RIP Daniel Balaji: ‘அதிக படம் நடிக்கல.. காரணம் பயம் தான்..’ மறைந்த டேனியல் பாலாஜியின் உள்ளார்ந்த பேட்டி!
Daniel Balaji Passes Away: ‘சில நேரங்களில் பண்ண முடியாத விசயங்கள் இருக்கும், அப்படி தான் இது போன்ற ஒரு சில காட்சிகளில் நடிப்பது. தெரிந்தவன், பழகியவன், நண்பன். இதில் நண்பன் என்கிற வார்த்தைக்கு நாம கொடுக்கும் மரியாதை இருக்கு பாருங்க, அது சில நேரங்களில் இப்படி தான் தொல்லையாக இருக்கும்’
தனித்துவமான நடிப்பால் அறியப்பட்ட நடிகர் டேனியல் பாலாஜி, சற்று நேரத்திற்கு முன் மாரடைப்பால் காலமானார். குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் அவருடைய நடிப்பு பேசப்பட்டது. லியோ படப்பிடிப்பின் போது இணையதளம் ஒன்றுக்கு டேனியல் பாலாஜி அளித்த பேட்டி கவனிக்கத்தது. இதோ அந்த பேட்டி:
‘‘நான் குறைந்த படங்களே பண்ணுவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல, எனக்கு பயம். நாம எதையாவது மொக்கையா பண்ணிடுவோமோனு. அதனால் முடிந்தவரை கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரமோ, அல்லது அந்த கதாபாத்திரத்தை வித்தியாசமா பண்ண முடியும்னு தோன்றினால் அதை நான் எடுக்கிறேன்.
பூவாக்காக(பணம் ) சில படங்கள் அவ்வப்போது பண்ணுவோம் என்பதையும் மறுக்க முடியாது. எனக்கே தெரியும் அந்த படம் தேறாதுனு, இருந்தாலும் நண்பர்கள் தான் அந்த படத்தை எடுத்திருப்பார்கள். துருவ நட்சத்திரம் மீண்டும் ஸ்டார்ட் பண்ணி பூசணிக்காய் உடைச்சாச்சு. அதிலும், ‘மச்சான் ரெண்டு சீன் வந்துட்டு போ..’ என்று கெளதம் அழைத்தார், போய்டு வந்தேன். மே மாதம் துருவ நட்சத்திரம் வெளியாகும் என்றிருக்கிறார்கள்.
சில நேரங்களில் பண்ண முடியாத விசயங்கள் இருக்கும், அப்படி தான் இது போன்ற ஒரு சில காட்சிகளில் நடிப்பது. தெரிந்தவன், பழகியவன், நண்பன். இதில் நண்பன் என்கிற வார்த்தைக்கு நாம கொடுக்கும் மரியாதை இருக்கு பாருங்க, அது சில நேரங்களில் இப்படி தான் தொல்லையாக இருக்கும்.
கெளதம் மட்டுமல்ல வெற்றி மாறன் போன்றோர் ஒரு சில சீனுக்கு அழைத்தாலும் நான் மறுக்க மாட்டேன். ஆனாலும், வெற்றி மாறன் ஆடுகளத்திற்கு அழைத்த போது நான் மறுத்துவிட்டேன். ஆனால் நான் அதில் வேலை பார்த்தேன். தூரத்தில் நின்று பார்த்தேன். ஆனால் நடிக்கவில்லை.
ஆங்கில படங்களில் வேலை பார்த்த அனுபவத்தால் மருதநாயகம் படத்தில் பணியாற்ற அழைத்தார்கள். லைன் புரொடியூசராக அங்கு சென்றேன். படம் ஸ்டார்ட் ஆக தாமதம் ஆனது. சம்பளம் வீணாகிறது, படம் தொடங்கும் போது கூறுங்கள் என்று வந்துவிட்டேன்.
மருதநாயகம் மீண்டும் ஆரம்பித்தார்கள் என்றால், டெக்னீசியனாக அதில் பணியாற்ற நேரடியாக கமல் சாரிடம் சென்று கேட்பேன். வெற்றி மாறன் படங்களில் எல்லாம் டெக்னீசியனாக பணியாற்றுகிறேன். விடுதலை படத்தில் கூட பணியாற்றியிருக்கிறேன்.
ஆன்மிகம், பக்தி என்ற இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பயங்கரமான நாத்திகம் பேசுபவன் கூட, அதை விமர்சிப்பதற்காக ஆத்திகனை விட அதிகம் அறிந்து கொள்கிறான். எதுவும் தெரியாமல் சும்மா பேச முடியாது, அதற்காக தெரிந்து கொள்கிறான். வெற்றிமாறனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை, ஆனாலும், கதை களத்திற்கு தேவையென்றால் அதை அவர் வைத்துக் கொள்வார். வடசென்னையில் ஒரு சாமியார் அம்மா கதாபாத்திரம் இருக்கும், அது அவர் அனுமதித்தது தான்.
லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற போது, அங்குள்ள செக்யூரிட்டி ஆபிசர், பைரவா படத்தின் இந்தி டப் பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டுவிட்டார். அவர் அந்த படத்தை விரும்பி பார்த்துள்ளார். அவ்வளவு பேசினார். அதே போல, காஷ்மீர் மலைகிராமத்தில் கடும் குளிரில் மூன்று பேர் போனோம். டீ கடையில் சூடாக டீ குடிக்கலாம் என ஒதுங்கினோம்.
ஒருவர் என்னை பார்த்துவிட்டு சென்றார். பின்னர் 20 பேரோடு திரும்பி வந்தார். எங்களுக்கு பயங்கர பயம் ஆகிவிட்டது. பாக்கெட்டி கை விட்டதும், அள்ளு விட்டது. பார்த்தால், மொபைல் போனை எடுத்து, ‘ஃபையா… செஃல்பி எடுத்துக்கவா’ என்று இந்தியில் கேட்டார். ‘அடப்பாவிகளா… இதுக்காடா இவ்வளவு பில்டப்’ என்று ஒரு மாதிரி பயந்துவிட்டோம்,’’
என்று அந்த பேட்டியில் டேனியல் பாலாஜி கூறியிருந்தார். அந்த அளவிற்கு எளிய மனிதர். ஆனால், இப்படி இயற்கை அவரை விரைவில் அழைத்துச் சென்றிருக்க கூடாது.
டாபிக்ஸ்