படுமோசம்.. வந்தே பாரத் ரயிலில் நடிகர் பார்த்திபனுக்கு தரப்பட்ட தரமற்ற உணவு.. பொரிந்து தள்ளிய மனுஷன்!
படுமோசம்.. வந்தே பாரத் ரயிலில் நடிகர் பார்த்திபனுக்கு தரப்பட்ட தரமற்ற உணவு.. பொரிந்து தள்ளிய பார்த்திபன் குறித்துப் பார்ப்போம்.
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் போது, தனக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியாக இல்லை என நடிகரும் இயக்குநருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் புகார் அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தான் இயக்கும் படங்களில் புதுமையைப் புகுத்துவதிலும், தான் பேச்சில் வித்தியாசமாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் கெட்டிக்காரர், இயக்குநர் இரா. பார்த்திபன் என்கிற இராதாகிருஷ்ணன் பார்த்திபன். தன்னுடைய படங்களின்மூலம் நல்ல நடிகராகவும் தன்னை பரிணமித்துக்கொண்டார். யாருக்குப் பரிசளிப்பதாக இருந்தாலும் வித்தியாசமாகப் பரிசளிக்கும் பழக்கத்தை இன்றும் தொடர்பவர்.
முதன்முறையாக வேடிக்கை மனிதர்கள் என்ற படத்தில் உதவி இயக்குநர் என்னும் பணி மூலம் சினிமாவுக்குள் நுழைந்த பார்த்திபன், கடும் உழைப்பினால் கே.பாக்யராஜின் ஆஸ்தான உதவி இயக்குநர் ஆனார். அப்போது கிடைக்கும் நேரத்தில் பல்வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசி மட்டும் மாதம் ரூ.6ஆயிரம் சம்பாதித்த பார்த்திபனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் சிறிய ரோலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின், தாவணிக்கனவுகள் படத்தில்,போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
புதிய பாதை மூலம் வந்த வெளிச்சம்:
அதன்பின் 1989ஆம் ஆண்டு, புதிய பாதை என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆனார். இப்படத்துக்காக தேசிய விருதினையும், மாநில அரசின் விருதினையும் பெற்றார். பின், பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், சரிகபதநி, ஹவுஸ் புல், இவண், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு, இரவின் நிழல் டீன்ஸ் ஆகியப் படங்களை இயக்கி இருக்கிறார்.
மேலும் பார்த்திபன் கனவு, நீ வருவாய் என, வெற்றிக்கொடிகட்டு, அழகி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய பிற இயக்குநரின் படங்களிலும் கவனம் ஈர்க்கும் நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அத்தகைய நடிகர் பார்த்திபன் சென்னையில் இருந்து நேற்று(13.12.2024) கோவைக்கு வந்தே பாரத் ரயிலில் சென்றிருக்கிறார். அப்போது அவருக்குத் தரப்பட்ட உணவு தரமானதாக இல்லை என புகார் அளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு அளித்தப் புகாரில், ‘உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். வந்தே பாரத் ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால், இரவு(19.22 மணிக்கு) வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படுமோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக்கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி’’ என இந்தியன் ரயில்வேக்கு அனுப்பும் புகார் மனுவில் இயக்குநரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தன் கைபட எழுதிய கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
பார்த்திபனின் புகார்:
அந்தப் புகாரில் பார்த்திபன் குறிப்பிட்ட தகவலின் படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பார்த்திபன் பயணித்து இருப்பது தெரிகிறது. அப்போது திருப்பூர் ரயில்நிலையத்தில் அவருக்கு தரப்பட்ட உணவில், இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது.
இதுதொடர்பாக, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அந்த புகார் மனுவின் புகைப்படத்தைப் பகிர்ந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சில குறிப்புகளையும் எழுதியிருக்கிறார்.
அதில், ‘’முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்தே உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென’’ என நடிகர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் குறிப்பிட்டிருக்கிறார்.
டாபிக்ஸ்