தலையை துண்டாக்கிய விஷ்ணு பகவான்.. தனித்தனியாக பிரிந்த ராகு கேது.. பதவி கொடுத்த கைலாசநாதர்..!
Kailasanathar:
Kailasanathar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு உலகம் முழுவதும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து சிவபெருமானுக்காக வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்ட வந்தாலும் தங்களது கலைநயம் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். சிவபெருமான் மீது கொண்ட பக்தியை போட்டி போட்டுக் கொண்டு அனைத்து மன்னர்களும் வெளிப்படுத்தி உள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து கம்பீரமாக காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் கைலாசநாதர் மேற்கு நோக்கி காட்சி கொடுத்தார். மேலும் தட்சிண, உத்திர சுயம்புலிங்கங்கள் இந்த கோயிலில் அமைந்துள்ளது. அது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ராகு மற்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோஷ நிவர்த்தி கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்தும் நீந்தும் என நம்பப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமானை ராகு மற்றும் கேது இருவரும் சேர்ந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இங்கு வழிபட்டால் ராகு தோஷம் மற்றும் கேது தோஷம் அனைத்தும் மீண்டும் என்பது ஐதீகமாகும்.
தல வரலாறு
பாற்கடலை தேவர்கள் மற்றும் அசுரர்கள் சேர்ந்து கடைந்தெடுத்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு அதிலிருந்து அமிர்தம் கிடைத்தது. அதனை சாப்பிட்டால் சாகா வரம் கிடைக்குமாம். விஷ்ணு பகவான் மோகினியாக உருவெடுத்து தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வந்துள்ளார்.
அப்போது அசுரர்கள் மற்றும் தேவர்கள் ஆளுக்கு ஒரு புறமாக வரிசையாக அமர்ந்திருந்தனர். அப்போது அமிர்தத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாக ஸ்வர்பானு என்று அசுரன் தனது உருவத்தை தேவர்கள் போல் மாற்றிக்கொண்டு சூரியன் மற்றும் சந்திரன் இவர்களுக்கு இடையில் அமர்ந்து கொண்டார். அப்போது விஷ்ணு பகவான் அமிர்தத்தை கொடுத்து விட்டார். தேவர்கள் வேடத்தில் இருந்த அசுரனும் அதனை குடித்துவிட்டார்.
இதனை அறிந்த விஷ்ணு பகவான் உடனே அந்த அசுரனின் தலையை வெட்டிவிட்டார். உடனே அசுரன் தலை வேறு மற்றும் உடல் வேறாக பிரிந்துவிட்டார். அமிர்தம் சாப்பிட்ட காரணத்தினால் அவருக்கு உயிரிழப்பு ஏற்படவில்லை. வெட்டப்பட்ட தலைப்பு கீழே பாம்பு போன்ற அமைப்பு கொண்ட உடல் கிடைத்தது. அதற்குப் பிறகு அவருடைய உடலுக்கு ஐந்து தலை பாம்பு முகம் கிடைத்தது.
அதன் பின்னர் மேல் பகுதி ராகு எனவும் கீழ்ப்பகுதி கேது எனவும் பெயர் பெற்றனர். அதன் பின்னர் ராகு மற்றும் கேது இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய சுயம்பு மூர்த்தியான கைலாசநாதர் வழிபாடு செய்தனர். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபட்டனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ராகு மற்றும் கேது இருவருக்கும் மன்னிப்பு கொடுத்து நவகிரகங்களில் இருக்கும்படி பதவியையும் கொடுத்து அருளினார்.