Kedi Billa Gilladi Ranga: ஊதாரி நண்பர்கள் பொறுப்பான குடும்பஸ்தர்கள் ஆகும் கேடி பில்லா கில்லாடி ரங்கா கதை!
Kedi Billa Gilladi Ranga:கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளியாகி 11 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அதுதொடர்பான சிறப்புக்கட்டுரை..
Kedi Billa Gilladi Ranga: விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி மற்றும் ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாண்டிராஜ் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் தான், கேடி பில்லா கில்லாடி ரங்கா. இப்படம் முழுக்க நகைச்சுவை மற்றும் அரசியல் நகர்வினைப் பின்னணியாகக் கொண்டது. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, இசையில் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தன.
கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தின் கதை என்ன?
திருச்சி மாவட்டம், பொன்மலை பகுதியைச் சார்ந்தவர்கள் தேனி கேசவன்(பில்லா கேசவன்), பட்டை முருகன்(ரங்க முருகன்), சின்ட்ரூ ஆகிய மூவர். இவர்கள் அனைவரும் நண்பர்களாக சேர்ந்து திருச்சி பொன்மலைப் பகுதியில் அடிக்கடி பேசி பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இவர்கள் யாருக்கும் சரியான வேலை கிடையாது. ஆனால் அன்றாடச் செலவுகளுக்கு வீட்டின் பெற்றோர் மற்றும் மனைவியின் தயவில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்போது பட்டை முருகனுக்கும் தேனி கேசவனுக்கும் அரசியலில் நுழைந்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவு பிறக்கிறது. அப்போது பட்டை முருகன், ஒரு ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் பார்வதி என்கிற பாப்பாவை பார்த்து ஒரு தலைக் காதலில் விழுகிறான். தேனி கேசவன், மித்ரா மீனலோசினி என்ற பெண்ணிடம் தன் காதலைக் கூறுகிறார். அதன்பின், மித்ராவுக்கும் பார்வதிக்கும் காதல் பற்றி நிறைய குழப்பங்கள் வருகிறது.
அதன்பின்,பார்வதி என்கிற பாப்பா, பட்டை முருகனையும்; மித்ரா மீனலோசினி கேசவனையும் காதலிக்கிறார்.
அதன்பின் உள்ளாட்சித் தேர்தலில் பட்டை முருகன் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார். அதற்கு, அவரது காதலி பாப்பா என்கிற பார்வதி, தான் சேர்த்து வைத்த பணத்தைக் கொடுத்து உதவுகிறார். ஆனால், இறுதியில் பட்டை முருகன் தோற்றுவிடுகிறார். மகன் சரியான பாதையில் செல்லாமல், அரசியலில் நுழைந்து ஊதாரியாகத் திரிவதைப் பார்த்த பட்டை முருகனின் தந்தையான ரயில்வே ஊழியர் ஆசிர்வாதம் ரயில்முன் விழுந்து இறந்துவிடுகிறார். இதன்பின், மனம் மாறும் பட்டை முருகனுக்கு வாரிசு அடிப்படையில் ரயில்வேயில் வேலை கிடைக்கிறது. பொறுப்பான நபராக மாறுகிறார். இதற்கிடையே கேசவனும் மனம் மாறுகிறார்.
அதன்பின் கேசவன் மற்றும் மித்ரா இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர். நீண்ட இழுபறியுடன் இருவீட்டு சம்மதத்துடன் முருகனுக்கும் பாப்பா என்கிற பார்வதிக்கும் திருமணம் நடக்கிறது.
அதன்பின் இருவரும் பொறுப்பான பிள்ளைகளாக மாறுகின்றனர். அப்பாவின் இறப்பால் வேலைபெற்றதை நினைத்து கலங்கும் முருகன் ’அப்பா என் கடவுள்’ என்பதைப் புரிந்துகொள்கிறார். அதன்பின், கேசவனுக்குத் தொழில் செய்ய அவரது தந்தை பணம்கொடுத்து உதவுகிறார். தந்தையால் கலங்கிப்போகும் மகன் கேசவன், தந்தை தன் ஹீரோ என்று எழுதிவிட்டு நகர்கிறான்.படம் முடிகிறது.
இப்படம் பல திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து ஓடியது. ஒரு எளிமையான புரியும்படியான கதையை எடுத்துக்கொண்டு, அதில் நிறைய காமெடிக் காட்சிகளை உருவாக்கி இறுதியில் எமோஷனலான பாணியில் படத்தைக் கொண்டுபோய் முடித்திருப்பார்.
இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான். இவரது இசையில் ஒரு புறம்போக்கு முதல்முதலா, கொஞ்சும் கிளிப் பாடவைச்சான், சுட சுடச்சாரல், தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்பே ஆகியப் பாடல்கள் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அமைந்தன.
டாபிக்ஸ்