Rajnikanth: இது உண்மை தான்.. ரஜினியின் உடல்நிலை.. அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ.. இதுதான் முக்கியம்
Rajnikanth: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறைத்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்திற்கு செய்யப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் தெளிவாக கூறியுள்ளது.
உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை அற்ற முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் அவரின் பெரு நாடியில் தற்போது ஸ்டெண்ட் பொறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்ததால், நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் இன்னும் 2 நாட்களில் நலமுடன் வீட்டிற்கு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூகவலைதளங்களில் எழுப்பி எழுப்பினர்.
மருத்துவமனையில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான சிகிச்சை
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான சிகிச்சை தான். இது அறுவை சிகிச்சை அல்ல. இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல.
ஏற்கனவே இது திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய சிகிச்சை முறை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வாரங்களாகவே இது தொடர்பாக ரஜினிகாந்த் மருத்துவர் உடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். அந்த ஆலோசனையின் வழியாக முடிவெடுத்த அவர், நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது
அதன் படி, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் நடிகர் ரஜினியின் உடல் நலம் சீராக இருக்கிறது எனக் கூறினர்.
நன்றி சொன்ன ரஜினி
இதற்கிடையில், சிகிச்சைக்குப் பின் மயக்கத்திலிருந்து கண் விழித்த ரஜினிகாந்த் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் கார்டியாக் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகிறது.
மருத்துவமனை அறிக்கை
இந்த சமயத்தில், அப்பல்லோ மருத்துவமனை நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்த விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திலிருந்து (Aorta) வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ், அவரின் பெருநாடியில் ஸ்டென்டை பொறுத்தி வீக்கத்தை முழுவதுமாக மூடியுள்ளனார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த சிகிச்சைக்கான நடைமுறைகள் அனைத்தும் நடந்து முடிந்தன என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். மேலும், ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். அவர் இன்னும் இரண்டு நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.