தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Anbumani Ramadoss: ’மது கடைகளுக்கு சரக்கு கொடுப்பவர்தான் ஜெகத்ரட்சகன்!’ அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Anbumani Ramadoss: ’மது கடைகளுக்கு சரக்கு கொடுப்பவர்தான் ஜெகத்ரட்சகன்!’ அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Apr 05, 2024 10:10 PM IST

”திமுகவினருக்கு உண்மையில் கலைஞரின் மீது அன்பு இருந்தால், நீங்கள் உங்களின் வாக்குகளை வழக்கறிஞர் பாலுவுக்கு அளிக்க வேண்டும். இதைவிட உங்களுக்கு வேறு காரணம் தேவையா?”

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது பேசிய அவர், வழக்கறிஞர் பாலு வெற்றி பெற்றால், மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக வெற்றி பெறுவர். இந்தியா வளர்ச்சி பெரும். இந்த தேர்தலில் 57 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக, அதிமுக வேண்டாம் என்ற நாம் முக்கிய முடிவை எடுத்துள்ளோம். இவர்கள் அல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணி அவசியமானது, காலத்தின் கட்டாயம். ஏன் என்பதை நான் சொல்ல கடமைப்பட்டாலும், அதற்கு முன்பு வேட்பாளர் பாலு அவர்களைப் பற்றியும் சொல்லவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

கே.பாலு மிக சுறுசுறுப்பான நபர், இளைஞர், வழக்கறிஞர். எத்தனையோ வழக்குகளை கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் வென்றுள்ளார். அவர் எதிர்கொள்ளும் வழக்கில் எப்படியேனும் வெற்றிபெறுவார். அவற்றில் பல உதாரணம் என்னால் கூறமுடியும். இவற்றில் எனக்கு பிடித்தது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடையால், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள் என்ற செய்தி வந்தவுடன், அதனை மூடவேண்டும் என அய்யா பாலுவிடம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யக்கூறினார். வழக்கை நடத்த காரணங்கள் சொன்னதும், சென்னை உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக்கடையை மூட உத்தரவு பிறப்பித்தது. எவ்வுளவு பெரிய வெற்றி இது.

நீங்களும் பல காலமாக டாஸ்மாக்கை மூடக்கோரி கேட்டீர்கள், ஆனால், இங்கு மதுபானக் கடையை மூடிய வெற்றி வேட்பாளர், கதாநாயகன் இங்கு நின்றுகொண்டு இருக்கிறார். இவரை விட வேறு வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா?. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதிமுக, திமுக டாஸ்மாக்கை மூட விட்டு விடுவார்களா? மேல்முறையீடு செய்தபோதும், பாலு நேரடியாக டெல்லிக்கு சென்று வாதாடி, உச்சநீதிமன்றத்தில் மிகப்பெரிய தீர்ப்பை வாங்கினார். அதன்படி, இந்தியாவில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை என எங்கும் நெடுஞ்சாலையில் இருக்கும் மதுக்கடையை மூடவேண்டும் என்ற ஆணையை வாங்கினார். இதனை நாங்களே எதிர்பார்க்கவில்லை. அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் 6500 மதுக்கடையில் 3321 மதுக்கடையை உடனடியாக மூடினார்கள். இந்தியாவிலேயே 90 ஆயிரம் மதுக்கடைகளை மூடிய வழக்கறிஞர் நமது வேட்பாளர் பாலு.

மதுக்கடைகளுக்கு சரக்குகளை கொடுப்பவர் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன். அவர் மதுக்கடைகளுக்கு சரக்குகளை கொடுக்கும் மது ஆலை உரிமையாளர். சாராய பேக்டரி வைத்து நடத்தி வருகிறார். டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபானத்தை அவர்தான் விநியோகம் செய்கிறார். மிகப்பெரிய செல்வந்தர். நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். உங்களுக்கு டாஸ்மாக்கை மூடிய வழக்கறிஞர் பாலு வேண்டுமா? சாராயக்கடை நடத்தும் ஜெகத்ரட்சகன் வேண்டுமா?. உங்களுக்கு பாலுதான் வேண்டும்.

திமுக காரர்களிடம் நான் சொல்லும் செய்தி இது. கலைஞர் மறைந்த நேரத்தில், அவரின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவகம் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் ஆசைப்பட்டார்கள். ஆனால், அன்று ஆளும் அதிமுக அதற்கு முடியாது என கூறியது. ஆளுநர் அலுவலகம் அருகில், காமராஜ் மண்டபம் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்கள். இதனை எதிர்த்து திமுக சார்பில் அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதற்கு தடை ஒன்று இருந்தது. அய்யா கூறி, வழக்கறிஞர் பாலு மூலமாக சென்னை கடற்கரையை பொதுமக்கள் தவிர்த்து, வேறு எதற்கும் பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என மனுதாக்கல் செய்தோம்.

மறைந்தது கலைஞர் அல்லவா? அவர் சமூக நீதிக்கு உறுதுணையானவர், எம்.பி.சி-க்கு அய்யா போராடி, கலைஞர் கையெழுத்து வழங்கி சட்டமாக கொடுத்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது காந்தி, கையெழுத்துப்போட்டது மவுண்ட் பேட்டன் என்பதை போல, எம்.பி.சிக்கு போராடியவர், அதனை பெற்றுத்தந்தவர் மருத்துவர் அய்யா. அதற்கு கையெழுத்து போட்டவர் கருணாநிதி. மெரினா கடற்கரையில் கலைஞரை அடக்கம் செய்ய திமுகவினருக்கு, ஸ்டாலினுக்கு விருப்பம் என்பதால், சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் பாலு எனக்கு தொடர்பு கொண்டு, நாம் தொடுத்த வழக்கை திரும்ப பெற்றால் தான், நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க முடியும் என்று கூறினார். அய்யாவுக்கு தொடர்புகொண்டால் அவர் உறங்கிவிட்டார். என்ன செய்வது என பாலு கேட்டார். நான் ஒருகணம் கூட யோசனை செய்யாமல், வழக்கை திரும்ப பெறுங்கள் என்று கூறினேன். அய்யா கேட்டால் நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறினேன். பாலு வழக்கை திரும்ப பெறுவதாக கூறியதும், நீதிபதிகள் அண்ணா நினைவிடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய அனுமதி வழங்கினர். இந்த தொகுதியை சேர்ந்த திமுகவினருக்கு உண்மையில் கலைஞரின் மீது அன்பு இருந்தால், நீங்கள் உங்களின் வாக்குகளை வழக்கறிஞர் பாலுவுக்கு அளிக்க வேண்டும். இதைவிட உங்களுக்கு வேறு காரணம் தேவையா?.

இங்குள்ள இஸ்லாமியர் சமுதாயத்தினரை பார்த்து நான் கேட்கிறேன். இஸ்லாமிய சமுதாயத்திற்காக மருத்துவர் அய்யா 30 ஆண்டுகளை கடந்து போராடி வருகிறார். நாங்கள் எந்த கூட்டணிக்கு சென்றாலும், உங்களின் உரிமைகளை மீட்டெடுப்போம். இது எங்களின் கடமை. இலட்சியம் மற்றும் கொள்கையை நாங்கள் விட்டுத்தரமாட்டோம். இந்த தொகுதியை பொறுத்தமட்டில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு எனது ஒரு கேள்வி.

உங்களின் புனிதமான திருக்குரான் புத்தகத்தில், "மது தயாரிப்பவர், தயாரிக்க கூறுபவர், அருந்துபவர், அருந்த தருபவர், மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர், எடுத்துச்செல்ல கூறுபவர், விற்பவர், மதுவை வாங்கி செல்பவர், விற்பவர், அன்பளிப்பாக தருபவர், மதுவிற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சபிக்கப்பட்டவர்கள் என நபிகள் நாயகம் கூறுகிறார்கள். இதைவிட இஸ்லாமிய சகோதரர்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டுமா? உங்களின் திருக்குரானில் மது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்யக்கூடாது என கூறும் திருகுரானின் படி நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள்.

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் குரானுக்கு எதிராக செயல்படுகிறார். உங்களின் திருக்குரானை எதிர்த்து வாக்குகளை செலுத்துவீர்களா? உங்களுக்கு மனசாட்சி இருந்தால், திருகுரானில் சொல்லும் அத்தனையும் பின்பற்றும் பாமக வேட்பாளர் பாலுவுக்கு உங்களின் வாக்குகளை செலுத்துங்கள். உங்களின் திருக்குரானில் சொல்வதைப்போல மதுவை ஒழிக்கும் பணியில் பாலு ஈடுபட்டுள்ளார், அதனை செய்தும் காண்பித்துள்ளார். ஆனால், ஜெகத்ரட்சகனோ உங்களின் கொள்கைக்கு எதிராக மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் மது முதலாளி. இந்த தேர்தலுக்காக இஸ்லாமிய சகோதரர்கள் உங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்கப்போகிறீர்களா?. இந்த அன்புமணியின் கேள்விகள் உங்களின் மனதை வருத்தும், அது நியாயமான கேள்வி.

ஜெகத்ரட்சகன் மிகப்பெரிய பணமுதலாளி, பணமூட்டை, 15 ஆண்டுகாலமாக அவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இன்னும் 5 ஆண்டுகாலம் உங்களின் வாக்குகளை வீணாக்கப்போகிறீர்களா? 15 ஆண்டுகளாக அவரை தேர்வு செய்து வாக்குகளை வீணாக்கிவிட்டீர்களே. அவரால் இந்த தொகுதிக்கு எந்த பலனாவது இருந்ததா? சிந்தித்து பாருங்கள். இந்த முறையும் உங்களின் வாக்குகளை வீணாக்கப் போகிறீர்களா?. வழக்கறிஞர் பாலுவைப்பற்றி இன்னும் பல நல்ல விஷயங்கள் சொல்லலாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்களே நீங்கள் மிகப்பெரிய தவறு செய்தீர்கள். திமுக கூட்டணியை 38 தொகுதியில் வெற்றி பெறவைத்தீர்கள். இவர்கள் 38 பெரும் டெல்லிக்கு சென்று என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? தமிழ்நாட்டின் நலனுக்கு என்ன செய்தார்கள்? ஒன்றும் இல்லை. மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்.

ஆற்காடு மக்கள் இதனை சிந்தித்துப்பார்க்க வேண்டும். முன்னாள் இரயில்வேத்துறை இணை அமைச்சர் அரங்க.வேலு, 20 ஆண்டுக்குக்கு முன் 2004 ல் அவரை தேர்வு செய்தீர்கள். மிகமிக நேர்மையானவர், புரட்சியாளர். இத்தொகுதியில் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்தார். அதன்பிறகு வந்த ஜெகத்ரட்சகன் என்ன செய்தார்? மனசாட்சி இருந்தால் நீங்களே சிந்தித்து பாருங்கள். பணத்தை மட்டும் ஜெகத்ரட்சகன் நம்பியிருக்கும் நிலையில் நமது வேட்பளார் பாலு பலத்தை மட்டும் நம்பி இருக்கிறார்.

கடந்த 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து சீரழித்துவிட்டது. மது, போதைப்பொருட்கள் வீதி வீதியாக, ஊர் ஊராக, கிராமம் கிராமம் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் கஞ்சா, ஹெராயின் என எல்லாமே தமிழ்நாட்டில் கிடைக்கிறது. மது குடித்தால் நாற்றம் அடிக்கும் தெரிந்துவிடும், போதைப்பொருட்கள் பழக்கம் உங்களின் குழந்தையை சூழ்ந்துவிட்டது என்பது புரியவே 2 ஆண்டுகள் ஆகிவிடும். இவ்வுளவு காலம் கடந்த பின் அவர்களை மீட்டெடுக்க முடியாது. தற்போதைய நிலையில் பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். ஸ்டாம்ப் பேப்பர் போல உள்ள போதைப்பொருளை வாயில் வைத்து சப்பிகொண்டு இருக்கிறார்கள். இதனால் அதிகமாக பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவனின் வாழ்க்கையே நாசமாகப்போகிறது. அவர்களை எப்படி காப்பாற்றப்போகிறோம் என எனக்கு பதற்றமாக இருக்கிறது.

திமுக, அதிமுகவை நம்பினால் குடும்பம், எதிர்காலம் என அனைத்தையும் அழித்துவிடுவார்கள். இரண்டு கட்சியும் சேர்ந்து அடுத்த தலைமுறையை அழித்து விடுவார்கள். ஏற்கனவே 3 தலைமுறையை நாசப்படுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டை காப்பாற்ற, இளைஞர்களை காப்பாற்ற உங்களை வணங்கி கேட்கிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். தேர்தல் நேரத்தில் மூட்டை மூட்டையாக பணம் கொடுத்தாலும் வேண்டாம் என்று கூறுங்கள். அதனை ஒதுக்கி தள்ளுங்கள். நல்ல வேட்பாளர்களை அய்யா கொடுத்துள்ளார். அதிமுக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது, திமுகவின் மீது மக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள். திமுக எப்படி என கேட்டால், கொள்ளை அடிக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்., அதிமுக குறித்து கேட்டால் அது உடைந்து போய்விட்டது, முடிந்து விட்டது என கூறுகிறார்கள். அதனால்தான் உங்களிடம் கேட்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

திமுக, அதிமுக அல்லாது 2026 ல் கூட்டாட்சி தமிழ்நாட்டில் நடக்கும். அதற்கு முன்னோட்டம் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்த முடிவு அடுத்த தேர்தலில் எதிரொலிக்கும். உங்களின் பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டும் அல்லவா? போதையை ஒழிக்க வேண்டும் அல்லவா? மாற்ற வேண்டும் வேண்டுமா? சாராயக்கடையை மூட வேண்டுமா? ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும் அல்லவா? அவை வேண்டும் என்றால் நீங்கள் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

விவசாயிகள் எனது அப்பா, அம்மாவுக்கு பின் கடவுள். விவசாயிகள் மகிழ்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ளனரா? இல்லையே. பாவப்பட்ட பிறவியாக இருக்கிறார்கள். திமுக, அதிமுகவுக்கு அதனை பற்றிய கவலை இல்லை. எங்களின் அய்யா விவசாயத்திற்கு எப்படியெல்லாம் போராடினார். முன்பு பாலாறு ஓடியது, இன்று பாலாறா ஓடுகிறது?. பால் போன்ற ஆறு இன்று தண்ணீர் இல்லாமல் சாக்கடை, ரசாயன கழிவு, குரோமியம் ஓடுகிறது. மணலை காணவில்லை. வடிவேலு பணியில், இன்னும் கொஞ்ச நாளில் ஆற்றைக்காணும் என நாம் சொல்லப்போறோம். பாலாறை இரண்டு கட்சியும் சேர்ந்து முடித்து விட்டனர். இதனை காப்பாற்ற 1996 லேயே 5000 இளைஞர்களை வைத்து 3 நாட்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அன்று இரண்டு கட்சியும் அய்யா கூறியதை கேட்டிருந்தால் இன்று பாலாறு செழிப்பாக இருந்திருக்கும்.

பாலாற்றில் தடுப்பணைகள் ஆந்திரா, கர்நாடகாவில் காட்டுகிறார்கள். இவர்களுக்கு தெரியவில்லை. பிரிக்கப்படாத வேலூர் மாவட்ட அமைச்சர் துரைமுருகனின் சொந்த மாவட்டம் இது. அமைச்சர் துரைமுருகன் சொந்த தொகுதியில் ஒரு தடுப்பணை கட்டியுள்ளாரா? நாங்கள் போராட்டம் செய்த பின்னர் தான் 2 தடுப்பணை, வேறெங்கோ பயனில்லாத இடத்தில் காட்டியுள்ளார்கள். மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள். வாலாஜாவில் 1848 இல் வெள்ளைக்காரர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது, கர்நாடகாவில் 83 கி.மீ மட்டும் ஓடும் பாலாற்றில் 18 இடத்தில் தடுப்பணை உள்ளது, ஆந்திராவில் 22 கி.மீ ஓடும் பாலாற்றில் 32 இடத்தில் தடுப்பணை உள்ளது. புதிதாக ஒன்று கட்டுவதற்கு துடிக்கிறார்கள். அதனை எதிர்த்து குரல் கொடுத்தது அய்யா தான். தமிழ்நாட்டில் 213 கி.மீ தூரம் பாலாறு ஓடுகிறது. வெள்ளைக்காரர் காலத்தில் கட்டப்பட்ட வாலாஜா தடுப்பணை ஒன்று உள்ளது. காவேரிப்பாக்கம் ஏரி வரை செல்லும் நீர், அங்கிருந்து பரந்தூர் விமான நிலைய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு சென்று சென்னை மக்கள் குடிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி செல்கிறது. இதுபோன்ற பல திட்டங்கள் உள்ளன.

பாலாற்றையும் தென்பெண்ணையையும் இணைக்க வேண்டும். தென்பெண்ணையில் ஆண்டுக்கு 3 முறை வெள்ளம் போகிறது. 100 கி.மீ இணைத்துவிட்டால் நீர் நமக்கு கிடைக்கும். இவை சாதாரணமாக செய்ய வேண்டிய திட்டங்கள். இவை குறித்து இரண்டு கட்சிகளுக்கும் தெரியாது. அடுத்த தேர்தலில் அவர்கள் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டுமே யோசிக்கத் தெரியும். நாம் அடுத்த தலைமுறையை எப்படி பாதுகாக்கலாம்? முன்னேற்றலாம் என்பதை யோசித்து திட்டங்களை செயல்படுத்துவோம். அதனாலேயே இக்கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நீங்கள் சிந்தித்து நல்ல முடிவெடுக்க வேண்டும். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு, வழக்கறிஞர் பாலு நேர்மையானவர், உண்மையானவர், போராளி.. மருத்துவர் அய்யாவின் ஆசிபெற்றவர். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசி பெற்றவர், ஜிகே வாசன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், ஏசி சண்முகம், தேவநாதன், பாரிவேந்தர் உட்பட பல தலைவர்களின் நல்லாசியை பெற்றவர். நீங்கள் அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வழக்கறிஞர் பாலுவை வெற்றிபெறச்செய்ய வேண்டும்" என அன்புமணி பேசினார்.

WhatsApp channel