HBD Aari Arujunan: நெடுஞ்சாலை முருகனுக்கு உயிர்கொடுத்த ஆரிக்கு பிறந்தநாள்!
நடிகர் ஆரி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது கடும் உழைப்பு மூலம் உடற்பயிற்சியாளராக இருந்து நடிகராக உருமாறியவர்,ஆரி. இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரைப் பகிர்ந்துகொள்ள நம்மிடம் ஏராளமான கதைகள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த ஆரி?: நடிகர் ஆரி, பிப்ரவரி 12, 1986ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பிறந்தவர். அவரது தாயார் பெயர் முத்துலட்சுமி.
இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, திரையரங்குகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர். அதன்பின், உடற்பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். 2005ஆம் ஆண்டு அலை அடிக்குது என்னும் படத்தில் சிறு வேடத்தில் தலைகாட்டினார், நடிகர் ஆரி. அதன்பின், ஆடும் கூத்து என்னும் படத்திலும் சிலகாட்சிகளில் வந்தார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சரின் தயாரிப்பில் தாமிராவின் இயக்கத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் நடித்த ரெட்டைச்சுழி படத்தில் ஹீரோவாக நடித்தார். இது முழுக்க கிராமத்து சப்ஜெக்ட் ஆகும்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’என்னும் படத்தில் ஃபுல் ரொமான்டிக் ஹீரோவாக நடித்தார். ஆனால், இப்படம் யார் இந்த ஆரி என்னும் பெயரை மட்டுமே பெற்றுத்தந்தது. இந்நிலையில் தான், சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் 1980களின் பின்னணியில் நடந்த திருட்டு மற்றும் புனைவுகளின் அடிப்படையில் உருவான ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்திருந்தார், ஆரி. கிட்டத்தட்ட, பருத்திவீரன் படத்துக்குப் பின், அதே சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும், ‘நெடுஞ்சாலை’ வேறு ஒரு ஃப்ளேவரில் வந்திருந்தது. அதற்கு தார்பாய் முருகன் என்னும் முக்கிய கதாபாத்திரமும் ஒன்று. அதற்கு நடித்து உயிர் கொடுத்து இருந்தார், நடிகர் ஆரி. இப்படத்தின் மூலம் பலரையும் ஈர்த்தார். இப்படம் ஹிட்டானது. அவரது வாழ்விலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின், நதியா என்னும் ஈழத்துப் பெண்ணுடன் காதல் கிடைக்கிறது. பின் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். தற்போது, இத்தம்பதிகளுக்கு, ரியா மற்றும் ரணதீரன் என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.
பின் இவர் நிறைய சிறு பட்ஜெட் படங்களில் நடித்தார். மரம் நடுதல், சமூக கருத்துகளை வெளிப்படையாக தனது சமூக வலைதளத்தில் பேசுதல் போன்றவற்றால் பலராலும் கவனம் பெற்றார். பின், 2020-21ல் நடந்த பிக்பாஸ் தமிழ் 4 சீசனின் ‘டைட்டில் வின்னராக’ ஆரி வெற்றிபெற்றார். பின், 2022ஆம் ஆண்டு நெஞ்சுக்கு நீதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின், TN 43 மற்றும் Man ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
இப்படி ஒரு எளிய பின்புலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகனாகும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நடிகர் ஆரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறுவதில் பெருமிதம் அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்