Roshini Prakash: "நிறைய ஸ்பேஸ் கொடுத்தார்..வசதியாக உணர வைத்தார்" - பாலாவுடன் பணியற்றிய அனுபவம் பற்றி ரோஷினி பிரகாஷ்
Roshini Prakash On Director Bala: இயக்குநர் பாலா செட்டில் நன்கு வசதியாக உணர வைத்தார். நடிப்பதற்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார். அவர் ஒரு நண்பரை போல் பழகினார் என்ற வணங்கான் படத்தில் நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷ் கூறியுள்ளார்.
பெமினா மிஸ் இந்தியா செளத் அழகி போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்றவர் பிரபல மாடலும், நடிகையுமான ரோஷினி பிரகாஷ். கர்நாடாக மாநிலம் மைசூருவை சேர்ந்த இவர் கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் ஏமாளி, ஜடா போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர் இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கும் மற்றொரு தமிழ் படமான தோனிமா இன்று வெளியாகியுள்ளது. படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
படத்தின் ரிலீஸுக்கு முன்பு நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் நடிகை ரோஷினி பிரகாஷ். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்பட்டது.
இயக்குநர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், வணகான் படத்தில் முதலில் நடித்த மமிதா பைஜூ விலகியது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
வசதியாக உணர்ந்தேன்
அதற்கு பதில் அளித்த ரோஷினி பிரகாஷ், "மமிதா பைஜூ குறித்த விவகாரம் எனக்கு தெரியாது. ஆனால் பாலாவுடனான படப்பிடிப்பு எனக்கு நல்லபடியாக அமைந்தது. அவரது செட்டில் என்னை மிகவும் வசதியாக உணர வைத்தார். அவர் ஒரு நண்பரை போல் பழகினார்.
படப்பிடிப்புக்கு வரும் போது எனக்கு ஸ்கிரிப்ட் கொடுத்து விடுவார். அது தங்கிலிஷில் இருக்கும். எனக்கு எதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக அவரிடம் பேசுவேன். அப்போது தெளிவாக விளக்குவார். அவர் நிறைய ஸ்பேஸ் கொடுப்பார். அதே போல் நடிக்க அதிக நேரம் ஆனால் அதற்கான நேரத்தையும் கொடுப்பார்.
பாலாவுடன் பணியாற்றியது மாஸ்டர் கிளாஸ்
நடிப்பில் வித்தியாசம் காட்டவா? புதிதாக ஏதாவது முயற்சிக்கட்டுமா? என்று கேட்டால் கூட ஒருமுறை செய்து காட்ட சொல்வார். அவருடன் பணியாற்றியது ஒரு மாஸ்டர் கிளாஸ் போன்று இருந்தது. மிகவும் டீடெயிலாக சொல்வார்.
ஒரு காட்சியில் 10 கதாபாத்திரம் இருந்தாலும் அந்த பத்து பேரின் உடல்மொழி எப்படி இருக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். இப்படி நிறைய விஷயங்கள் அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கிறது”. என்றார்.
வெவ்வேறு கதாபாத்திரங்களில் பல்வேறு பரிணாமங்கள் வெளிப்படும்
தொடர்ந்து பேசிய அவர், "நடிப்பு என்று வரும்போது வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் தோனிமா இயக்குநர் இந்த படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. இது மாதிரி கதாபாத்திரங்கள் தான் ரசிகர்களை சென்றடையும்.
இதுபோன்ற கேரக்டர்களில் தான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு மெனக்கெடலையும் தர வேண்டும். அம்மாவாக நடித்துள்ளேன். கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தால் தான் பல்வேறு பரிணாமங்கள் வெளிப்படும். எல்லொருடனும் எளிதாகவும் கனெக்ட் ஆக்கிவிடும்" என்று பேசினார்.
மமிதா பைஜூ - இயக்குநர் பாலா சர்ச்சை
வணங்கான் படம் முதலில் சூர்யாவை வைத்து தொடங்கினார் இயக்குநர் பாலா. அப்போது அந்த படத்தில் நடிக்க கமிட்டான மலையாள நடிகையான மமிதா பைஜூ, தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " இயக்குநர் பாலா படப்பிடிப்பில் தான் கத்துவதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சொன்னதாகவும், காட்சி ஒன்றில் சரியாக நடிக்காத போது அவர் தன்னை திட்டியதோடு, முதுகில் அடித்தார் என்றும் பேசினார்.
இந்தப் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் பாலாவை சமூகவலைதளங்களில் கடுமையாக சாடினர். இதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்த மமிதா பைஜூ, "நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து பதிவிட்டு, தவறான தலைப்பில் அவை செய்திகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.
நான் பாலா சாருடன் கிட்டதட்ட ஒரு வருடம் பணியாற்றி இருக்கிறேன். அதில் படத்திற்கு முந்தைய பணிகளும், பிந்தைய பணிகளும் அடங்கும்.
அவர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டு என்னை ஒரு நல்ல நடிகையாக மாற்ற முயன்றார். அந்தப்படத்தில் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ நான் எந்த வித துன்பத்தையும் அனுபவிக்கவில்லை என்பதை இங்கு மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
நான் அந்தப் படத்தில் இருந்து வெளியே வந்ததற்கான காரணம் என்னுடைய தொழில்முறை சார்ந்த கமிட்மெண்ட்டுகள்தான்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதா ரவி, சிங்கம் புலி உள்பட பலர் நடித்திருக்கும் வணங்கான் படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்