சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்

சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 14, 2024 01:58 PM IST

தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாராத்தில் நடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமின் தர சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது கஸ்தூரி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்
சர்ச்சை பேச்சு..முன் ஜாமின் மறுப்பு..கஸ்தூரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் - முழு விவரம்

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் பேச்சு

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடும்போது , "மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.

மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமினில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் மனுதாரருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது.” என்று தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்ததாக கஸ்தூரி தரப்பில் வாதம்

இதையடுத்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் வாதிடும்போது, "சென்னை கூட்டத்தில் மனுதாரர் சிலரை குறிப்பிட்டே அவ்வாறு பேசினார். மொத்த சமூகத்துக்கு எதிராக அவர் பேசவில்லை. இருப்பினும் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் முன் ஜாமின் வழங்க வேண்டும்” என்று கோரினார்.

அந்தப்புரம் என பேசியது ஏன்?

அப்போது நீதிபதி, “குறிப்பிட்ட சிலர் குறித்து தான் மனுதாரர் அவ்வாறு பேசினார் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட சிலரை பற்றி பேசும் போது அந்தப்புரம் ஏன் வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? மனுதாரர் வருத்தம் தெரிவித்துள்ள வெளியிட்டுள்ள பதிவு, அவர் பேசியதை நியாயப்படுத்துவது போல் உள்ளது. அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும்

இதைத்தொடர்ந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், "தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்னை உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலங்கானா தான்.

திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.

சென்னை கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன் ஜாமின் வழங்கக்கூடாது" என்றார்.

முன் ஜாமின் தள்ளுபடி

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள் என்று கூறியிருந்தார். நீதிபதி கூறுகையில், தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், மனுதாரர் தன்னை கல்வியறிவு பெற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என தெரிவிக்கிறார். ஆனால் அவர் இப்படியொரு கருத்தை தெரிவித்தது ஏன்?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, "கஸ்தூரி அவதூறு பேச்சு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன. சமூக வலைதளங்களில் இருந்து கஸ்தூரி பேசிய விடியோக்கள் நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வியை எழுப்பியதுடன், இந்த ஜாமின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்று (நவ.14) ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், கஸ்தூரியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

முன்னதாக, தன் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்த நடிகை கஸ்தூரி, தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து தலைமறைவு ஆனார். போலீசார் தொடர்ந்து கஸ்தூரியை தேடி வந்த நிலையில், அவரது தரப்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கஸ்தூரிக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து போலீசாரால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.