Nandhan: உதயநிதிக்கு ட்விஸ்ட் வைத்த டைரக்டர்.. காட்சியை மாற்ற முடியும் ஆனால்.. நெத்தியடி கேள்வி!
Nandhan: நந்தன் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை நீங்கள் ஏன் இப்படி வைத்தீர்கள் என அமைச்சர் உதயநிதி கேட்டதாக அப்படத்தின் இயக்குநர் சரவணன் கூறியுள்ளார். இந்நிலையில், உதயநிதியின் கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை. அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை. இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன்.
மன்னிப்பு கேட்ட இயக்குநர்
இந்நிலையில், நந்தன் படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நந்தன் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சசிக்குமாரிடம் அவரது பிறந்தநாளன்று நீண்ட நெடிய மன்னிப்பு கோரியிருந்தார். காரணம், இயக்குநர், அவர் பார்த்த சாதிக் கொடுமைகளையும், வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் உண்மையாக திரையில் காட்ட எண்ணி, சசிக்குமாரை நிஜமாகவே அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால், முதுகு கிழிந்து, காய்ச்சலில் நடுங்கியுள்ளார். அப்போதும் அவர் சூட்டிங்கில் நடித்து கொடுத்துள்ளாராம்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணீர்
இப்படி, படம் நெடுகிலும் வந்த அனைத்து காட்சிகளும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை பார்த்த பல பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்களும் தங்கள் வாழ்க்கையை பிரதிபலிக்குமாறு இத்திரைப்படம் உள்ளதாகவும், சசிகுமார் வாங்கிய ஒவ்வொரு அடிகளும் எங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என கண்ணீர் மல்க கூறினர்.
இந்நிலையில், நந்தன் திரைப்படம் குறித்து, இயக்குநர் இரா.சரவணன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில், இந்தப் படத்தை பார்க்கும் போது பல இடங்களில் எங்களையும் அறியாமல் கோவம் வந்தது. பாலாஜி சக்திவேலை பார்த்தால் கோவம் வருகிறது. கிளைமேக்ஸ் வரையிலும் பார்க்கிறோம். சசிகுமார் எங்கேயும் திருப்பி அடிக்கவில்லை. அது ஏன் என நெறியாளர் கேட்கிறார்.
உதயநிதியின் கேள்வியும்- இயக்குநரின் பதிலும்
இதற்கு பதிலளித்த இயக்குநர் இரா.சரவணன், இந்தப் படத்தை எடிட் செய்வதற்கு முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் படத்தை காண்பிக்கின்றேன். இந்தப் படத்தை பிஸினஸ் நோக்கத்திற்காக நான் போட்டுக் காட்டவில்லை. எப்போதும் குறை சொல்வது ரொம்பவே எளிது. அதை தீர்வை நோக்கி நகர்த்துவது தான் கஷ்டம். இந்தப் படத்தை அவரிடம் காட்டியதற்கான நோக்கமே, உங்கள் ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்கிறது. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் கவனியுங்கள். கடந்த ஆட்சியிலும் இவை எல்லாம் இருந்தது என்பது வேறு. இன்றும் இதுபோன்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் பார்த்த ஊராட்சி மன்ற தலைவர்கள் பற்றிய கதை தான் இது எனக் கூறினேன்.
அவருக்கும் படம் பிடித்திருந்தது என்றார். அப்போது அவரும் நீங்கள் கேட்ட அதே கேள்வியைத் தான் கேட்டார். இவ்வளவு அடியையும் வாங்கிய அந்த ஹீரோ எப்படி மாறுகிறார் என்பது தானே கிளைமேக்ஸ், அதை விட்டுவிட்டு ஏன் படத்தை சப்புன்னு முடித்துள்ளீர்கள் எனக் கேட்டார்.
இந்த கிளைமேக்ஸை மாற்ற வேண்டியது நான் அல்ல. அவர் தான். ஆட்சியில் இருப்பவர்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நான் காட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் ஈஸியான ஒன்று. இதில் அவசியமானது ஆட்சியில் மாற்றம் செய்வது தான் முக்கியம் என பதிலளித்தார். இவரது இந்தப் பேச்சை பலரும் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
நந்தன் எதை மக்களிடம் பிரதிபலிக்கிறது
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். நடிகர் சசிகுமார்- இயக்குநர் இரா.சரவணன் கூட்டணியில் வெளியான இத்திரைப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
நடிகர் பாலாஜி சக்திவேல் ஆதிக்க வர்க்க அதிகாரம் மூலம் எப்படி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திடீரென்று, அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கினால் என்ன நடக்கும் என்ற கதையை இயக்குநர் சுவாரசியம் நிறைந்த கதைக்களமாக அமைத்துள்ளார்.
இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். மேலும், இவர் படத்தில் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை. முன்னதாக இந்தப் படத்தைப் பார்த்த பல பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் நடிகர் சசிகுமார் பட்ட அத்தனை வலிகளையும் தாங்கள் அனுபவித்து உள்ளதாகக் கூறி படம் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மிக ஆழமாக பதிவு செய்திருந்தனர்
டாபிக்ஸ்