தமிழ் செய்திகள்  /  Elections  /  Lok Sabha Polls: Bjp Announces Seat-sharing Strategy For Northeast India

Lok Sabha Polls: ‘மணிப்பூர் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பாஜக போட்டியிடாது!’ பின் வாங்கிய பாஜக! காரணம் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 12:56 PM IST

”நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாது என வடகிழக்கு மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளர் சம்பித் பித்ரா அறிவித்துள்ளார்”

பாஜக
பாஜக (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக மாநில வாரியாக மேற்கொண்டு வருகிறது. கட்சிகள் உடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து வருகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேலகயா, நாகலாந்துக்கு இதுவரை பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களில் பாஜக போட்டியிடாது என வடகிழக்கு மாநிலங்களுக்கான பாஜக பொறுப்பாளர் சம்பித் பித்ரா அறிவித்துள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுக்கு பாஜக ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறி உள்ளார்.

மேலகாயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளிலும், மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணிக்கு ஒரு தொகுதியிலும், நாகாலாந்தில் ஒரு தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சிக்கும் பாஜக ஆதரவு அளிக்கும் என அவர் கூறி உள்ளார்.

மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், "ஜே.பி. நட்டாவின் வழிகாட்டுதலின் கீழ் பாஜகவின் முடிவைப் பின்பற்றி, எங்கள் கூட்டணிக் கொள்கைகளை நிலைநிறுத்தி, 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளி மணிப்பூர் தொகுதியில் நாகா மக்கள் முன்னணி நிறுத்த உள்ள மக்களவை வேட்பாளர்களுக்கு பாஜக தனது ஆதரவை வழங்கும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வடகிழக்கு இந்தியாவின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயாவில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கலவரம் நடந்து உள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 

முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

அதேபோல் நாகாலாந்து மாநிலத்திலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், மேகாலயா மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்று இருந்தன.

மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் நாகா மக்கள் முன்னணி (NPF) தலா ஒரு இடங்களை கைப்பற்றி இருந்தன.  பாஜகவின் ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள் மணிப்பூர் தொகுதியிலும், நாகா மக்கள் முன்னணி அமைப்பின் வேட்பாளர் லோர்ஹொ எஸ் ப்ஃசோ வெளி மணிப்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு லோக்சபா தொகுதியில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் டோகேஹோ யெப்தோமி வெற்றி  பெற்று இருந்தார்.

மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட நிலையில் பாஜக நேரடியாக போட்டியிடாமல் மாநிலக் கட்சிக்கு ஆதரவு தரும் முடிவை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

WhatsApp channel