Paava Mannippu: ‘சிவாஜியின் சாந்தி தியேட்டரில் வெளியான முதல் சிவாஜி படம் பாவ மன்னிப்பு’ ராக்கி கட்டிய லதாமங்கேஷ்கர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paava Mannippu: ‘சிவாஜியின் சாந்தி தியேட்டரில் வெளியான முதல் சிவாஜி படம் பாவ மன்னிப்பு’ ராக்கி கட்டிய லதாமங்கேஷ்கர்!

Paava Mannippu: ‘சிவாஜியின் சாந்தி தியேட்டரில் வெளியான முதல் சிவாஜி படம் பாவ மன்னிப்பு’ ராக்கி கட்டிய லதாமங்கேஷ்கர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 16, 2024 05:15 AM IST

Sivaji Ganesan Movie: 1961 மார்ச் 16 ல் வெளியான சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்துக்கு வயது இன்று 63 ஐ நிறைவு செய்து இருக்கிறது. மும்பையில் உள்ள அரோரா திரையரங்கில் பாவமன்னிப்பு படத்தை லதாமங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் பார்த்து விட்டு சிவாஜியின் நடிப்பில் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தனர்.

பாவமன்னிப்பு
பாவமன்னிப்பு

இந்த படத்தை சந்திரபாபு தனக்காக அப்துல்லா என்ற பெயரில் சில நாட்கள் வரை நாயகனாக நடித்து படப்பிடிப்பு நடந்ததாகவும் பின்னர் பீம்சிங் இயக்கிய போது சிவாஜி கணேசன் நாயகனாக மாற்றம் நடந்ததாகவும் சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு. ஆனால் படத்தில் சந்திரபாபு பெயர் எங்கும் இல்லை.

இந்த படத்தில் ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, ராஜம்மா, சித்தூர் நாகையா, பாலையா, சுப்பையா, ஏஸ்ஸார். ஜானகி, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரும் தேர்ந்த நடிப்பால்  தூக்கி நிறுத்தப்பட்ட படம். சிவாஜி கணேசனின் மிகவும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. உணர்ச்சி பொங்கும் கதை. கதையில் அடித்தளம் என்பது இந்து மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த குழந்தை முஸ்லிம் பெற்றோர்களால் வளர்க்ப்பட்டு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விசயம்.

வில்லனாக பிரபல நகை வியாபாரி எம்.ஆர். ராதா அவரது மனைவி ராஜம்மாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் வீட்டில் கார் ஓட்டும் மாணிக்கம் ஆக பாலையா இருப்பார். எஸ.வி.சுப்பையா ராதாவின் நண்பர் ஜேம்ஸ் ஆக வருவார். வைர வியாபாரி ஒருவரை ராதா கொலை செய்து விட்டு பழியை பாலையா மீது சுமத்தி சிறைக்கு அனுப்பி விடுகிறார். 

இந்த நேரத்தில் பாலையாவின் மனைவிக்கு பெண் குழந்தை பிரசவித்து இறந்து விட அந்த குழந்தை யை ராதாவின் நண்பர் ஜேம்ஸ் வளர்க்கிறார். பழிவாங்கும் நோக்கில் சிறையில் இருந்து தப்பி வரும் பாலையா வுக்கு தனது மனைவி குழந்தை பிறந்து தாய் இறந்த செய்தி அதிர்ச்சி அடைவார். 

எம்.ஆர். ராதாவின் குழந்தையை கடத்தி சென்று ரயில் முன்பு போட்டு விடுவார் பாலையா. அதில் தப்பி பிழைக்கும் குழந்தையை இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெரியவரான நாகையா தூக்கி சென்று வளர்ப்பார். முஸ்லிம் வளர்ப்பில் வளரும் குழந்தை சிவாஜி, கிறிஸ்தவ ஜேம்ஸ் வீட்டில் வளரும் குழந்தை தேவிகா, ராதாவின் இன்னும் ஒரு குழந்தை ஜெமினி கணேசன் ஆக வளர்கிறார்.மற்றும் ஒரு ஏழையின் மகளாக சாவித்திரி இருப்பார்.

முஸ்லிம் பெரியவரால் வளரும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் வசிக்கும் குடிசைகள் உள்ள இடம் ராதாவுக்கு சொந்தமானது. இந்த குப்பம் பகுதியில் சேவைகள் செய்பவராக கிறிஸ்தவர் ஜேம்ஸ் வீட்டில் வளரும் தேவிகா. இந்த கும்பத்தில் சிவாஜி தேவிகா சந்திப்பில் காதல் மலர்கிறது. இங்கே இருக்கும் ஏழைப்பெண் மகள் சாவித்திரிக்கும் நகைவியாபாரி ராதாவின் மகன் ஜெமினி கணேசனுக்கும் தனியாக காதல் என்பது கிளையாக ஓடும். 

எப்போதும் ராதாவுக்கும் சிவாஜிக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட சிவாஜியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு பாதியளவு முகம் கருகி விடுகிறது. ஒரு சூழலில் ராதா தான் தனது தந்தை என்றும் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கும் ஜெமினி கணேசன் அவரின் அண்ணன் என்று தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பார்.

காவல் துறை அதிகாரி ஜெமினி கணேசனுக்கு தனது தந்தை செய்யும் முறைகேடுகளை அறிந்து கொள்கிறார். மறுபுறம் குப்பத்து மக்களை வெளியேற்றி விட ராதாவின் மும்முரம், தனித்தனியாக வாழும் நால்வருக்கும் ஆன பந்தங்கள் தெரிய வர எப்படி ஒன்று சேருகிறார்கள். ராதா திருந்தினாரா என்பதை நோக்கி நெகிழ்ந்து போகுமளவு காட்சிகளுடன் முடியும்.

இயக்குனர் பீம்சிங் "பா" வரிசையில் நிறைய படங்களை இயக்கியவருக்கு 1961 தனி ஸ்பெஷல்.. 61 மார்ச்சில் பாவமன்னிப்பு 61 மேயில் பாசமலர். 61 செப்டம்பரில் பாலும் பழமும் என்று வரிசையாக வெள்ளி விழா கண்ட படங்கள். மூன்றுமே சிவாஜி கணேசன் படங்கள். மூன்றுக்கும் இசை மெல்லிசை மன்னர் . மூன்றுக்கும் பாடல்கள் கண்ணதாசன். பாவமன்னிப்பு படத்தில் வரும் எட்டு பாடல்களும் தேன் சொட்டும். படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போட்டது.

"எல்லோரும் கொண்டாடுவோம்.. அல்லாவின் பெயரை சொல்லி.."

"அத்தான்.. என்னத்தான்.. என்னைத்தான் "

"காலங்களில் அவள் வசந்தம்"

|பாலிருக்கும் பழமிருக்கும்... பசியிருக்காது..."

"அன்னை முகம் கண்டேனே...

சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்...

நான் சிரித்து கொண்டே அழுகின்றேன்"

"வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை "

(மகிழ்ச்சியும் சோகமுமாய் இரு முறை)

"சாய வேட்டி தலையிலே கட்டி"

என்று பாடல்கள் இன்றும் இரவில் கேட்டு மகிழும் பாடல்கள். பலருக்கும் தனிமையிலும் இன்பம் தரும் பாடல்கள்.

சிவாஜி கணேசன் சென்னை மவுன்ட் ரோடில் சொந்தமாக கட்டிய சாந்தி தியேட்டரில் வெளியான முதல் சிவாஜி படமும் இதுதான். தியேட்டரின் உச்சியில் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்ட பெரிய ஹைட்ரஜன் பலூனில் படத்துக்கு விளம்பரம் செய்தது இன்றைய 60பிளஸ் வயது அடித்தவர்களுக்கு மலரும் நினைவுகளாக இருக்கும்.

மும்பையில் உள்ள அரோரா திரையரங்கில் பாவமன்னிப்பு படத்தை லதாமங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேவும் பார்த்து விட்டு சிவாஜியின் நடிப்பில் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தனர். சில நாட்களில் சென்னை வந்து லதாமங்கேஷ்கர் சிவாஜிக்கு ராக்கி கட்டி சகோதரர் ஆக அறிவித்தது ஊர் அறிந்த செய்தி.

சிவாஜி கணேசன் படத்தில் முதல்முறையாக பீ.பி. ஶ்ரீனிவாஸ் இதில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews 

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9 
 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.