போக்சோ வழக்கு..பாதிக்கப்பட்ட பெண் வயதில் குளறுபடி! நிபந்தனையுடன் ஜானி மாஸ்டருக்கு ஜாமின்
போக்சோ வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் ஜானி மாஸ்டருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வயதில் குளறுபடி இருப்பதாக வாதம் முன் வைக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பிரபல நடன இயக்குநரான ஜானி மாஸ்டருக்கு ஜாமின் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சல்குடா மத்திய சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் ஜானி மாஸ்டர் கைது
மைனர் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதில் குளறுபடி
இதையடுத்து இந்த வழக்கில் ஜாமின் கோரி ஜானி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் இடைக்கால ஜாமின் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ஜானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப் ரெட்டி, "குற்றம் சுமத்திய பெண்ணின் வயது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட இந்த புகாரில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் நாகேஷ்வர் ராவ் தனது வாதத்தில், ஜாமீன் மனுவை எதிர்த்தார் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வயது விசாரணையின் போது தீர்மானிக்கப்படும் என்றும், அதுவரை ஜானி மாஸ்டருக்கு ஜாமின் வழங்ககூடாது" என கோரிக்கை வைத்தார்.
நிபந்தனை ஜாமின்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜுவ்வாடி ஸ்ரீதேவி, ஜானிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கினார். அவர் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும், வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும, பாதிக்கப்பட்டவரை தொடர்பு கொள்ளவோ, ஊடகங்களில் ஆஜராகி வழக்கு குறித்து விவாதிக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ கூடாது என்று உத்தரவிட்டார்.
திரும்ப பெறப்பட்ட தேசிய விருது
70வது தேசிய விருது வழங்கும் நிகழ்வு இந்த மாதம் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜானி மாஸ்டர், நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பிடித்த மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைந்ததற்காக சிறந்த நடன இயக்குநர் தேசிய விருதை மற்றொரு நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணனுடன் வென்றார்.
இந்த விருதை பெறுவதற்காக சிறையில் இருந்த ஜானி மாஸ்டருக்கு நான்கு நாள்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட தேசிய விருது திரும்ப பெறப்பட்டது.
புஷ்பா 2 படத்திலிருந்து நீக்கம்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2: தி ரூல் படத்தில் இடம்பிடித்த சூசிகி என்ற பாடலுக்கு ஜானி மாஸ்டர் டான்ஸ் அமைத்திருந்தார். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பிடித்த மற்றொரு குத்து பாடலுக்கும் அவர் டான்ஸ் அமைப்பதாக இருந்த நிலையில், நீக்கப்பட்டார். ஜானி மாஸ்டருக்கு பதிலாக வேறொருவரை வைத்து அந்த பாடலுக்கு நடனம் அமைக்க தேர்வு செய்திருப்பதாக படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
முன்னதாக, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜானி மாஸ்டர், "என்னால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவள் ஒரு நிகழ்ச்சி மூலம் எனக்கு அறிமுகமானார்.
மைனராக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் பொய் சொல்கிறார். அவருடைய திறமையை அடையாளம் கண்டு எனக்கு உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன்.
மனரீதியாக டார்ச்சர்
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் என்னை மனரீதியாக டார்ச்சர் செய்தார். பலமுறை மிரட்டலும் விடுத்தார்.
எனக்கு எதிராக சதி நடக்கிறது. யாரோ பின்னால் இருந்து எனக்கு எதிராக சதி வேலை செய்கிறார்கள். எனது வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார்கள்" என விசாரணையின் போது அவர் கூறியுள்ளார்.

டாபிக்ஸ்