தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Special : ‘இடி தாங்கியான தூத்துக்குடி பனிமய மாதா’ – 400 ஆண்டுகள் கடந்த பேராலய வரலாறு!

HT Temple Special : ‘இடி தாங்கியான தூத்துக்குடி பனிமய மாதா’ – 400 ஆண்டுகள் கடந்த பேராலய வரலாறு!

Priyadarshini R HT Tamil
Aug 10, 2023 11:30 AM IST

தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாடு என்பது, ஆண் தெய்வ வழிபாட்டைவிட அதிகம் செய்யப்படுவது ஆகும். பெண் தெய்ங்களுக்கு தமிழர்கள் வழிபாட்டில் முக்கியத்துவமும் உண்டு, பெண் தெய்வங்கள் குறிப்பாக எல்லைக்காவல் தெய்வங்களாகவும் கொண்டாடுவது தமிழர் மரபில் உள்ளது. கிராம தேவதைகள் வழிபாடும் தமிழர் மரபில் ஊன்றிப்போன ஒன்று.

தூத்துக்குடி பனிமய மாதா கோயில்
தூத்துக்குடி பனிமய மாதா கோயில்

இப்பேராலயத்தில் உள்ள தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த நிகழ்வு குறித்து தெரிந்துகொள்ளலாம்.

அற்புத மாதாவின் சொரூபம் ஒன்று மரப்பேழையில் வைக்கப்பட்டு காலே தீவில் இருந்து சாந்தலேனா என்ற கப்பல் மூலம் 1555ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது.

கி.பி. 1582ம் ஆண்டு இயேசு சபை குருக்கள் ஒரு சிறிய ஆலயம் கட்டி அந்த ஆலயத்தில் அன்னையின் இந்த சொரூபத்தை வைத்தனர். பின்னாளில், தூத்துக்குடியில் பங்குத்தந்தையாக இருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த விஜிலியுஸ் மான்சி இந்த சொரூபத்தை தென்னங்கீற்றுகளாலும், மண் சுவர்களாலும் ஆன இல்லத்தில் வைத்திருந்தார்.

1707-ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திடீரென நள்ளிரவில் இடி- மின்னலோடு பெரும் காற்று வீசியது. அந்த நேரம், அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி மாதா சொரூபம் முன் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர மின்னல் ஒன்று கூரையை பிய்த்துக் கொண்டு அன்னையின் சொரூபத்தின் மேல் தாக்கியது.

ஆனால் அதிசயம், அன்னையின் சொரூபத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாதாவின் மகிமையால் அருட்தந்தை மான்சியும் உயிர் பிழைத்தார். இதன் காரணமாக பனிமய மாதாவை இடி தாங்கிய அன்னை என்று மக்கள் அழைத்தனர்.

அன்னையின் இந்த அற்புதத்தை உலகுக்கு உணர்த்த விரும்பிய அருட்தந்தை விஜிலியுஸ் மான்சி, மின்னல் தாக்கிய கூரையின் நேர் எதிரிலேயே முற்றிலும் கற்களால் ஆன ஆலயத்தை பல இன்னல்களுக்கு இடையே கட்ட ஆரம்பித்தார். 1712 ஏப்ரல் 4ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1713ம் ஆண்டு

ஆகஸ்ட் 5ம் தேதி இந்த ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திறக்கப்பட்டது. ஆண்டு பெருவிழா நடைபெறும் 11 நாட்களும் தூத்துக்குடி நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கும். தூய பனிமய அன்னையின் திருவிழா ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து ஒரு சமய நல்லிணக்க விழாவாகவே இன்றும் கொண்டாடப்படுகிறது.

அன்னை மரியாளுக்கு உலகிலேயே முதன் முறையாக ரோமில் உள்ள எஸ்கலின் என்ற குன்றின் மீது கி.பி. 352ல் ஆலயம் அமைக்கப்பட்டது. அப்போது போப்பாக இருந்த அருட்தந்தை லிபேரியுஸ் மற்றும் அருளப்பர் என்ற பெரும் செல்வந்தர் ஆகியோருக்கு அன்னை மரியாள் காட்சி தந்து பனி பெய்யவே முடியாத கோடைக் காலத்தில் பனி பெய்யச் செய்து தனக்கு ஆலயம் அமைக்க வேண்டிய இடத்தை அருளினார்.

அதன் பின்னர், உலகின் பல பகுதிகளில் பனிமய மாதா சொரூபத்தை கொண்டு பல ஆலயங்கள் கட்டப்பட்டன. அதேபோன்ற ஒரு சொரூபம் தான் தூத்துக்குடிக்கும் வந்து சேர்ந்தது.

மேலும், எஸ்கலின் குன்றின் மீது அமைக்கப்பட்ட அன்னையின் ஆலயமும், தூத்துக்குடியில் உள்ள இந்த ஆலயமும் ஆகஸ்ட் 5ம் தேதி அர்ச்சிக்கப்பட்டது. அதனால்தான் இந்த ஆலயம் தூய பனிமய மாதா ஆலயம் என்று அழைக்கப்பட்டது. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய அன்னையின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

பல்வேறு காலக்கட்டங்களில் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலயம் கடந்த 1982ம் ஆண்டு பேராலயம் (பசிலிக்கா) என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆலயத்தின் சிறப்புகளாக, இயேசு கிறிஸ்து மரித்த திருச்சிலுவை மரத்தின் ஒரு சிறு துண்டு மற்றும் அன்னை மரியாளின் திருத்தலை முடி போன்றவை இந்த பேராலயத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்