அடுத்த அட்டாக் சிஎம் மீது..பாய்ந்தது வழக்கு - பம்மியவாறு மன்னிப்பு கேட்ட நடிகை ஸ்ரீரெட்டி
ஆந்திர முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து கூறியதற்காக வழக்கு பாய்ந்த நிலையில், தற்போது பம்மியவாறு மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி விடியோ பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, சர்ச்சை கிளப்புவதில் பெயர் பெற்றவராக இருந்துள்ளார். பிரபல சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்து பரபரப்பை கிளப்பிய இவர், அதற்கான அரைநிர்வாண போராட்டமும் நடத்தி ஷாக் கொடுத்தார்.
இவரது குற்றச்சாட்டில் கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் அடங்கியுள்ளார். நடிகர், விஷால், ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்களை கூறி அலறவிட்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு மீது அவதூறு பரப்பி மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் குடும்பம் மீது அவதூறு
ஆந்திர மாநில முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறு விடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டி மீது தெலுங்கு தேசம் கட்சியினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஸ்ரீரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரிடம் விசாரணமை மேற்கொள்ளவும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னிப்பு கேட்டு விடியோ பகிர்வு
இதையடுத்து தான் கைது செய்யப்பபடலாம் என கருதிய நடிகை ஸ்ரீரெட்டி மன்னிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், " நான் சந்திர பாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை. வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இனிமே போலீஸ் வழக்கு, கைது என மானத்தை வாங்க வேண்டாம் என குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள். நீங்கள் கட்சியின் தலைவர்கள். உங்களை பற்றி இனிமேல் அவதூறு பேசமாட்டேன்" என்று கையெடுத்து கும்பிட்டவாறே விடியோவில் பேசியுள்ளார்.
மார்பிங் படத்தால் வந்த சர்ச்சை
கடந்த சில நாள்களுக்கு முன் சர்ச்சை இயக்குநரான ஆர்ஜிவி என்கிற ராம் கோபால் வர்மா மீது போலீசார் அவதூறு வழக்கை பதிவு செய்தனர். முன்னதாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ், ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொடர்பான புகைப்படங்களை மார்பிங் செய்து இயக்குநர் ராம் கோபல் வர்மா வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து ராம் கோபால் வர்மா மீது தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் மடிப்பாடு காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஸ்ரீரெட்டி படங்கள்
தெலுங்கில் அரவிந்த் 2, க்ளைமாக்ஸ் உள்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது குற்றச்சாட்டே பல்வேறு சினிமா இயக்குநர்களும், நடிகர்களும் வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமா பிரபலங்களை கடந்த தற்போது அரசியல் தலைவர்கள் பற்றியும் அவதூறு பேசியதால் போலீஸ் வழக்கு வரை சென்று மன்னிப்பும் கூறியுள்ளார்.