Maamannan Review: உதயநிதி படமா? வடிவேலு படமா? ‘மாமன்னன்’ முதல் ரிவியூ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maamannan Review: உதயநிதி படமா? வடிவேலு படமா? ‘மாமன்னன்’ முதல் ரிவியூ!

Maamannan Review: உதயநிதி படமா? வடிவேலு படமா? ‘மாமன்னன்’ முதல் ரிவியூ!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 29, 2023 02:20 PM IST

அதிவீரனாக உதயநிதி நடிப்பில் நன்றாகவே தேறி இருக்கிறார். இருப்பினும் இன்னும் கொஞ்சம் நல்ல நடிப்பை கொடுத்து இருந்தால் கதையின் கனத்திற்கு இன்னும் கொஞ்சம் ஈடு கொடுத்து இருக்கலாம்.

மாமன்னன் படத்தின் போஸ்டர்
மாமன்னன் படத்தின் போஸ்டர்

கதையின் கரு 

சம்பவம் ஒன்றில் நியாயம் தங்கள் பக்கம் இருந்தும் அரசியல் கணக்குகள் காரணமாக அதில் தன் அப்பாவால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கோபமுறும் அதிவீரன், அப்பாவுடன் வருடக்கணக்கில் பேசாமல் இருக்கிறான். இந்த நிலையில் அவருக்கு எல்லாமுமாய் இருந்து அடிமுறை கலையை கற்றுக் கொடுக்கிறார் அவரது ஆசான்.

நாளடைவில் ஆசான் இறந்து போக, அதிவீரனே ஆசான் இடத்தில் இருந்து கூடத்தை வழிநடத்தி அடிமுறை கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த இடத்தை காதலி லீலாவுக்கு கொடுக்கும் சூழ்நிலை அதி வீரனுக்கு வாய்க்கிறது.

இதனிடையே லீலாவின் செயல்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட ரத்னவேலு தரப்பு அந்த இடத்தை அடித்து நொறுக்கி நாசம் செய்கிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதிவீரன் பதிலுக்கு அவர்களது இடத்தை அடித்து நாசம் செய்கிறான்.

 

இதனையடுத்து பிரச்சினையில் நேரடியாக தலையிடும் வேலுவுக்கு அதிவீரன் அப்பா மாமன்னன் தன் கட்சி எம்.எல். ஏ என்பது தெரியவருகிறது. இதனையடுத்து நடைபெறும் பேச்சு வார்த்தையில் நடைபெறும் சம்பவம் வேலுவின் ஜாதி வெறியோடு சம்பந்த பட்டு விடுகிறது. இதனையடுத்து நடக்கும் சம்பவங்களே மாமன்னன் படத்தின் மீதிக்கதை.

அதிவீரனாக உதயநிதி நடிப்பில் நன்றாகவே தேறி இருக்கிறார். இருப்பினும் இன்னும் கொஞ்சம் நல்ல நடிப்பை கொடுத்து இருந்தால் கதையின் கனத்திற்கு ஈடு கொடுத்து இருக்கலாம். மாமன்னாக வடிவேலு. நடை, உடை, பாவனை,மொழி, இசை என அனைத்துமாய் படம் முழுக்க விரவி நிஜ மன்னனாகவே வலம் வருகிறார்.

ஒரு ஃபெர்பாமராக அவர் உடைந்து அழும் காட்சிகள், கோபம் கொண்டு எழும் காட்சிகளை விட பொறுமையாய் இருந்து அரசியல் காய்களை நகர்த்தும் இடங்களில் அவரின் நடிப்பு சிறப்பு ஆனாலும் சில இடங்களில் அந்த நேசமணி நமக்கு சிரிப்பை கொண்டு வராமல் இல்லை. கீர்த்தியின் காதல் அழகு.

ஆனால் முந்தைய படங்களில் மாரி செல்வாராஜின் பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இதில் அவருக்கு இல்லாதது ஏமாற்றம்.

படத்தில் வடிவேலு ஒரு பரிணாமம் என்றால் ஃபகத் இன்னொரு பரிணாமம். ஃபகத்தின் வில்லத்தனம் மிரட்டல் என்று சொல்வதை விட அதி மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். வேலு கதாபாத்திரத்தின் முட்டாள்தனமான ஜாதிய வெறியை நம் கண்முன் கொண்டு வந்து படத்தின் நிறத்தை அவ்வப்போது சிவப்பாய் மாற்றுவது அவரின் கண்கள் தான். குறிப்பாக இடைவேளை காட்சியில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அவர் எந்தளவு வேலு கதாபாத்திரத்தை உள்வாங்கி இருக்கிறார் என்பதற்கான சான்று.

படத்தின் ஆகப்பெறும் ஆணிவேராய் இருக்கிறது மாரி செல்வராஜின் இயக்கம். பன்றியையும்,வேட்டை நாயையும் வைத்து அவர் காட்சிகளை நகர்த்திய விதம் தமிழ் சினிமா இதுவரை காணாத ஸ்டைல். படத்தின் பன்றி காட்சிப்படுத்தியிருக்கப்பட்ட விதம் நமக்கு அதன் மீது பேரன்பை உணாக்கி விடுகிறது. 

மாமன்னன் கதாபாத்திரத்தை வைத்து படத்தில் எதற்கும் வன்முறை தீர்வில்லை என்று சொன்ன மாரிசெல்வராஜ், கோழைத்தனமும் நியாயம் இல்லை என்று சொல்ல மறக்கவில்லை. 

படம் அதற்கான சுவாரசியதன்மை மீட்டரில் இருந்து கீழிறங்கும் சமயத்திலெல்லாம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நாம் பார்க்காத விஷயங்கள் நமக்கு புத்துணர்ச்சியைக்கொடுத்து விடுகிறன. அது நம்மை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறது. அதே போல காட்சிகளையும் ஒரு கவிதை போல காட்சிப்படுத்தியிருப்பது நமக்கு வேறொரு விதமான அனுபவத்தைக்கொடுக்கிறது. 

சேலத்தை தன்னுடைய கேமரா கண்களால் தேனி ஈஸ்வர் படம் பிடித்த விதம் சிறப்பு. இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் ஆகப்பெரும் தூணாய் நின்று படத்தை தூக்கி நிறுத்துகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. பின்னணி இசையில் ஒவ்வொரு காட்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வளவு மெனக்கெட்டு இசை கொடுத்திருப்பது ஆச்சரியம். அவரின் இசை படத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி சென்று இருக்கிறது. ‘நெஞ்சமே’ பாடலில் விஜய் யேசுதாஸின் குரல் மாற்றப்பட்டிருந்தது சற்று ஏமாற்றம்

முதல் பாதியில் இருந்த அதே உக்கிரம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் மாமன்னனை மலையளவு கொண்டாடியிருக்கலாம். வாழ்த்துகள் மாரி.. எத்திசைக்கும் சமூக நீதி ஒலிக்கட்டும்!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.