LK Advani Hospitalized: முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
LK Advani: ஜூலை முதல் வாரத்திலும் லால் கிருஷ்ண அத்வானி அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு ஓரிரு நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானி செவ்வாய்க்கிழமை டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 96 வயதான அரசியல் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3 ஆம் தேதி, பாஜக தலைவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஒரு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு, அத்வானி முதுமை தொடர்பான பிரச்சனைகளுக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் கழித்து, அவர் முதன்மை மருத்துவ நிறுவனத்தில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மார்ச் 31 அன்று, ஜனாதிபதி திரௌபதி முர்மு, அத்வானிக்கு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னாவை அவரது இல்லத்தில் வழங்கினார் . பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜகவின் தேசிய எழுச்சிக்கு தலைமை தாங்கியவர் அத்வானி
நவம்பர் 8, 1927 இல் கராச்சியில் பிறந்த அத்வானி, 14 வயதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS) சேர்ந்தார். 1947 இல், பிரிவினைக்குப் பிறகு அவர் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.
1951 இல் சியாமா பிரசாத் முகர்ஜியால் உருவாக்கப்பட்ட பாரதிய ஜனசங்கத்தில் அத்வானி சேர்ந்தார். அவர் 1970 இல் ராஜ்யசபாவில் நுழைந்தார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975 அவசரநிலையின் போது, கட்சி சகாவான அடல் பிஹாரி வாஜ்பாயுடன் கைது செய்யப்பட்டார்.
1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தபோது, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக அத்வானி நியமிக்கப்பட்டார். 1980 இல், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
1984 பொதுத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களிலிருந்து பாஜகவை 1990களில் தேசிய முக்கியத்துவத்திற்கு உயர்த்திய பெருமை அத்வானிக்கு உண்டு. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தில் அவரது தலைமைப் பங்கு பாஜகவின் தேர்தல் அதிர்ஷ்டத்தை உயர்த்தியது.
பாஜக தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். பின்னர், மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் அத்வானி பணியாற்றினார்.