Sarathkumar: ’மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?’ பாஜகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு சரத்குமார் டென்ஷன்!-asking who else than wife actor sarathkumars response to joining bjp - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sarathkumar: ’மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?’ பாஜகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு சரத்குமார் டென்ஷன்!

Sarathkumar: ’மனைவியிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது?’ பாஜகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு சரத்குமார் டென்ஷன்!

Kathiravan V HT Tamil
Mar 13, 2024 03:16 PM IST

”Sarathkumar: 37 ட்விட்களை போட்டு திமுகவினர் விமர்சிக்கின்றனர். கலைஞர் மறைவுக்கு கூட இப்படி ட்வீட் போடவில்லை என சரத்குமார் கூறினார்”

பாஜகவில் இணைந்த நடிகர் சரத் குமார் செய்தியாளர் சந்திப்பு
பாஜகவில் இணைந்த நடிகர் சரத் குமார் செய்தியாளர் சந்திப்பு

தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ள நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 22 ஆண்டுகள் எனது அரசியல் பயணத்தில் 16 ஆண்டுகள் சமத்துவ மக்கள் கட்சி தலைவராக பயணித்துக் கொண்டிருந்தேன். 1996ஆம் ஆண்டு அன்று இருந்த ஆட்சியை அகற்ற திமுக-தமாகாவுக்கு தேர்தல் பரப்புரை செய்தேன். அப்போதே என்னால் 25 சீட்டுகள் கேட்டிருக்க முடியும்; ஆனால் நான் அதை கேட்கவில்லை. இன்றைக்கு மோடி அவர்கள் மூன்றாவது முறை பிரதராக வர வேண்டும் என்ற அடிப்படையில் இணைப்பு விழா நடைபெற்றுள்ளது என்றார். 

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பாஜகவின் முன்னோடிகள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம்; அவர்கள் சில கருத்துகளை வைத்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை கேட்பீர்களா?

கூட்டணியில் இருக்கும்போது தொகுதிகளை அதிகமாக கேட்கலாம்; குறைத்து கேட்கலாம் ஆனால் கட்சியில் இணைந்த பிறகு அவர்கள் சொல்வது நாம் கேட்க வேண்டும். 

சமகவை பாஜகவில் இணைத்து குறித்து நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

ஒரு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதில் சொல்லலாம்; ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் என்னுடைய கருத்து ஒன்றை வைரல் ஆக்குகிறார்கள். நான் யாரை பற்றியும் தரக்குறைவாக பேசவில்லை;

இரவு வந்து தூக்கம் வரவில்லையாம்; எந்திரிச்சி மனைவி கிட்ட கருத்து கேட்டாரம் என்கிறார்கள். மனைவிகிட்ட கருத்து கேட்காமல் யாரிடம் கருத்து கேட்பார்கள். 

பாஜகவில் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறீர்களா? 

நான் பொறுப்புக்காக வரவில்லை; பொறுப்பாக நடந்து கொள்ள வதேன். 

உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரி கோரிக்கைகள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறதே?

எல்லோரும் என்ன வேணாலும் நினைக்கலாம்; நீங்களே நல்லா போயிட்டு இருக்கே; ஒரு சிண்டு முடிந்து வைப்போம் என்ற எண்ணத்தில் உள்ளீர்கள்.  37 ட்விட்களை போட்டு திமுகவினர் விமர்சிக்கின்றனர். கலைஞர் மறைவுக்கு கூட இப்படி ட்வீட் போடவில்லை என சரத்குமார் கூறினார். 

பாஜகவுடன் சமகவை இணைத்தது ஏன்?-சரத்குமார் விளக்க அறிக்கை!

பாஜகவுடன் கட்சியை இணைத்தது ஏன் என விளக்கி சரத்குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில்,  பலரும் பலவிதமாக இந்த இணைப்பைப் பற்றி சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்

1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்ததே என் அரசியல் பயணத்தின் துவக்கம்.

அரசியல் அனுபவம் அதிகம் இருந்த போதும், அன்று நான் கொடுத்த ஒற்றை எதிர்ப்பு அறிக்கை, திமுகவின் முன்னோடிகளை என் இல்லம் நோக்கி பயணிக்கச் செய்தது.

எந்த ஒரு சுயலாபத்திற்காகவும், சுய நலனுக்காகவும் அல்லாமல் எந்த ஒரு அரசியல் சூழ்ச்சியும் அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அவர்களின் கூட்டணியான தமிழ் மாநில காங்கிரஸையும் ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தியதன் பங்கு என்னையும், என்னைச் சார்ந்த ரசிக பெருமக்களையும், தமிழக மக்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதன் பிறகு கலைஞர் அவர்களால் ஈர்க்கப்பட்டு, அழைக்கப்பட்டு முதன்முறையாக ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆனேன். அரசியல் பாடம், அரசியல் அணுகுமுறை இவை அனைத்தும் கலைஞர் அவர்களுடன் பயணித்ததில் கற்றுக் கொண்டேன். அங்கு நடந்த சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு, அக்கட்சியில் இருந்து விலகி, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.

அங்கும், திமுகவில் இருந்து விலகக் காரணமாய் இருந்த சிலரைப் போல், அறிவும், ஆற்றலும் இருப்பவரை எப்படி கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிந்தித்த சிலர், புரட்சித்தலைவி அவர்களின் கட்சியில் இருந்து நான் விலக காரணமானார்கள்.

அதன் பிறகு 2007 – ஆகஸ்ட் 31 இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உருவானது. 16 ஆண்டுகள் அரசியல் பயணம். பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக, என் சமத்துவ சொந்தங்களுக்கு குடும்பத் தலைவராக மக்கள் சேவையில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு, பல மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எந்த ஒரு பேருதவியும் இல்லாமல், நான் நடித்து ஈட்டிய பொருளாதாரத்தின் அடிப்படையில், நேற்று வரை என் இயக்கத்தை நடத்தி மக்கள் பணியில் என்னை அர்ப்பணித்திருக்கின்றேன். அப்பழுக்கற்ற பெருந்தலைவர் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய வேண்டும் என செயல்பட்டிருக்கின்றேன்.

ஆனால், ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த பாராளுமன்றத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம். காரணம் தேர்தல் வரும் போதெல்லாம், எந்த கட்சியுடன் கூட்டணி, எத்தனை இடங்கள் தரப்போகிறார்கள் என்ற பேச்சு தான் மேலோங்கி நிற்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.

என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, சக்திவாய்ந்த நாட்டின் வளர்ச்சியையும், நாட்டு மக்களின் நன்மையையும், இந்தியர்களின் பெருமையை உலகறியச் செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்களின் திறமையான ஆட்சிக்கு, மீண்டும் அப்பழுக்கற்ற பெருந்தலைவர் அவர்களின் ஆட்சி அமைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்படக்கூடாது என்று சிந்தித்தேன்.

அதன் வாயிலாக 2026 – இல் தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைந்திட, நம் இலக்கையும், மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.

இந்த சிந்தனை என்னை உந்திக்கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றிச் செல்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடனும், பாரத பிரதமராக திரு.நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும், நம் மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும்,

என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்.

என் வளர்ச்சியிலும் இன்ப, துன்பங்களிலும் என்னுடன் பயணித்து, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும், சமத்துவ சொந்தங்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கும் நன்றி கூறி, இது என் முடிவல்ல, ஓர் வருங்கால எழுச்சியின் தொடக்கம் என்று அறிவித்து, மக்கள் பணியில் மேலும் என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.