TVK Public Meeting: கமலை பின்பற்றும் விஜய்! தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு எங்கே தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை மதுரையில் தொடங்கியது போல் விஜய்யும் தனது தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டை மதுரை மாநகரில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனp
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் தளபதி விஜய்.
ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்து விட்டு முழு நேர அரசியல்வாதியாக செயல்பட போவதாக தெரிவித்தார். அத்துடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
கட்சியின் கொடி, கொள்கை குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அருகே பனையூரில் இருக்கும் கட்சியின் தலைமையகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அத்துடன் செயலி மூலமாக புதிய உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.சுமார் 2 கோடி உறுப்பினர்கள் வரை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாட்டை வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி கட்சியின் மாநாடு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து பிப்ரவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் கட்சிக்கு அங்கீகாரமும் பெறப்பட்டது. கட்சியின் கொடி, சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல் பாணியில் விஜய்
உலக நாயகன் கமல்ஹாசன் தனது அரசிய கட்சியை மதுரை ஒத்தகடையில் பிப்ரவரி 21, 2018இல் தொடங்கினார். அப்போது நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை ஏற்றினார்.
இதைத்தொடர்ந்து விஜய்யும் தற்போது மதுரையில் வைத்து தனது அரசியல் கட்சியின் முதல் மாநாட்டை தொடங்கவுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தொடக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தனராக பங்கேற்றார். இதேபோல் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டில் யார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9