Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை..தயாரிப்பாளர், பைனான்சியர் மீதான விமல் வழக்கு ரத்து செய்து உத்தரவு
Actor Vimal: உரிய ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி தயாரிப்பாளர், பைனான்சியர் மீது நடிகர் விமல் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாக்களில் ஹீரோவாக நடித்து வரும் விமல் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்த படம் மன்னர் வகையறா. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் தோல்வியை தழுவியது.
இதற்கிடையே இந்த படத்தை தயாரிப்பதற்காக நடிகர் விமலுக்கு, பைனான்சியர் கோபி என்பவர் ரூ. 5 கோடி கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டின் போது விமல் கடன் தொகையை திருப்பு கொடுக்க முடியவில்லை.
விமல் மீது மோசடி வழக்கு
இதனால் படங்களில் நடித்தும், வேறு படங்களை தயாரித்து அதிலிருந்து வரும் லாபத்திலிருந்தும் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாக 2018ஆம் ஆண்டு நடிகர் விமல் உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஆனால் சொன்னபடி கடனை திருப்பி செலுத்தாததால் பைனான்சியிர் கோபி, கடந்த 2020இல் நடிகர் விமல் மீது செக் மோசடி வழக்கை தொடர்ந்தார்.
விமல் புகார்
இதையடுத்து கடன் தொகையை செலுத்தாமல் தப்பிக்க, கடன் கொடுத்த கோபி, கடனுக்கு பரிந்துரை செய்த கோபியின் நண்பரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன், அவரது மேலாளர் விக்னேஷ் ஆகியோர் மீது நடிகர் விமல் கூட்டு சதி புகார் அளித்தார். அதில், தன்னை ஏமாற்றி தன் வங்கிக் கணக்கிலிருந்து தனக்கே தெரியாமல் ரூபாய் இரண்டு கோடியை எடுத்து விட்டதாக கூறி 2021ஆம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் அதிகார வர்க்கத்தினரின் மூலம் அழுத்தத்தையும் கொடுத்ததாக தெரிவித்தார்.
சிங்காரவேலன் கைது
விமல் தொடர்ந்த வழக்கில் விநியோகஸ்தர் சிங்காரவேலன் கடந்த 2022இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார்.
கோபி மற்றும் விக்னேஷ் உயர்நீதிமன்றத்தை அணுகி முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பினர்.
இதைத்தொடர்ந்து தங்கள் மீது ஆதரமற்ற பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், காவல்துறை நேர்மறையாக விசாரிக்க வேண்டும் என கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், 2023ஆம் ஆண்டு வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்களுக்குள் வழக்கை முடிக்க உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இரண்டு மாதங்களுக்குள் முடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பின்னரும் வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றம் இல்லாததால் 2024ஆம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அப்போது காவல்துறை சார்பில் இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆதாரம் இல்லாததால் வழக்கு முடித்து வைப்பு
இந்த வழக்கில் வேகம் காட்டிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கோபி, சிங்காரவேலன் தரப்பில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் சிங்காரவேலன், விக்னேஷ் மீது நடிகர் விமல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்துக்கான முகாந்திரம் எதுவும் இல்லை. அதேபோல் விமல் தரப்பிலும் ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என கூற வழக்கை முடித்து கொள்வதாக விருகம்பாக்கம் காவல்துற அறிக்கை தாக்கல் செய்தது.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் ஆய்வாளர் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் விமல் அளித்திருப்பது பொய் புகார் எனவும் நிரூபணம் ஆகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்