Hit List Movie Review: ‘ஹிட் ஆகுமா ஹிட் லிஸ்ட் திரைப்படம்?’ அறிமுகத்தில் அசத்தினாரா இயக்குனர் விக்ரமன் மகன்?
Hit List Movie Review: பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் நடிக்கும் திரைப்படம் எனும் போது, கதை, திரைக்கதையில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை கொஞ்சமும் குறையவிடவில்லை. போதாக்குறைக்கு கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார் என்றால், அவரும் கதை, திரைக்கதையை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்.
Hit List Movie Review: இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஹிட் லிஸ்ட். கொரோனா காலத்தில் பல உயிரிழப்புகளை நாம் சந்தித்தோம். அதில் குறிப்பிடும் படியாக, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பலர், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்கள். அப்படி உயிரிழந்த ஒரு பெண் டாக்டரின் இறப்போடு, சில த்ரில்லர் விசயங்களை கற்பனையாக தூவி களத்தில் இறங்கியிருக்கும் படம் தான், ஹிட்லிஸ்ட்!
முகமூடி மனிதனின் எண்ட்ரி!
ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் விஜய் கனிஷ்கா இரக்க குணம் கொண்டவர். எல்லா உயிரையும் நேசிப்பவர். அம்மா சித்தாராவும், தங்கை அபி நட்சத்திராவும் தான் அவரது உலகம். திடீரென ஒருநாள் சித்தாராவையும், அபி நட்சத்திராவையும் முகமூடி அணிந்த ஒருவன் கடத்துகிறான். தாய், தங்கையை தேடி அலையும் விஜய் கனிஷ்காவுக்கு, முகமூடி மர்ம மனிதனிடம் இருந்து அழைப்பு வருகிறது.
தாயும், தங்கையும் வேண்டுமானால் தான் சொல்லும் ரவுடி ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான் முகமூடி மனிதன். வேறுவழியில்லாமல் முகமூடி மனிதன் சொல்லும் அந்த பிரபல ரவுடியை கொலை செய்கிறார் விஜய் கனிஷ்கா. அதன் பிறகு தன்னிடம் தாயும், தங்கையும் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கும் விஜய் கனிஷ்காவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.
அடுத்தடுத்து சஸ்பென்ஸ்!
இன்னொரு நபரையும் கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைகிறான் முகமூடி மனிதன். முகமூடி மனிதனின் திட்டம் என்ன? விஜய் கனிஷ்கா இரண்டாவது கொலையை செய்தாரா? சித்தாரா, அபி நட்சத்திரா என்ன ஆனார்கள்? என்பது தான் படத்தின் திருப்பங்கள் நிறைந்த கதை. அறிமுகமாகியிருக்கும் விஜய் கனிஷ்கா, தான் அறிமுகம் என்று அடையாளம் காண முடியாத அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, தாய், தங்கையை மீட்க அவர் போராடும் காட்சிகள் சிறப்பாக உள்ளது. அறிமுக ஹீரோ என்பதற்காக காதலி, டூயட் என்று கதைக்கு ஒவ்வாத விசயங்களை வைக்காமல், முழுக்க முழுக்க ஹீரோவாக மட்டுமே கதையோடு விஜய் கனிஷ்காவை பயணிக்க வைத்த வகையில் நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள். போலீஸ் துணை ஆணையராக வரும் சரத்குமார், படத்தின் கதைக்கு நன்றாக உதவியிருக்கிறார்.
திரைக்கதை எப்படி?
அடுத்தடுத்த காட்சிகளில் வில்லன் போலவே தோன்றும் ராமச்சந்திர ராஜூவை, குறுகிய நேரத்தில் முடித்து விடுகிறார் விஜய் கனிஷ்கா. இதனால் அடுத்து யார்? என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே வருகிறது. போதாக்குறைக்கு இரண்டாம் பாதியில் வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அவர் பங்குக்கு கொஞ்சம் மிரட்டுகிறார். படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஸ்மிருதி வெங்கட்.
ப்ளாஷ்பேக் காட்சிகளை வலுவாக்கும் அவர் தான், கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மிக முக்கிய கதாபாத்திரமான அவர், தன்னுடைய தேர்வுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய பலம் இசை. இசையமைப்பாளர் சத்யா, படத்திற்கு தேவையான பின்னணி இசையை பங்கிட்டிருக்கிறார். முதல்பாதியில் முகமூடி, இரண்டாம் பாதியில் டாக்டர் என கேள்வியையும், பதிலையும் இரு பாதியாக பிரித்து, அதை சரியாக கையாண்டிருக்கிறார்கள்.
ஒரு சரியான சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு தேவையான அத்தனை அம்சங்களும் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதற்கு தேவையான திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் சூர்ய கதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன். பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் நடிக்கும் திரைப்படம் எனும் போது, கதை, திரைக்கதையில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதை கொஞ்சமும் குறையவிடாமல் படமாக்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார் என்றால், அவரும் கதை, திரைக்கதையை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொண்டிருக்கமாட்டார். அந்த வகையில் ஹிட் லிஸ்ட்.. ஹிட் ஆக வாய்ப்பு இருக்கிறது.
டாபிக்ஸ்