Thalapathy Vijay: தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது! ஆட்சியாளர்கள் உறுதியளிக்க விஜய் வேண்டுகோள்
சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சிஏஏ சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதையடுத்து இந்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு நடிகரும், தமிழ வெற்றிக் கழக்த்தின் தலைவருமான விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிஏஏ சட்டத்துக்கு விஜய் எதிர்ப்பு
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமூக நல்லணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்றுக்கொள்ளதக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடபோவதாகவும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்ப்பு
இந்த சூழ்நிலையில் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக்கத்தினருக்கு விஜய் உத்தரவிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் கட்சியை பலப்படுத்தும் பணியிலும், உறுப்பினர்களை சேர்க்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு பிரத்யேக செயலி ஒன்று அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. இந்த செயலி வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக சேர்ந்தனர்.
சினிமாவுக்கு முழுக்கு
அரசியல் கட்சி தொடங்கியதும், தமிழ்நாட்டு மக்கள் தான் தனக்கு அனைத்தையும் தந்தார்கள். தற்போது அவர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய நேரமிது என்று தெரிவித்த விஜய், ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேரமாக அரசியலில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
கோட் படத்தை தொடர்ந்து விஜய் ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். Thalapathy69 என்று அழைக்கப்படும் இந்த படமே விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிஏஏ சட்டம் பின்னணி
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. ஆனால் அதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதுவரை விதிகள் அறிவிக்கப்படாததால், சட்டம் அமலுக்கு வரவில்லை
இப்போது வரை, குடியுரிமை சட்டம், 1955 மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பிறப்பு, வம்சாவளி, பதிவு மூலம், குடியுரிமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய ஐந்து அளவுகோல்களின் மூலம் இந்தியாவில் குடியுரிமை பெறப்படலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது. இந்தியாவில் குடியுரிமை பெற ஆறாவது வழியாக மதத்தை இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்