8 Years Of Joker: 'என்னங்க சார் உங்க சட்டம்’; அரசின் ஊழல்களை தோலுரித்த ஜோக்கர் திரைப்படம்!
8 Years Of Joker: ' என்னங்க சார் உங்க சட்டம்’; அரசின் ஊழல்களை தோலுரித்த ஜோக்கர் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

8 Years Of Joker: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ராஜூ முருகன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா மற்றும் பவா செல்லத்துரை ஆகியோர் நடித்து, ஆகஸ்ட் 12ஆம் தேதி, 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், ‘ஜோக்கர்’. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையையும், செழியன் ஒளிப்பதிவையும் எடிட்டிங்கினை சண்முகம் வேலுச்சாமியும் செய்திருந்தனர்.
இப்படம் படம் வெளியானபோது சத்தமில்லாமல் நல்ல விமர்சனங்களைப் பெற்று, ஸ்லீப்பர் ஹிட்டானது. மேலும், 64ஆவது தேசிய விருதையும் வென்றது. இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படம் பற்றிப் பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன.
'ஜோக்கர்’ படத்தின் கதை என்ன?:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர வயது இளைஞர், மன்னர் மன்னன். தன்னைத்தானே இந்தியாவின் ஜனாதிபதி என அறிவித்துக்கொண்டு, நாட்டில் நடக்கும் இன்னல்களுக்கு எதிராகப் போராடுகிறார். ஆனால், அவரை ஊர் மக்கள் எல்லோரும் மனநிலைப் பாதிக்கப்பட்டவர் எனக் கருதுகின்றனர். மன்னர் மன்னனுக்கு ஆதரவாக, பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பெட்டிகேஸ் பொன்னூஞ்சலும், மதுவால் தன் கணவரை இழந்த இசை என்னும் இளம்பெண்ணும் உதவுகின்றனர்.