HBD M.R.Radha: ‘கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர் ராதா’ பிறந்த நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd M.r.radha: ‘கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர் ராதா’ பிறந்த நாள் இன்று!

HBD M.R.Radha: ‘கலகக்குரல் நடிகவேள் எம்.ஆர் ராதா’ பிறந்த நாள் இன்று!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 14, 2023 06:05 AM IST

"எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்" என்ற பெரியார்

எம்.ஆர்.ராதா
எம்.ஆர்.ராதா

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணா என்ற எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார். சிறுவயதில் ராதா தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதில் அவரது தாய் சாப்பிட கூடுதல் மீன் துண்டு கொடுக்க மறுத்தார் என்பதை தவற வேறில்லை.

இதையடுத்து 10 வயதில் தொடங்கி, முதலில் சிறிய சிறிய வேடங்களில் நாடகங்களில் தோன்றினார். கடைசியில் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகவே எழுதப்பட்டது. ஒரு கட்டத்தில் ராதாவின் மேடை நாடகமான ரத்த கண்ணீர் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமடைந்தார். இப்படி நாடகத்தை தொடர்ந்து அவர் திரைத்துறையிலும் ஜொலிக்க ஆரம்பித்தார்.

நாடகத்தில் புரட்சி

எம்.ஆர்.ராதா தன் இயல்பை போலவே நாடகத்திலும் வணங்காமுடிதான். நாடகத்தில் காலம் காலமாக இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தனர். நாடகத்தில் நடிப்பவர்கள் பார்வையாளர்களை நோக்கிதான் பேச வேண்டும். எக்காரணம் கொண்டும் முதுகை காட்டி பேசக்கூடாது. திரும்பி நின்ற படியே பேசக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் ஒரு நாடக காட்சியில் எம்ஆர் ராதா முழுக்க முழுக்க முதுகை காட்டிக்கொண்டே நடித்து வசனம் பேசினார். அதில் அவரது சுருள் முடியே கதையை பேசியது. அதை பார்த்த அண்ணாத்துரை எம்ஆர்ராதாவை பாராட்டி பத்திரிகையில் எழுதி இருந்தார்.

நாடகத்திற்கு தடைகோரி வழக்கை சந்தித்தவர் எம்.ஆர்.ராதா

பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த ராதா விதவையின் கண்ணீர் என்ற நாடகத்தை தயாரித்தார். ஆனால் பிற்போக்கு வாதிகள் அந்த நாடகத்திற்கு தடை கோரி நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து அந்த நாடகத்தை பார்த்த நீதிபதி கணேச ஐயர் ராதாவின் நாடகத்தை பார்த்து விட்டு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

தூக்கு மேடையில் கலைஞருடன் கைகோர்த்த ராதா

கருணாநிதி எழுதி நடித்த தூக்கு மேடை நாடகத்தில் அபிநய சுந்தர முதலியார் என்ற வைதீக சிந்தனையாளராக நடித்திருந்தார். கருணாநிதியும் மாணவர் தலைவராக நடித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பெரியாரும் எம்.ஆர் ராதாவும்

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் 'ராதா மன்ற'த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், "எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்" என்ற பெரியார், 'ராதா வாழ்க' என்று பேசி முடித்தார்.

இம்பாலாவில் வைக்கோல்

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். "என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா" என்ற அந்தப் புகழ் பெற்ற சக நடிகர் ராதாவிடம் கேட்டார். அதற்கு, "இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்து கொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்" என்றார். இது கேள்வி கேட்ட நடிகருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் எம்.ஆர்.ராதாவின் வீடு தேடி வரும் எல்லோருக்கும் பசிக்கு உணவிட்டு வந்தார். அதுமட்டும் இல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் தேடி வந்தவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்தார்.

இப்படி தமிழக அரசியல் ஆளுமைகளான பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோருடன் உடன் பட்ட எம். ஆர் ராதா தன் மனதிற்கு தவறு என்று பட்ட விஷயங்களில் முரண்படவும் தயங்காமல் தன் கலகக் குரலை ஓங்கி ஒலித்தார். சமூகத்தில் இருந்த மூட பழக்க வழக்கங்களையும் பெண்ணடிமை தனத்தையும் தன் எதார்த்த வசனங்களால் சுக்கு நூறாக்கினார்.எம்ஜிஆருக்கும் ராதாவுக்குமான முரண் துப்பாக்கி சூடு வரை சென்றது

இப்படி தன் இறுதி மூச்சு உள்ளவரை தான் நம்பிய கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் தன் வாழ்க்கையை முன்னெடுத்த அந்த மகா கலைஞனின் பிறந்த நாளான இன்று அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.