்குநர் ஆகி, இசையமைத்து, நடிகராகி எனப் பல்வேறு அவதாரங்களை வெற்றிகரமாக கை கொண்டிருப்பவர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா. நடிப்பு அரக்கன் எனப் புகழப்படும், எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாழ்க்கை சாதாரணமாக அமையவில்லை. அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த எஸ்.ஜே.சூர்யா?:
தமிழ்நாட்டின் முந்தைய திருநெல்வேலி மாவட்டமும், இன்றைய தென்காசி மாவட்டத்தையும் சார்ந்த வாசுதேவநல்லூரை சேர்ந்தவர், எஸ்.ஜே. சூர்யா. இவரது இயற்பெயர் ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன். இவர் 1968ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 20ஆம் தேதி சம்மனசு பாண்டியன் மற்றும் ஆனந்தம் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர், எஸ்.ஜே.சூர்யா. இவரது மூத்த அக்காவின் பெயர், செல்வி மற்றும் இவரது மூத்த அண்ணனின் பெயர் விக்டர்.
அதனாலேயே குஷி படத்தில், நடிகை ஜோதிகாவின் பெயரை ‘செல்வி’ என்று வைத்தார்.
அஜித் தந்த இயக்குநர் வாய்ப்பு:
வாசுதேவநல்லூர் மற்றும் புளியங்குடியில் பள்ளிப்படிப்பை முடித்தபின், சென்னையில் லயோலா கல்லூரியில் இயற்பியல் படிப்பை எடுத்துப்படித்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு, அதில் இணைந்தபின், மதுரையில் பொறியியல் படிக்க வாய்ப்புகிடைத்தது. இருந்தாலும், சென்னையில் இருந்தால் ஏதாவது நடிக்கும் வாய்ப்பினைப் பெறலாம் என்னும் நம்பிக்கையில் லயோலா கல்லூரியிலேயே தனது படிப்பைத் தொடர்ந்தார்.
அப்போது தன் செலவுகளைப் பூர்த்தி செய்வதற்காக ஹோட்டலில் பணியாளாக இணைந்தார். பாக்யராஜிடம் உதவியாளரைப் போல் பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, கிழக்குச் சீமையிலே படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அதன்பின், முதன்முதலாக இயக்குநர் வசந்திடம் ‘ஆசை’(1995)படத்திலும்,சபாபதியின் சுந்தர புருஷன் (1996) படத்திலும், உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
அதன்பின் ‘உல்லாசம்’ திரைப்படத்தில், இரட்டை இயக்குநர்களான ஜே.டி மற்றும் ஜெர்ரியின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். இதனால், அஜித்துக்கு நல்ல நண்பராக மாறினார், எஸ்.ஜே.சூர்யா. அப்போது கிடைத்த கேப்பில் ‘வாலி’கதையைச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா, அஜித்தை தன் கதைசொல்லும் திறனால் ஈர்த்து, முதல் பட வாய்ப்பைப்பெற்றார். அடுத்து, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தான் தயாரிக்க முன்வந்தார். அதன்பின் வாலி திரைப்படம் கமர்ஷியலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லபெயரைப் பெற்றது. அடுத்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விஜயை வைத்து படம் இயக்க இயக்குநரைத் தேடிக்கொண்டிருந்தபோது, அஜித்தின் ’வாலி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இம்ப்ரெஸ் ஆகி, அவரிடம் ஏதும் கதைகள் இருக்கிறதா என்று கேட்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை தான், ‘குஷி’. இப்படம் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டானது.
அதன்பின், இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து எடுத்து, மீண்டும் ஹிட்டாக்கினார், எஸ்.ஜே.சூர்யா. அடுத்து இதே படத்தை ரீமேக் செய்ய இந்தியில் வாய்ப்பு வந்தது. அதையும் பயன்படுத்தி, இந்தியில் ‘குஷி’யை இயக்கிய இயக்குநருக்கு இப்படம் தோல்விப்படமாக அமைந்தது.
தன்னைத்தானே ஹீரோவாக நிலைநிறுத்திய எஸ்.ஜே.சூர்யா:
அடுத்து ஒரே நேரத்தில் 'நியூ’ படத்தில் தன்னை ஹீரோவாகவும், மறுபுறம் அதை கதையை வைத்து தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவையும் இயக்கினார், எஸ்.ஜே.சூர்யா. இப்படம் ஹிட்டானது. அதன்பின், ’அன்பே ஆருயிரே’ படத்தை இயக்கி, தன்னை மீண்டும் நியூ படத்துக்குப் பின், ஹீரோவாக முன்னிறுத்தி வென்ற எஸ்.ஜே. சூர்யா, அதன்பின், ’இசை’ படத்தில் நடிகராக மட்டுமல்லாது இசையமைப்பாளராகவும் உயர்ந்தார்.
இதற்கிடையே கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகியப் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, புலி படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அடுத்து ‘நண்பன்’ படத்திலும் சர்ப்ரைஸாக நடித்தார். அதன்பின், ’இறைவி’ திரைப்படம், இவரது சினிமா கேரியரில் முக்கிய திருப்புமுனையைத் தந்தது எனலாம். அதிலிருந்து ஸ்பைடர், மெர்சல் ஆகியப்படங்களில் நடித்து முக்கிய நடிகராக நடித்தார். பின், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த ‘மான்ஸ்டர்’திரைப்படம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகியவை அமைதியாக ஹிட்டடித்தன. ஒரே நேரத்தில் ஒரு படத்தில் ஹீரோவாகவும் அடுத்த படத்தில் வில்லனாகவும் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்த மிகச்சொற்பமான நடிகர்களில், எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர்.
அப்படி, மாநாடு, டான், வாரிசு, பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தியன் 2 ஆகியப் படங்களில் நடித்து தன்னை ஒரு ஆகச்சிறந்த நடிகனாக மெருகேற்றிக்கொண்டார்,எஸ்.ஜே.சூர்யா. மார்க் ஆண்டனி மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்தன் மூலம் இவரைப் பலரும் ’நடிப்பு அரக்கன்’ என அழைக்க ஆரம்பித்தனர்.

டாபிக்ஸ்