விநோத அரசியல் காரணம்? 8 நாள் ஷுட்டிங்கில் நடிப்பதை தவிர்க்கும் உதயநிதி - ஏஞ்சல் பட விவகாரம் பின்னணி
40 நாள்களுக்கு மேல் ஏஞ்சல் படத்தில் நடித்த உதயநிதி, தற்போது 8 நாள் ஷுட்டிங்கில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இதற்கு பின்னணியாக அரசியல் காரணங்களும் இருப்பதாக தெரிகிறது.
2018இல் தொடங்கப்பட்ட ஏஞ்சல் என்ற படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், 8 நாள்கள் படப்பிடிப்பை முடித்து தருமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நிராகரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
ஏஞ்சல் பட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 25 கோடி தர வேண்டும்
ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த ஏஞ்சல் படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்தது. மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை முடிக்க வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' படத்தில் நடித்தார்.
இதுமட்டுமில்லாமல, இன்னும் 'ஏஞ்சல்' படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், 'மாமன்னன்' படமே தனது கடைசி படம் என்றும் தெரிவித்தார். எனவே, ஏஞ்சல் படத்தின் மீதமுள்ள 20 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும், ரூ. 25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
உதயநிதி தரப்பில் மனு
இந்த வழக்கை நிராகரிக்க கோரி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, "ஏஞ்சல் படத்துக்காக எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி ஸ்டாலின் புறக்கணித்து வருகிறார். இதனால் இந்த படத்தின் உதவி இயக்குநர்கள் மற்றும் திரை கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "ஏஞ்சல் படம் தொடர்பாக தயாரிப்பாளரை, உதயநிதி ஸ்டாலின் பலமுறை தொடர்பு கொண்டார். படத்தில் தனக்கான காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டதால் மாமன்னன் படத்தில் நடித்ததாகவும்" தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டீக்காராமன், "தனக்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கின் உத்தரவை அக்டோபர் 28ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து ஒத்திவைத்தார்.
ஏஞ்சல் பட தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு
திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தில் உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புட், கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை கே.எஸ். அதியமான் இயக்கியுள்ளார். இவர் தமிழில் தொட்ட சிணுங்கி, பிரியசகி, தூண்டில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
ஏஞ்சல் படத்தில் சுமார் 40 நாள்களுக்கு மேலாக உதயநிதி நடித்து கொடுத்த நிலையில், 2019 தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்து, மாமன்னன் தான் தனது கடைசி படம் என தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாமன்னன் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க கோரி ஏஞ்சல் பட தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. அதில் ஏஞ்சல் படத்துக்கு ரூ. 13 கோடி செலவழிக்கப்பட்டதாகவும், 2018 முதல் தற்போது வரை கணக்கிட்டு அதற்கான வட்டியுடன் ரூ. 25 கோடி ஆகியுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடாக உதயநிதி தர வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் தீர்ப்பு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
ஏஞ்சல் படத்தை முடிக்காததன் பின்னணி
திகில் கலந்த கதையாக உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ஆன்மிகம், மூடநம்பிக்கை சார்ந்த சம்பவங்களும் காட்சிகளும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் அரசியல் ரீதியாக விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால் உதயநிதி படத்தின் எஞ்சிய காட்சிகளில் நடிக்க தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாபிக்ஸ்