நான் கட்சி சார்பில்லாதவன்..ஆதாயம் கண்டதாக ஆதாரம் காட்டுங்கள்! வந்தே பாரத் உணவு விவகாரத்தில் பொறிந்து தள்ளிய பார்த்திபன்
வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவு தரமில்லை என நடிகர், இயக்குநர் பார்த்திபன் புகார் அளித்த நிலையில், அதில் அவர் ஆதாயம் தேடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், நான் கட்சி சார்பில்லாதவன், ஆதாயம் கண்டதாக ஆதாரம் காட்டுங்கள் என கூறி விளக்கமும் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இயக்குநர், நடிகரான பார்த்திபன் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் சென்றுள்ளார். அப்போது ரயில் திருப்பூர் சென்றடையும் நேரத்தில் அவருக்கு பரிமாறிய இரவு உணவு தரமானதாக இல்லை என புகார் அளித்துள்ளார். பார்த்திபனின் இந்த கருத்துக்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்த நிலையில் தான் எந்த கட்சியும் சாராதவன் என இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகத்தையும் பாராட்டியுள்ளார்.
பார்த்திபன் புகார்
வந்தே பாரத் ரயில் பயணத்தின்போது தனக்கு பரிமாறப்பட்ட உணவில் மோசமாக இருந்ததாக புகார் புத்தகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் பார்த்திபன். அவர் எழுதிய புகார் ஸ்லீப்பை பகிர்ந்திருக்கும் நிலையில், அதில், "உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தன். ட்ரெயின் சுகாதாரமாக இருந்தது. ஆனால் இரவு 19.22 வாக்கில் பரிமாறப்பட்ட உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகை வாங்கிக்கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கிய அவசியம் நன்றி" குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் ஸ்லீப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அந்த பதிவில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…" என பதிவிட்டிருந்திருந்தார்.
ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை
பார்த்திபனின் இந்த எக்ஸ் பக்க பதிவை தொடர்ந்து, "தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருந்துகிறோம். சேவை குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட உரிமதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு தரத்தை மேம்படுத்த பேஸ் கிச்சன் மற்றும் ஆன் போர்டு ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது." என்று சேலம் இணை மேளாளர் எக்ஸ் கணக்கில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
"ஒரு பிரபலமாக இல்லாமல், சாதாரண குடிமக்கள் சார்பாக ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஆரோக்கியமான' பாரதத்துக்கு கடுமையாக உழைப்போம்!" என பார்த்திபன் பதில் அளித்திருந்த நிலையில் அவரது கருத்து விமர்சனங்கள் எழுந்தன. பார்த்திபனின் செயலுக்கு எதிராக சில அரசியல் சாயம் பூசும் விதமாக பதிவுகளை பகிர்ந்தனர்.
ஆதாயம் கண்டதாக ஆதாரம் காட்டுங்கள்
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் பார்த்திபன், ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்’ என வெகுண்ட பாரதியை போல,
ஒவ்வொரு மனிதனுமே சக மனிதனைப் பற்றி கவலை கொள்ளல் வேண்டும்.
அவ்வகையில் நானும் ‘சோத்து கட்சி’ என்று ஒரு படம் தொடங்கினேன். நின்றுவிட்டது .மீண்டும் தொடங்குவேன்.நான் கட்சி சார்பில்லாதவன். ஆதாயம் கண்டதாக ஆதாரம் காட்டுங்கள் குற்றம் சாட்டும் குணவான்களே!
Jeeva cinema-வில் குறிப்பிட்டது போல் எந்த தொழிலாளிக்கும் பாதிப்பு வராமல் இருக்க கவனமாக உணவு தரமில்லை என்றே தெரிவித்தேன். அதை கவனமாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட DRM Salem அவர்களுக்கும், தவறை உடனே திருத்திக் கொள்ளக் கூடிய சிறந்த நிர்வாகத்தை நடத்தும் மத்திய அரசுக்கும் இனி பயன் பெறப் போகும் பயணிகள் சார்பில் நன்றி! என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த வந்தே பாரம் உணவு விவகாரம் தொடர்பாக விடியோ பகிர்ந்திருக்கும் ஜீவா சினிமா யூடியூப் விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
பார்த்திபன் புதிய படம்
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் டீன்ஸ் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் விமர்சரீதியாகவும் பாராட்டை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கும் பணியில் நடிகர் பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார் என அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பார்த்திபன் நடித்து முடித்திருக்கும் படமான துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆவதில் தாமதமாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
டாபிக்ஸ்