Duraimurugan: ’திமுக உருவாக வேலூர்தான் காரணம்!’ மணியம்மையை சுட்டிக்காட்டி துரைமுருகன் பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Duraimurugan: ’திமுக உருவாக வேலூர்தான் காரணம்!’ மணியம்மையை சுட்டிக்காட்டி துரைமுருகன் பேச்சு!

Duraimurugan: ’திமுக உருவாக வேலூர்தான் காரணம்!’ மணியம்மையை சுட்டிக்காட்டி துரைமுருகன் பேச்சு!

Kathiravan V HT Tamil
Sep 17, 2023 08:42 PM IST

“பாராளுமன்றத் தேர்தல் தனித்து வந்தாலும் சரி, சட்டமன்றத்தோடு சேர்ந்து வந்தாலும் சரி, பஞ்சாயத்துடன் சேர்ந்து வந்தாலும் சரி திமுகக்காரன் தயார்”

வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

அந்த வகையில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது - மீஞ்சூர் க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது - ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது - பெங்களூரு ந.இராமசாமிக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசியது, முப்பெரும் விழாவை வேலூரில் நடத்த அனுமதி தந்த தலைவருக்கு மாவட்டம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

வேலூர் மாவட்டத்தின் சார்பில் என்று நான் சொன்னாலும் இது வட ஆற்காடு மாவட்டத்தின் சார்பில்தான் நான் நன்றி தெரிவிக்கிறேன். திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என நிலத்தில் கோடுபோட்டு இருக்கலாம்; ஆனால் நாங்கள் நெஞ்சில் கோடுபோட்டுக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் வட ஆற்காடு மாவட்டத்துக்காரன் என்று சொல்ல பெருமைப்படுகிறோம்.

வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற முதல் வேட்கை வேலூர் கோட்டையில்தான் ஏற்பட்டது. வெள்ளைக்காரனை எதிர்க்கலாம் என்ற உணர்வு மற்றவர்களுக்கு வந்தது.

மயிலாடுதுறை சத்தியசீலன் இடைத்தேர்தல் ஒன்றில் எம்ஜிஆருக்கு முதல் தோல்வியை கொடுத்தவர். சுந்தரம் நீண்ட நெடுங்காலம் எங்களோடு அமைச்சராக இருந்தவர், வீரம் செறிந்தவர். ராமசாமி, பெங்களூருக்கார்; அவர்கள் தண்ணீர் தராவிட்டாலும் நமக்கு ஆதரவாக இருப்பவர். தென்மாவட்டங்களில் ஐ.பி., என்றால் போதும் அது ஒரு அடையாளம், மலிகா கதிரவன் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் வீரனாக திகழ்ந்தவர்.

திமுக பிறந்ததற்கு இந்த மாவட்டம்தான் காரணம். இந்த மாவட்டம் இல்லாவிட்டால் திமுக இருந்து இருக்காது. பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார் மணியம்மையை திருமணம் செய்துக் கொண்டார். அண்ணா அவர்கள் இது பொருந்தாத திருமணம் என அறிக்கைவிட்டார். திமுக உருவானது.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு’ என்ற தத்துவத்தை வேலூரில்தான் அண்ணா சொன்னார். கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில்தான் நம்முடைய உயிர் பிரச்னையான ’திராவிட நாடு’ கோரிக்கையை அண்ணா ஒத்திவைத்தார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்; நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும் என்று கூறினார். அப்படி ஒத்திவைத்ததால்தான் நாடு 75ஆவது பவளவிழாவை கொண்டாடி வருகிறது.

அடுத்து எப்போது தேர்தல் வருமென்று சொல்லவில்லை; என்னை பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தல் தனித்து வந்தாலும் சரி, சட்டமன்றத்தோடு சேர்ந்து வந்தாலும் சரி, பஞ்சாயத்துடன் சேர்ந்து வந்தாலும் சரி திமுகக்காரன் தயாராகிவிட்டான்.

ரத்தத்தை கீரி, இதயத்தை வெளியே எடுத்து வைத்து போராடும் திறமை திமுகக்காரனிடம் மட்டும்தான் உண்டு. யாரிடம் வேண்டுமானாலும் மோதலாம் ஆனால் திமுக உடன் மோதுபவர்கள் ஒரு முறைக்கு மூன்று முறை யோசித்துவிட்டு மோதுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.