பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. குபேரன் வழிபட்ட செல்வம் பெற்ற நிதீஸ்வரர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. குபேரன் வழிபட்ட செல்வம் பெற்ற நிதீஸ்வரர்..!

பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. குபேரன் வழிபட்ட செல்வம் பெற்ற நிதீஸ்வரர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 05, 2024 06:00 AM IST

Nidheeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் எனவும் தாயார் கனக திரிபுரசுந்தரி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. குபேரன் வழிபட்ட செல்வம் பெற்ற நிதீஸ்வரர்..!
பொய் கூறிய பிரம்மதேவர்.. சாபமிட்ட சிவபெருமான்.. குபேரன் வழிபட்ட செல்வம் பெற்ற நிதீஸ்வரர்..!

தனக்கென இன்று வரை உருவமில்லாமல் உலகம் முழுவதும் லிங்க திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். சிவபெருமானை வழிபட்டால் அனைத்து கஷ்டங்களும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. ஆதிகால கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பல்வேறு விதமான வானுயர்ந்த கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அந்த கோயில்களில் தங்களது கலைநயத்தையும் வெளிப்படுத்திச் சென்றுள்ளனர். அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை தங்கள் வாழ்நாளை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழக்கூடிய பக்தர்கள் எத்தனையோ பேர் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானின் கோயில்கள் அமைந்திருப்பது மிகப்பெரிய விசேஷமாக கருதப்படுகிறது. பல வானுயர்ந்த கோயில்கள் இன்று வரை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் இந்த கோயில்கள் எப்படி கட்டி இருக்கக்கூடும் என பல ஆராய்ச்சியாளர்கள் சில கோயில்களை வியந்து பார்க்கின்றனர்.

மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை வரலாற்றின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற கோயில்கள் எத்தனையோ பல கல்வெட்டுகளை சுமந்து கொண்டு வரலாறுகளோடு தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றன. சில கோவில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூர் அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் நிதீஸ்வரர் எனவும் தாயார் கனக திரிபுரசுந்தரி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

ராஜராஜ சோழன் எத்தனையோ கோயில்களை கட்டி வழிபாடு நடத்தியுள்ளார். பல கோயில்களுக்கு பல நன்கொடைகளையும் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட ராஜராஜ சோழன் வியந்து வழிபட்ட கோயிலாக இந்த நிதீஸ்வரர் திருக்கோயில் விளங்கி வருகிறது. ராஜராஜ சோழன் தனது 23 வது ஆட்சி ஆண்டில் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாக கூறப்படுகிறது.

ஆராய்ச்சி செய்து கிடைக்கப்பெற்ற கல்வெட்டின் படி பார்த்தால் இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோழர்கள் மட்டுமல்லாது பல்லவர்களும் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாக இந்த கோயிலில் இருக்கக்கூடிய பல்லவகால சிற்பங்கள் உணர்த்துகின்றன.

தல வரலாறு

படைப்பின் கடவுளாக திகழ்ந்துவரும் பிரம்மதேவர் வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. பிரம்மதேவர் மற்றும் விஷ்ணு பகவானுக்கு யார் பெரியவர் என்ற போட்டியெழுந்தது. இதற்கு தீர்வு காண்பதற்காக சிவபெருமானிடம் இருவரும் சென்றனர். அப்போது சிவபெருமான் தனது சுய ரூபத்தில் காட்டி எனது அடி மற்றும் முடி இதனை யார் பார்த்து வருகிறார்களோ அவர்களை பெரியவர் என கூறினார்.

உடனே விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் அடியை காண்பதற்காக கீழ்புறம் நோக்கி சென்றார். இருப்பினும் அவரது அடியை காண முடியாத தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு பகவான் சிவபெருமானிடம் சரணடைந்தார்.

பிரம்மதேவர் அண்ணமாய் பறந்து சிவபெருமானின் முடியை கண்டதாக அவரிடம் பொய் கூறினார். பொய் கூறிய காரணத்தினால் சிவபெருமான் பிரம்மதேவரை அன்னப்பறவையாக மாறுவாயாக என சாபமிட்டார். சாபமடைந்த பிரம்ம தேவர் தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தை அடைந்து அங்கே தீர்த்தம் உருவாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டார். அதன் பின்னர் சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து சாபத்தை நீக்கினார். அன்னப்பறவையாக சாபம் பெற்று பிரம்மதேவர் இங்கு வந்த காரணத்தினால் இந்த இடம் அன்னம்புத்தூர் என்று பெயர் பெற்றது.

நிதிச் செல்வங்களின் தலைவனாக விளங்கக்கூடிய குபேரன் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை வழிபட்டு குறையாத செல்வங்களை பெற்ற காரணத்தினால் இவருக்கு நிதீஸ்வரர் என்று திருநாமம் வழங்கப்பட்டது.

Whats_app_banner