Seetha: ‘நம்மிடம் கேட்க தான் செய்வாங்க… எனக்கு MeToo வேண்டாம்’ -நடிகை சீதா!
Actor Seetha Interview: ‘பிடிக்கவில்லை என்றால் வெளியே வரணும், இல்லை, கேட்பவர் குணத்தை மாற்ற வேண்டும். முடியாது என அழகாக சொல்லிட முடியும். இந்த 10 ஆண்டில், அந்த நபருக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம் அல்லவா?’ -சீதா!
80களில் இனிமையான நாயகி, இயக்குனர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, இன்றும் சினிமாவில் தன் நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை, சீதா. வயது மாறாத இளமையோடு இன்னும் அதே சீதாவாக தோற்றமளிக்கும் அவர், சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதோ அவரது பேட்டி:
‘‘தொடர்ச்சியா படங்கள் இல்லை என்றாலும், எனக்கு பிடித்த படங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். வரக்கூடிய வாய்ப்புகளில் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
அடிப்படையில், சினிமா மீதான ஆர்வம் எனக்கு ஆரம்பத்தில் இல்லை. என் குடும்பத்திற்கும் இல்லை. முதல் படம் பண்ணும் போது, முக்கால் வாசி படத்திற்கு பிறகு தான் நாம இந்த படத்தில் என்ன பண்ணிருக்கோம் என இயக்குனரிடம் போய் கேட்டேன். பாண்டியராஜன் அதை கேட்டு சிரித்தார்.
நான் நடித்த வரை, எல்லாமே எனக்கு பிடித்தமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் தான். நெகட்டிவ் கதாபாத்திரங்கள் எனக்கு நிறைய வந்தது. எனக்கு அதில் உடன்பாடில்லை. க்ளாமராக நடிக்க அதற்கு ஏற்ப உடல்வாகு வேண்டும். எனக்கு அந்த உடலமைப்பு இல்லை.
குருசிஷ்யன் படத்தில் நான் நடித்த போது, விசு சார், பாலசந்தர் சார் எல்லாரும் போன் செய்து, என்னை திட்டினார்கள். ‘நீ என்ன, நல்ல கதாபாத்திரங்கள் பண்ணும் போது, ஏன் இப்படி பண்ண?’ என்று திட்டினார்கள். இப்போ அதை பார்த்தா, இதையெல்லாம் ஒரு கிளாமரா? என்று தோன்றுகிறது.
எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் உள்ளுக்குள் இருந்தது. தினமும் போன் பண்ணி, ‘ப்ளீஸ் அந்த மூன்று வார்த்தை சொல்லிடுங்க’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, ‘நான் தான் லவ் யூ’ என்று சொன்னேன். நான் போனில் பேசியதை இன்னொரு போனில் என் அப்பாவும் கேட்டு, பெரிய பிரச்னை ஆகிவிட்டது. மற்றபடி நான் காதல் சொன்னதால், அவர் ஏற்றுக்கொண்டார் என்று சொல்வது பொய்.
நான் ஒரு சராசரி பொண்ணு, பார்த்திபனும் அந்த அளவில் இருந்தவர் தான். பணம், அந்தஸ்தை எதிர்பார்த்து நான் அவரை விரும்பவில்லை. கணவரிடம் அன்பு வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் என்னிடம் இருந்தது.
சினிமா நடிகரை திருமணம் செய்யும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்னை என்று இல்லை. சினிமா என்பதால் அவர்களின் பிரச்னை வெளியே தெரிகிறது. மற்ற பணியில் இருப்பவர்களுக்கும் இந்த பிரச்னை இருக்கிறது. பெண்ணுக்கு வேலை இருந்தால், அவள் பாதி பிரச்னையை கடந்துவிடலாம்.
‘மீ டூ’ ஆரம்பித்தது நல்ல விசயம் தான். அது யாருக்கு என்றால், தனக்காக பேசத் தெரியாத பெண்களுக்கு அது சரியானது. இப்போ இருப்பது எல்லாமே தைரியமான பெண்கள். எல்லாரும் தைரியமா தனியா ஷூட்டிங் வர்றாங்க. உங்களிடம் போன் செய்து அப்ரோச் செய்தால், முடியாது என்று சொல்லிவிட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு 10 ஆண்டு கழித்து சொல்வது சரியல்ல. அந்த சமயத்தில் ஏன் நீங்க கேட்கவில்லை? அப்போது, உங்களுக்கு அந்த வாய்ப்பு வேண்டும் தானே? இது சினிமா என்று இல்லை, மற்றவர்களுக்கும் பொருந்தும்.
வேலைக்காக தானே வெளியில் சொல்லாமல் இருந்தீர்கள்? பிடிக்கவில்லை என்றால் வெளியே வரணும், இல்லை, அணுகுபவரை மாற்ற வேண்டும். முடியாது என அழகாக சொல்லிட முடியும். இந்த 10 ஆண்டில், அந்த நபருக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம் அல்லவா? அவருக்கு அது தண்டனை அல்லவா?
யாருக்கும் தெரியாமல் போன் செய்தால், யாருக்கும் தெரியாமல் முடியாது என்று கூறிடலாம். நான் சொல்வதை கேட்டு சிலர் திட்டலாம். ஆனால், இது என் பார்வை. எனக்கு பிரச்னை வந்தால் நான் அதை எதிர்கொள்வேன். எனக்கு ‘மீ டூ’ வேண்டாம் என்பேன். சில பேர் கேட்கத்தான் செய்வார்கள். அழகாக, நீங்க முடியாதுன்னு சொல்லிடலாம்.
டாபிக்ஸ்