Paleeswarar Temple: ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்!
1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பார்வதி உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பார்வதி உடனுறை பாலீஸ்வரர் திருக்கோயில். ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோயில் எனக் கூறப்படுகின்றது.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயிலானது அமையப்பெற்றுள்ளது. காமதேனு பசு இங்குள்ள சிவனாருக்கு பால் சொரிந்து வழிபட்டதாகவும் சித்தர்கள் பலர் வழிபட்ட தலமாகவும் இது போற்றப்படுகிறது. இக்கோயிலில் மூலவராகவும், உற்சவராகவும் பாலீஸ்வரர் காட்சி தருகின்றார். அம்பாளாக பார்வதி அம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஈசான மூலிகை கால பைரவர் சன்னதியும், அக்னி மூலையில் சூரியனார் சன்னதியும், வாயு மூலையில் பாலசுப்ரமணியர் சன்னதியும் அமைந்துள்ளது. சித்தி கணபதி, நவகிரகங்கள், ஐயப்பன் உள்ளிட்டோரின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.
அமிர்த தீர்த்தமும், அக்னி தீர்த்தமும் இங்கு தனித்தனியாக காணப்படுகின்றன. இக்கோயிலில் முக்கிய திருவிழாக்களாக மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், பங்குனி உத்திர திருக்கல்யாணம், சித்திரை, விசு, பிரதோஷம், நவராத்திரியில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
சனி பரிகார தலமாகவும் இக்கோயில் அமைந்துள்ளது. திருமண கோலத்தில் சிவனும், பார்வதியும் காட்சி தருவதால் இக்கோயிலில் திருமண தடை உள்ளவர்கள் வேண்டினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பதும், இங்குள்ள பார்வதி அம்மனை வழிபடுவோருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.