வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது..எல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும்! பாலிவுட் பற்றி ரெஜினா பேச்சு
வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது. எல்லாம் இயற்கையாக இருக்க வேண்டும். பாலிவுட், தென்னிந்திய சினிமா இடையே இருக்கும் ஒற்றுமை, நடிகைகள் சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்து நடிகை ரெஜினா காசண்ட்ரா பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் நடித்து வரும் ரெஜினா காசண்ட்ரா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் தனது 14 வயதில் சினிமாவில் நடிக்க வந்த நிலையில் தற்போதுி பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இவர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இடையே இருக்கும் ஒற்றுமை குறித்து பேசியுள்ளார். அத்துடன் ஒரு நடிகை பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
மொழி முக்கியமான விஷயம்
"பாலிவுட்டில் நடிக்க வேண்டுமென்றால் இந்தி நன்கு தெரிந்திருக்க வேண்டும். நான் பள்ளி படிக்கும்போதே அம்மாவின் தூண்டுதலின் பேரில் இந்தி கற்றேன். அது நன்கு எனக்கு உதவியது. தென் இந்தியாவை சேர்ந்த பல நடிகைகள் மொழி பிரச்னை காரணமாக பாலிவுட்டில் சான்ஸ் கிடைப்பதில் சிரமம் அடைகிறார்கள். தென்னிந்திய நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு மொழியே பெரிய தடையாக இருக்கிறது என்பதில் தவறில்லை.
பாலிவுட் சினிமாவில் வாய் சிங்க் செய்கிறார்கள். தென் இந்திய சினிமாவில் டப்பிங் செய்கிறார்கள். டப்பிங்கை காட்டிலும் நான் வாய்ஸ் சிங்கிங்கை விரும்புகிறேன். ஆனால் மொழி விஷயத்தில் பாலிவுட்டில் எந்த சமரசமும் கிடையாது. உங்களது மொழி சரியாக தெரியவில்லை என்றால் அவர்களது புராஜெக்டில் உங்களை கமிட் செய்ய மாட்டார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அப்படியில்லை. உங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும் உங்களை கமிட் செய்துவிடுவார்கள்"
தென்னிந்திய சினிமாக்களில் அப்படி கிடையாது
"தென்னிந்திய படங்களில் கதையின் ஆணிவேர், கதைக்களத்தின் நிலத்தை பற்றி பேசுவார்கள். ஆனால் பாலிவுட் படங்கள் பெரும்பாலும் நகரத்தை மையப்படுத்தியே இருக்கும். உத்தர பிரதேசத்தில் நடக்கும் கதையாக இருந்தாலும் மும்பையில் நடப்பது போல் காட்டுவார்கள்.
தென்னிந்திய சினிமாக்களில் அப்படி கிடையாது. அப்படி பார்க்கையில் மக்களை சந்திக்கும் இணைப்பு வேறுமாதிரியாக இருக்கும். அதேபோல் தென்னிந்திய சினிமாக்களில் காஸ்டிங் ஏஜெண்ட் என்கிற விஷயமே கிடையாது. அங்கு பிஆர்ஓ, மேனேஜர்கள் தான் அனைத்தையும் பார்த்து கொள்வார்கள்.
வாய்ப்புக்காக என்னை விற்க முடியாது
"இப்போது தென்னிந்திய சினிமாக்களின் மார்கெட்டிலும் டேலண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சிகள் நுழைந்துள்ளன. பாலிவுட் சினிமாக்களில் போட்டி அதிகம். என்னைப் பொறுத்தவரை, ஒரு வேலைக்காக, கேரியருக்காக என்னை விற்கக்கூடிய நபர் அல்ல.
எந்த காரணத்துக்காகவும் என்னால் பேரம் பேச முடியாது. என்னால் லாபி செய்ய முடியாது. ஆனால், இதைச் செய்யாவிட்டால் எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என்பதும் எனக்கு புரியும்.
எனது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது நான் ஆக்ரோஷமாக இல்லை என்று நிறைய பேர் கூறியுள்ளனர். இது எளிதான அல்லது கடினமான விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்கள் கட்டாயம் என எனக்கு உணர்த்தப்படுகிறது.
வாழ்க்கை இயற்கையாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், எந்த அர்த்தமும் இல்லை. இப்போது எனக்காக பரப்புரை செய்யும் ஒரு குழு உள்ளது. நான் ஆடிஷன்களுக்கு தான் செல்கிறேன். இதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
ரெஜினா காசண்ட்ரா படங்கள்
தமிழில் 2005இல் வெளியான கண்ட நாள் முதல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. அதன் பின்னர் அழகிய அசுரா என்ற படத்தில் நடித்தார்.
இதையடுத்து 2010இல் கன்னடத்தில் சூரியகாந்தி என்ற படம் மூலம் ஹீரோயினாக கம்பேக் கொடுத்த இவர், 2012இல் சிவா மனசுல ஸ்ருதி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்த இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார்.
2019இல் வெளியான ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் இந்த ஆண்டில் உத்சவம் என்ற தெலுங்கு படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது.
அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் ரெஜினா, ஜாட், செக்ஷன் 108 என்ற பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் ஃபார்ஸி, ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே போன்ற ஓடிடி சீரிஸ்களிலும் நடித்துள்ளது. இதில் ஜான்பாஸ் ஹிந்துஸ்தான் கே சீரிஸில் லீட் ரோலில் நடித்துள்ளார்.பாலிவுட்டில் முத்திரை பதித்து வரும் தமிழ் நடிகையாக ரெஜினா இருந்து வருகிறார்.