TVKVijay: ‘மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள்’ - தவெக தலைவர் விஜய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tvkvijay: ‘மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள்’ - தவெக தலைவர் விஜய்

TVKVijay: ‘மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள்’ - தவெக தலைவர் விஜய்

Marimuthu M HT Tamil
Jun 07, 2024 03:27 PM IST

TVKVijay: மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

TVKVijay: ‘மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள்’ - தவெக தலைவர் விஜய்
TVKVijay: ‘மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்ற விசிக, நாதகவுக்கு எனது வாழ்த்துகள்’ - தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜய்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப் பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார், விஜய். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டுவிட்டாலும், தமிழக வெற்றிக் கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தனது அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். அதே நேரத்தில் 2026 சட்டமன்றத்தேர்தலில் விஜய் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்திருந்தார். இதன் மூலம் விஜய்யின் குறிக்கோள் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள். மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.

தொடங்கிய மூன்றே நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற விசிக மற்றும் நாதகவுக்கு வாழ்த்துக் கூறிய நடிகர் விஜய்:

முன்னதாக, நடிகர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘’நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்’’ என்றார். 

நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிக்கை:

முன்னதாக, நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாசாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்திற்கு வழிவகுக்கக்கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும்’’ எனத்தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.