Oru Kai Osai: வாய் பேச முடியாத ஊமை.. பாக்யராஜ் அவள நகைச்சுவை! எதிர்பாராத க்ளைமாக்ஸ் என ரசிகர்களை கவர்ந்த படம்
வாய் பேச முடியாத ஊமையாக படம் முழுக்க வரும் பாக்யராஜ் அவள நகைச்சுவையால் சிரிக்க வைத்திருப்பார். தனித்துவமான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத க்ளைமாக்ஸ் என ஒரு கை ஓசை படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரபல இயக்குநர் பாக்யராஜ் திரைப்படங்களின் திரைக்கதை எப்படி தனித்துவமாக இருக்குமோ, அதே போலத்தான் அவரது படத்தில் இடம்பெறும் வசனங்களும். ஆனால் இந்த படத்தில் வசனமே பேசாமலும் தனது அபார நடிப்பால் கலங்கடித்திருப்பார் பாக்யராஜ்.
பொதுவாகவே பாக்யராஜ் திரைக்கதை எழுதுவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். தனது படங்களில் தனியாக வில்லன் என்ற கதாபாத்திரத்தை வைப்பதை காட்டிலும் கதையில் சூழ்நிலையை வில்லனாக மாற்றியமைத்து, படத்துக்கு ஏகோபித்த வரவேற்பை பெற வைக்கும் தந்திரத்தை நிகழ்த்தும் இவர், இந்த படத்தில் ஜாதி கொடுமை ஊரில் நிகழும் சமூக அவலங்கள் பற்றி பேசியிருப்பார்.
வாய் பேசாத ஊமையாக பாக்யராஜ்
பாக்யராஜ் இயக்கி தயாரித்து, இயக்கி, நடித்து படம் ஒரு கை ஒரு ஓசை. இது அவர் இயக்கிய இரண்டாவது படமாகும். சிறு வயதில் தன்னுடைய தாயின் இறப்பை கண்முன்னே பார்த்த அதிர்ச்சியில் பாக்யராஜூக்கு குரல் பறி போய்விடும். இதனையடுத்து அவர் அந்தக் கிராமத்தில் ஊமையாக சுற்றி வருவார். ஒரு கட்டத்தில் வாழ்வின் மீது விரக்தியடையும் அவர் பலமுறை தற்கொலைக்கு முயல்வார். இதனிடையேதான் பெண் மருத்துவர் அஸ்வினியின் அறிமுகம் அவருக்கும் கிடைக்கும். அவர்கள் பழகுவார்கள்.
இந்தப்பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாற, பாக்யராஜ் அதனை அஸ்வினியிடம் வெளிப்படுத்த முயல்வார். அந்த சமயத்தில்தான் அஸ்வனி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், அதற்கு சான்றாக குழந்தை ஒன்று இருப்பதாகவும் குண்டைத்தூக்கி போடுவார். அங்குதான் இடைவேளை என்று கட் செய்தார் செய்தார் பாக்யராஜ். இரண்டாம் பாதியில் பாக்யராஜின் முறைப்பெண் அவரை ஒரு தலையாக காதலிக்க, இன்னொரு பக்கம் அஸ்வனி கொடுக்கும் சிகிச்சையில் பாக்யராஜூக்கு பேச்சு வந்து விடும்.
ஆனாலும் பாக்யராஜ் பேசமாட்டார். அவர் பேசாததற்கு என்ன காரணம்? அதன் பின்னர் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை
நிஜ கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை
முதல் பாதியில் ஊமையாகவும், இரண்டாம் பாதியில் ஊமையாக நடிப்பவனாகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கலக்கியிருப்பார். பேச முடியாத அந்தக் கேரக்டர்ல கூட, காமெடி பண்ண முடியும்னு நிருபித்தி காட்டியிருப்பார். மருத்துவராக நடித்திருந்த அஸ்வினியும் பிரமாதமாக நடித்திருப்பார்.
அஸ்வினியின் டாக்டர் கேரக்டரை இயக்குநர் பாக்யராஜ் தனது அம்மாவை வைத்து டெவலப் செய்துள்ளதாக பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில், "வெள்ளாங்கோவிலில், என் அம்மா நர்ஸ் பணிகளைச் செய்துவந்தார். ஆனால் அவரை எல்லோரும் ‘டாக்டர் டாக்டர்’ என்றுதான் கூப்பிடுவார்கள். அந்த ஊரில் அம்மா ஒரு டிஸ்பென்ஸரி வைத்து, வைத்தியம் செய்து வந்தார். அதே வீட்டில், அம்மா உட்கார்ந்திருந்த அறையிலேயே, அஸ்வினி டாக்டர் காட்சிகளை எடுத்தேன்" என்று விவரித்திருப்பார்.
திருப்புமுனை தரும் சங்கிலி முருகன்
சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு திருப்புமுனையாக அமைந்த சங்கிலி முருகனின் நடிப்பு கவனம் பெற்றது. இதுவும் வெள்ளாங்கோவிலில் இருந்து உண்மை கதாபாத்திரம் ஒன்றை அடிப்படையாக வைத்து நடிக்க வைத்தார். சங்கிலி முருகன் நடித்த கேரக்டரில் பெயர் சங்கிலி. இதில் நடிப்பதற்கு முன்னர் அவர் முருகன். சங்கிலியாக நடித்த பின் தான் சங்கிலி முருகன் ஆகியுள்ளார்.
எதிர்பாராத க்ளைமாக்ஸ்
டீக்கடையில் கூட நிலவுகிற ஜாதிக் கொடுமையை இந்த கதாபாத்திரத்தின் மூலமும், க்ளைமாக்ஸிலும் பொட்டில் அறைந்தார் போல் சொல்லியிருப்பார். குறிப்பாக படத்தின் எதிர்பாராத க்ளைமாக்ஸ் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நான் நீரோடையில் என்ற பாடல் ஹிட்டாக அமைந்தன. இதர பாடல்களும் அந்த காலகட்டத்தில் வரவேற்பை பெற்றன. ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் தெலுங்கில் பிரணயா கீதம் (1981) என்ற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
தனித்துவமான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, திருப்பம் தந்த க்ளைமாக்ஸ் என ரசிகர்களை கவர்ந்து 100 நாள்களுக்கு மேல் ஓடி ஹிட் படமாக அமைந்த ஒரு கை ஓசை வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்