68 Years of Kanavane Kankanda Deivam: ஆக்ஷன் காட்சியில் அசத்திய ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  68 Years Of Kanavane Kankanda Deivam: ஆக்ஷன் காட்சியில் அசத்திய ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்!

68 Years of Kanavane Kankanda Deivam: ஆக்ஷன் காட்சியில் அசத்திய ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்!

Karthikeyan S HT Tamil
May 06, 2023 05:25 AM IST

கணவனே கண்கண்ட தெய்வம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

கணவனே கண்கண்ட தெய்வம்
கணவனே கண்கண்ட தெய்வம்

இத்திரைப்படம் அஞ்சலி தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. குறிப்பாக அக்காலத்து பெண்களை கண்ணீரில் கரைய வைத்த திரைப்படம். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ', 'உன்னைக் கண் தேடுதே உன் எழில் காணவே உள்ளம் நாடுதே', 'அன்பில் மலர்ந்த நல் ரோஜா கண்வளராய் என் ராஜா' ஆகிய பாடல்கள் இன்றளவும் இரவு நேரங்களில் அமைதியான சூழலில் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடலாக இருக்கிறது.

ஹேமந்தகுமார் இசையில் வெளியான இப்படத்தை பட்டண்ணா தயாரித்திருந்தார். ஜெமினி கணேசனை நமக்கு காதல் மன்னனாகத் தான் தெரியும். அவர் டூப் நடிகர்களே செய்யத் தயங்கிய ஒரு ஆக்ஷன் காட்சியில் நிஜ ஹீரோவாக அவரே செய்துகாட்டியும் நடித்திருந்தார். அது தான் 'கணவனே கண்கண்ட தெய்வம்' . 

கணவனே கண்கண்ட தெய்வத்தில் உள்ள பிச்சைக்கார வேஷம் தான் அது. ஜெமினி கணேசன் இதை விரும்பி கேட்டு நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தனக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றிய சுவாராஸ்ய தகவலை பின்னாளில் ஜெமினி கணேசனே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அவரது பேட்டியில், கணவனே கண்கண்ட தெய்வம் படம் வந்தது. பட்டண்ணா தயாரித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை வேஷத்தை எனக்குக் கொடுக்க நாராயணன் கம்பெனி அதிபர் நாராயண அய்யங்காருக்கு விருப்பமில்லை. பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரம். இது கணேசனால் நடிக்க முடியாது என்று அவர் சொல்லிவிட்டார்.

எனக்கு ஒரே வருத்தம். என் மனநிலையோ இந்த கதாபாத்திரத்தை நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது. இதுபோன்ற கதாபாத்திரம் இனி வாழ்நாளிலேயே கிடைக்காது. அதனால் இந்த வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்தி நடித்துவிட வேண்டும் என்று எண்ணினேன். அந்தப்படத்தில் அழகிய வாலிபனாகவும், வாய் கோணி முகம் சிறுத்து கூன் விழுந்த குரூபியாகவும் என இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்பு இருந்தது.

நான் ஒரு நாள் பாலன் என்ற உதவி இயக்குனர் மூலம் பழங்காலத்து ஆங்கிலோ இந்திய பிச்சைக்காரனைப் போல தாடி மீசை வைத்து நாராயண அய்யங்காரின் வீட்டுக்குச் சென்று அய்யா பிச்சை போடுங்கய்யா என்றேன். அவர் அப்போதுதான் பூஜையை முடித்துக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்து மெல்லக் கூனி குறுகி, ஐயா பிச்சை போடுங்கய்யா…என்று கேட்டேன். என் வேஷத்தைக் கண்டதும் அருவறுப்பு…போ..போ..! என்று விரட்டினார். நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவரை நோக்கி நடந்தேன். யாரப்பா நீ என விடாமல் விரட்டினார். இந்த சத்தம் கேட்டு உடனே பட்டண்ணா வந்துவிட்டார்.

யாரது முரட்டுப் பிச்சைக்காரனா இருக்கான். விரட்டினா கூடப் போக மாட்டேங்குறானே என பட்டாண்ணாவின் பக்கம் திரும்பினார். அப்போது பட்டண்ணாவுக்கு நான் கண்ஜாடை காட்டினேன். அவர் தடுக்கவில்லை. படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டேன். என்னடா நீ கூடப் பார்த்திட்டு நிக்கறே…என்று பட்டண்ணாவை கடிந்தார் அய்யங்கார். நம்ம கணேசன் தான் அது. நன்றாகப் பாருங்க என்றார். பட்டண்ணா, நம்ம கணேசன் தான் அது என்றார். அட…நீயா…அடையாளமே தெரியலயப்பா…உனக்கு எதுக்கு இந்தப் பிச்சைக்கார வேஷம்…என நாராயண அய்யங்கார் கேட்டார். அப்படித்தான் இந்த கதாபாத்திரத்தை ஜெமினி ஏற்று நடித்திருந்தார். 

இந்த திரைப்படத்தில் ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்திருந்தார். அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. ஆண்டுகள் உருண்டோடினாலும் காலத்தால் அழியாத காவியமாக திகழ்கிறது 'கணவனே கண்கண்ட தெய்வம்'.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.