தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Life:'குழாயில் வரும் நீரை குடிப்பதற்குப் பதில் குளிக்கிறார்': ஆடுஜீவித காட்சியைப் பார்த்து புல்லரிக்கப் பேசிய கமல்

Goat Life:'குழாயில் வரும் நீரை குடிப்பதற்குப் பதில் குளிக்கிறார்': ஆடுஜீவித காட்சியைப் பார்த்து புல்லரிக்கப் பேசிய கமல்

Marimuthu M HT Tamil
Mar 26, 2024 09:18 PM IST

The Goat Life: குழாயில் வரும் நீரை குடிப்பதற்குப் பதில் குளிக்கிறார் என ஆடுஜீவித காட்சியைப் பார்த்து புல்லரிக்கப் பேசிய கமல்ஹாசனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

'குழாயில் வரும் நீரை குடிப்பதற்குப் பதில் குளிக்கிறார்': ஆடுஜீவிதம் பிருதிவிராஜ் நடிப்பைப் பார்த்து பூரித்த கமல்
'குழாயில் வரும் நீரை குடிப்பதற்குப் பதில் குளிக்கிறார்': ஆடுஜீவிதம் பிருதிவிராஜ் நடிப்பைப் பார்த்து பூரித்த கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள திரைப்படம்,ஆடுஜீவிதம். இப்படம் 2008ஆம் ஆண்டு, எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இது நஜீப் என்னும் மலையாளப் புலம்பெயர் தொழிலாளி அனுபவித்த சித்ரவதைகளை  எடுத்துரைக்கிறது. 

இப்படம் மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கிளாஸிக் நாவல் ஆகும். கிட்டத்தட்ட தமிழில் பொன்னியின் செல்வன்போல, ஆடுஜீவிதம் நாவலை மலையாளத்தில் படிக்காதவர்களே மிகவும் சொற்பம் எனலாம். 

இந்நிலையில் தான் 2009-ம் ஆண்டு முதல், இயக்குநர் பிளெஸ்ஸியின் சிந்தனையில் இருந்த 'ஆடுஜீவிதம்' திரைப்படம் இறுதியாக வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

நடிகர் பிருத்விராஜ், நஜீப் என்ற மலையாள புலம்பெயர்ந்த தொழிலாளியாக நடித்துள்ளார். சவூதி அரேபியாவில் ஒரு பண்ணையில் ஆடு மேய்ப்பவராக அடிமையாக இருந்த அந்த நபரின் ஆன்மாவினை காட்சிகளில் நடித்துக் கடத்தியிருக்கிறார். சோதனைகள், இன்னல்கள் மற்றும் பாலைவனத்தில் தப்பிப் பிழைத்தல் நிறைந்த அவரது பயணம் கதையைக் கொண்டு செல்கிறது. 

நஜீப்,  கேரள மாநிலத்தில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான பதற்ற மனநிலை, நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து காட்சிகளில் உள்ளதாகத் தெரிகிறது. பிருத்விராஜ் சடைமுடி மற்றும் தாடியுடன் கிட்டத்தட்ட அடையாளம் தெரியாதவர்போல இருக்கிறார். 

பிளெஸ்ஸி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் 2009ஆம் ஆண்டு முதல் இப்படத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். பிளெஸ்ஸி, ஆடு ஜீவிதம் படத்தில் பென்யாமினுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திரைக்கதை எழுதத் தொடங்கியபோது, பட்ஜெட் கட்டுப்பாடுகள் படத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன. 

2015ஆம் ஆண்டில், படத்தில் நடித்த ஜிம்மி ஜீன்-லூயிஸ் மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ் தயாரிப்பாளர்களாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் மாறியதன்மூலம் படம் வேறு ஒரு தளத்திற்குச் சென்றது.

இந்தப் படம் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் படமாக்கப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, படக்குழுவினர் ஜோர்டானில் 70 நாட்கள் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்களை இந்திய அரசு பத்திரமாக மீட்டது.

இப்படத்தில் அமலா பால், கே.ஆர்.கோகுல் மற்றும் அரபு நடிகர்களான தாலிப்அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பில் பணியாற்றியுள்ளார். இதனால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் பிளெஸ்ஸிக்குப் போட்டுக் காண்பிக்கப்பட்டது. 

ஆடுஜீவிதம் படத்தைப் பார்த்தபின் நடிகர் கமல்ஹாசன் அளித்த வீடியோவில்,  ‘’நான் இயக்குநர் பிளெஸ்ஸிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் அவருடைய கடினமான உழைப்பில் உருவாகியிருக்கிறது. அது சிலருக்கு உதவி இருக்கிறது.

இயக்குநர் மணிரத்னம் வியந்துட்டார். திரைப்படத்தின் இடைவேளையின்போது, எப்படி அவர் தண்ணீர் குடிக்கிறார் என்னும் காட்சியை பிளெஸ்ஸி திரையில் விவரித்த விதத்தைப் பார்த்துவிட்டு, இந்தப் படம் தகுதியான படம் எனச் சொல்லிவிட்டார்.

மாறுபட்ட சினிமாவை உருவாக்கவேண்டும் என்னும் தாகம் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் இருப்பது, எங்களுக்குப் படத்தின் காட்சிகளில் தெரிகிறது. பிருதிவிராஜ், இந்தப் படத்தில் நிறையகாட்சிகளில் நன்கு நடித்துள்ளார். 

குறிப்பாக, குழாயில் நீரைத் திறந்துவிட்டு பிருதிவிராஜ் குளிக்கிறார். நான் ஒரு போதும் நினைக்கவில்லை. நீங்கள் அந்தக் காட்சியில் படத்தை எடுத்துக்கொண்டு ரொம்பதூரம் போய்விட்டீர்கள் என்று. 

ஆடுஜீவிதம் படத்துக்காக கேமரா மேன், மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கு, கேமராமேனின் கஷ்டம் புரியும். ஆனால், அதைப் படத்தைப் பார்க்கும் மக்களுக்கும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டும். சிறப்பான படம். இந்தப் படத்தை, பார்த்து மக்கள் படக்குழுவினருக்கு ஆதரவளிக்கவேண்டும். நன்றி. வாழ்த்துகள்’’என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்