Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன்.. 18ஆண்டுகால போராட்டத்தின் கதை
Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன் மற்றும் அவரின் 18 ஆண்டுகால போராட்டத்தின் கதை குறித்துக் காண்போம்.
Prithvi Rajan - தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நல்ல நடிகராகவேண்டும் என தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டு இருக்கும் வளரும் நடிகர் தான், பிருத்வி ராஜன். பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம், பிருத்வி ராஜனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த பிருத்வி ராஜன்?:
இயக்குநர் பாண்டியராஜன், வாசுகி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான், பிருத்வி ராஜன். இவருக்கு பல்லவ ராஜன் என்ற மூத்த சகோதரரும், பிரேம் ராஜன் என்ற இளைய சகோதரரும் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பிருத்வி ராஜனின் குடும்ப பின்புலம்:
பாண்டியராஜனின் பூர்வீகம், சென்னை சைதாப்பேட்டை. அடிப்படையில் சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, தன் திறமையால் முன்னேறியவர். அம்மாவின் அப்பா(தாத்தா) அவினாசி மணி அடிப்படையில் இயக்குநர், கவிஞர், தயாரிப்பாளர் ஆவார்.
பிருத்வி ராஜனின் மூத்த சகோதரர், பல்லவ ராஜன், பிருத்வி ராஜனை வைத்து ‘எலியும் பூனையும்’ என்னும் படத்தை அறிவித்தார். ஆனால், அந்தப்படம் ஆரம்பிக்கப்படவில்லை. அதேபோல், பிருத்வி ராஜனின் தம்பி, பிரேம் ராஜன் , பிருத்வி ராஜ் நடிக்கும் ’வறட்டி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
பிருத்வி ராஜன், 2016ஆம் ஆண்டு, அக்ஷயா பிரேம்நாத் என்னும் பெண்ணை மணமுடித்தார்.
சினிமாவில் பிருத்வி ராஜனின் பயணம்:
பிருத்வி ராஜன், 2006ஆம் ஆண்டு கை வந்த கலை என்னும் படம் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை இயக்குநர் பாண்டியராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிருத்வி ராஜனுக்கு ஜோடியாக, ஸ்ருதி நடித்திருந்தார். இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவைப் படமாக அமைந்தது. இப்படத்தில் வந்த ‘சுட்டிப்பூவே நீ தொட்டால் துலங்கும் தொடலாமா’ என்னும் பாடல் பிரபலமானது. அதனை இசையமைப்பாளர் தினா போட்டு இருந்தார்.
ஆனால், இந்தப் படம் சராசரியாகவே திரையரங்குகளில் ஓடியது. மேலும் தன்னுடைய முதல் படத்தில் பிருத்வி ராஜன், தந்தையின் சாயலில் நடிப்பதாக விமர்சிக்கப்பட்டார். இவரின் இரண்டாவது படம் ‘நாளைய பொழுதும் உன்னோடு’. இப்படத்தை கே.மூர்த்தி கண்ணன் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக, தூத்துக்குடி படத்தில் நடித்து பிரபலமான ’கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா அடைக்கலம் நடித்திருந்தார்.
அதன்பின் 2009ஆம் ஆண்டு, ஜெமினி ராகவா இயக்கி வெளிவந்த வைதேகி படத்திலும், நடிகை கார்த்திகா அடைக்கலத்துடன் மீண்டும் சேர்ந்து நடித்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
விடாமல் நல்ல படம் தர முயற்சிக்கும் நடிகர் பிருத்வி ராஜன்:
மேலும், அடுத்து 2011ஆம் ஆண்டு, பதினெட்டாம்குடி எல்லை ஆரம்பம், 2012ஆம் ஆண்டு பேட்டை, 2016ஆம் ஆண்டு வாய்மை, 2018ஆம் ஆண்டு தொட்றா, 2019ஆம் ஆண்டு சகா, காதல் முன்னேற்றக் கழகம், கணேசா மீண்டும் சந்திப்போம் ஆகியப் படங்களில் அடுத்தடுத்து நடித்தார், நடிகர் பிருத்வி ராஜன். ஆனால், இப்படங்களிலும் சரியான பிரேக் கிடைக்கவில்லை.
அதேபோல், 2021ஆம் ஆண்டு, கசட தபற, லாபம், ஒபாமா உங்களுக்காக என்னும் படங்களிலும், 2022ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி. படத்திலும் பிருத்வி ராஜன் நடித்திருந்தார். 2024ஆம் ஆண்டு, பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் சாம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், நடிகர் பிருத்வி ராஜ். இப்படத்தில் அவர் கவிதை எழுதும் காட்சிகளும் திவ்யா துரைசாமிக்குப் பின், சுற்றும் காட்சிகளும் ரசனையாக அமைந்து இவரை பட்டித்தொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
இப்படி சினிமாவில் சாதித்துவிடவேண்டும் என தொடர் முயற்சித்து வரும் நடிகர் பிருத்வி ராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!