HT MP Story: ‘வேலூரில் கோட்டை விடுமா திமுக? மிரட்டும் அதிமுக! விரட்டும் ஏசிஎஸ்!’ கள நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘வேலூரில் கோட்டை விடுமா திமுக? மிரட்டும் அதிமுக! விரட்டும் ஏசிஎஸ்!’ கள நிலவரம் இதோ!

HT MP Story: ‘வேலூரில் கோட்டை விடுமா திமுக? மிரட்டும் அதிமுக! விரட்டும் ஏசிஎஸ்!’ கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 02:04 PM IST

“காங்கிரஸ் கட்சி 6 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 2 முறையும், காமல்ன் வீல் கட்சி ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது”

வேலூர் தொகுதி கள நிலவரம்
வேலூர் தொகுதி கள நிலவரம்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தினாங்குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு, ஆரணி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது.

அதிகபட்சமாக காங்கிரஸ் 6 முறை வெற்றி!

காங்கிரஸ் கட்சி 6 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 2 முறையும், காமல்ன் வீல் கட்சி ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. 

கடும் சவால்களுக்கு மத்தில் வென்ற கதிர் ஆனந்த்!

கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட புகாரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485,340 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றார். 

தற்போது யார்?

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் திமுக சார்பில் சிட்டிங் எம்பியான கதிர் ஆனந்த் வேட்பாளராக களம் இறங்குகிறார். 

அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதியும், புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்திலும் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

கள நிலவரம்!

திமுக கூட்டணி பலம், மோடி அரசின் மீதான மக்கள் அதிருப்தி, வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நிறைந்துள்ள சிறுமான்மையினர் வாக்குகள், சொந்த சமூகம் உள்ளிட்டவை திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

திமுக அரசின் மீதான மக்கள் அதிருப்தி, அதிமுகவின் கட்சி கட்டமைப்பு, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது உள்ளிட்ட கூறுகள் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. 

2014, 2019 தேர்தல்களில் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியுற்றதால் ஏற்பட்ட பரிதாபம், பண பலம், தனிநபர் செல்வாக்கு உள்ளிட்டவை பாஜக வேட்பாளராக களம் இறங்கும் ஏசி சண்முகத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. 

இளம் தலைமுறை வாக்காளர்கள், திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்று தேடும் மக்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பலமாக உள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

Whats_app_banner
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.